’புதுவை உள்ளாட்சித் தேர்தலில் காங்-திமுக இடையே ஒருமித்த கருத்து ஏற்படவில்லை’- நாராயணசாமி
’’கூட்டணி கட்சிகளுக்கு இடையே இடப்பங்கீடு குறித்து ஒருமித்த கருத்து ஏற்படவில்லை; புதுச்சேரியை பொறுத்தவரை முதன்மையான கட்சி காங்கிரஸ் கட்சிதான்’’
புதுச்சேரியில் வரும் அக்டோபர் 21, 25, 28 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் கட்சிகளுக்கிடையே கூட்டணி குறித்த இடப்பங்கீட்டு பேச்சுவார்த்தை தொடந்து நடந்து வருகிறது. புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சி உள்ளாட்சித் தேர்தலுக்கு தயாராவது குறித்து நடந்த கருத்து கேட்பு கூட்டத்தில், காங்கிரஸ் கட்சியில் தரவு பகுப்பாய்வாளர் பிரிவு தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி, பஞ்சாயத்து ராஜ் தலைவர் மீனாட்சி நடராஜன், கரூர் எம்.பி. ஜோதிமணி ஆகியோர் கலந்து கொண்டு நிர்வாகிகளிடம் கருத்துக்களை கேட்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய முன்னாள் முதல்வர் நாராயணசாமி, உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக நாம் பல கட்ட ஆலோசனை நடத்தியுள்ளோம். காங்கிரஸ் கட்சியில் கூட்டணி வேண்டும் என்றும், வேண்டாம் என்றும் மாறுபட்ட கருத்துகள் உள்ளன. இதில் ஒருமித்த கருத்து ஏதும் ஏற்படவில்லை. மதச்சார்பற்ற கூட்டணியில் காங்கிரஸ் கட்சி தான் முதன்மையான கட்சி. தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலும், புதுவையில் காங்கிரஸ் தலைமையிலும் தான் கூட்டணி. இந்த கூட்டணி சார்பில் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளது. கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்ரமணியன், வைத்திலிங்கம் எம்.பி., சட்டமன்ற கட்சி தலைவர் வைத்தியநாதன் ஆகியோர் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாட்டை தெரிவித்துள்ளனர்.
உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக தற்போது உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மலைவாழ் மக்கள் 10 பேர் வாழும் இடத்தில் அவர்களுக்கு என்று வார்டு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் நாம் ஒற்றுமையாக பாடுபட வேண்டும். காங்கிரஸ் கட்சி தான் புதுச்சேரியில் முதன்மையான கட்சி. இந்த தேர்தலுக்கு நாம் நம்மை தயார் செய்துகொள்ள வேண்டும். நமக்கு நல்ல அனுபவத்தை சட்டமன்ற தேர்தல் தந்துள்ளது. இத்தகைய காலகட்டத்தில் நாம் வேறுபாடுகளை தவிர்ப்போம். இந்த தேர்தலில் நமது வெற்றிக்கு நல்ல வாய்ப்பு உள்ளது. கடந்த காலத்தைப்பற்றி பேசி நேரத்தை வீணாக்க வேண்டாம் என நாராயணசாமி பேசினார்.
தரவு பகுப்பாய்வாளர் பிரிவு தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி பேசும்போது, தேர்தலில் வெற்றி, தோல்வி வரும் போகும். அதற்காக தோல்விகளை கண்டு நாம் படுத்துவிடக்கூடாது. உள்ளாட்சி தேர்தல் மூலம் நாம் கட்சியை வளர்க்கலாம் என்று குறிப்பிட்டார். இந்த ஆலோசனை கூட்டத்தில் வைத்திலிங்கம் எம்.பி., வைத்தியநாதன் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் கந்தசாமி, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் நீல.கங்காதரன், அனந்தராமன், மூத்த துணைத்தலைவர் தேவதாஸ், நிர்வாகிகள் சுவாமிநாதன், மருதுபாண்டியன், தனுசு, இளையராஜா உள்பட பலர் கலந்துகொண்டனர்.
காங்கிரஸ், தி.மு.க. மற்றும் பிற கட்சிகளுக்கு இடையே பலகட்ட பேச்சுவார்த்தைகள் நடந்து வரும் நிலையில் 6 எம்.எல்.ஏ.க்களை கொண்ட தி.மு.க. அதிக இடங்களில் போட்டியிட விரும்புகிறது. இதற்காக கூடுதல் இடங்களை கேட்டு வற்புறுத்தி வருகிறது. ஆனால் புதுச்சேரியில் முதன்மையான கட்சி காங்கிரஸ் தான், காங்கிரஸ் தலைமையில் தான் கூட்டணி என்று நாராயணசாமி பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.