லட்சத்தீவு எம்பி ஃபைசல் தகுதிநீக்கம் ரத்து.. ராகுல்காந்திக்கு வழிகாட்டுகிறதா கேரள உயர்நீதிமன்ற தீர்ப்பு?
கேரள உயர்நீதிமன்றத்தின் உத்தரவையடுத்து, லட்சத்தீவு எம்பி ஃபைசலின் தகுதிநீக்கத்தை திரும்ப பெற்றார் மக்களவை செயலர்.
கேரள உயர்நீதிமன்றத்தின் உத்தரவையடுத்து, லட்சத்தீவு எம்பி ஃபைசலின் தகுதிநீக்கத்தை திரும்ப பெற்றார் மக்களவை செயலர்.
தேசியவாத காங்கிரஸ் கட்சி சார்பில் லட்சத்தீவு மக்களவை தொகுதியிலிருந்து நாடாளுமன்றத்திற்கு தேர்ந்து எடுக்கப்பட்டவர் முகமது ஃபைசல். கடந்த 2009-ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தல் பரப்புரையின் போது இவருக்கும், அந்த தொகுதியின் முன்னாள் எம்.பி., முகமது சலே என்பவருக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது முகமது ஃபைசல் மற்றும் அவரது ஆதரவாளர்கள் முகமது சலேவை கடுமையாக தாக்கியதாக கூறப்பட்டது. இதையடுத்து முகமது ஃபைசல் உள்ளிட்டோர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் முகமது ஃபைசல் குற்றவாளி என அறிவித்து 10 ஆண்டுகள் சிறை தண்டனை வித்தித்தது லட்சத்தீவு நீதிமன்றம். இந்த தீர்ப்பை எதிர்த்து அவர் கேரள நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். கடந்த ஜனவரி 25ஆம் தேதி வழக்கை விசாரித்த நிதிமன்றம் தண்டனைக்கு தடை விதித்தது. இதனால் அவர் எம்பி பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டது செல்லாது என தெரிய வந்தது.
இந்நிலையில், கேரள உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவையடுத்து, லட்சத்தீவு எம்பி முகமது ஃபைசலின் தகுதிநீக்கத்தை திரும்ப பெற்றார் மக்களவை செயலர்.
இந்த தீர்ப்பு மக்களவையில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட ராகுல் காந்திக்கு, நம்பிக்கை அளிக்கும் விதமாக உள்ளது என கூறப்படுகிறது.
2019 மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில் மோடி என்ற குடும்ப பெயர் பற்றி அவதூறு பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் ராகுல் காந்தி குற்றவாளி என அறிவித்து 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பின்னர் அவருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதோடு தனக்கு எதிரான தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்து அதற்கு தடை பெற ராகுல் காந்திக்கு ஒரு மாதம் மட்டுமே கால அவகாசம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. கர்நாடகாவின் கோலாரில் நடந்த பிரசாரத்தில் சர்ச்சையாக பேசிய புகாரில் ராகுலுக்கு எதிராக சூரத்தில் வழக்கு தொடரப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டது.
இந்த தீர்ப்புக்கு பதிலடி கொடுக்கும் வகையில், இந்த வழக்கை சட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் போராடுவோம் என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது இல்லத்தில் மூத்த தலைவர்கள் மற்றும் எம்பிக்களுடன் ஆலோசனை நடத்தினார்.
இதனை தொடர்ந்து ராகுல் காந்தி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய திட்டமிட்டுள்ளார். இந்த வழக்கு விசாரணைக்கு வரும்போது ராகுல் காந்திக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கப்பட்டால் அவரது தகுதி நீக்கம் ரத்து செய்யப்படும். லடசத்தீவு எம்.பி. முகமது ஃபைசலின் வழக்கிற்கு வழங்கப்பட்ட தீர்ப்பு ராகுல் காந்திக்கு சாதகமாக இருக்கும் என நம்பப்படுகிறது. ராகுல் காந்திக்கு சாதகமாக உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டாலும் மக்களவை செயலகம் தரப்பில் தகுதி நீக்கம் ரத்து செய்யப்பட்டு அதனை திரும்ப பெற வேண்டும். அப்படி ராகுல் காந்தியின் தகுதி நீக்கம் திரும்ப பெறப்பட்டால் அவர் மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினராக அவையில் பங்கேற்கலாம்.