I.N.D.I.A Alliance: டெல்லியில் I.N.D.I.A கூட்டணியின் ஒருங்கிணைப்பு குழு கூட்டம்.. எடுக்கப்போகும் முக்கிய முடிவுகள் என்ன?
வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராக வியூகங்களை தீட்ட இன்று மாலை டெல்லியில் I.N.D.I.A கூட்டணியின் ஒருங்கிணைப்பு குழு கூடுகிறது.
2014-ஆம் ஆண்டு, 2019-ஆம் ஆண்டு என நடைபெற்ற மக்களவை தேர்தலில் 2 முறை வெற்றி பெற்ற பாஜக 9 ஆண்டுகளாக ஆட்சி நடத்தி வருகிறது. பிரதமராக மோடி பதவியேற்றதில் இருந்து பல்வேறு மாநிலங்களில் ஆட்சியை கைப்பற்றி பா.ஜ.க. அசுர பலத்தில் உள்ளது. இச்சூழலில், இன்னும் சில மாதங்களில் மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. அடுத்த ஆண்டு நடைபெறும் தேர்தலில் பா.ஜ.க தனது வெற்றியை எப்படியாவது தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக தீவிர முயற்சிகளில் இறங்கியுள்ளது. அதே சமயம் பாரதிய ஜனதா கட்சியை தோற்கடிக்க எதிர்கட்சிகள் ஒன்றாக இணைந்து களம் இறங்கியுள்ளனர்.
முதல் முறையாக ஜூன் மாதம் பாட்னாவில் இந்த கூட்டம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து இரண்டாவது கூட்டம் பெங்களூருவில் நடைபெற்றது. அப்போது எதிர் கட்சிகளின் கூட்டத்திற்கு I.N.D.I.A (இந்திய தேசிய ஜனநாயக ஒருங்கிணைந்த கூட்டணி ) எனப் பெயர் சூட்டப்பட்டது. பின் மூன்றாவது கூட்டம் ஆகஸ்ட் மாதம் 31ஆம் தேதி நடத்தப்பட்டது. மும்பையில் நடந்த கூட்டத்தில் சின்னம், தொகுதி பங்கீடு, பிரச்சார வியூகம் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும், காந்தி ஜெயந்தியை முன்னிட்டு வரும் அக்டோபர் 2ஆம் தேதி, நாடு தழுவிய அளவில் பல்வேறு விதமான நிகழ்ச்சிகளை நடத்த I.N.D.I.A கூட்டணி முடிவெடுத்துள்ளது.
மும்பையில் நடைபெற்ற கூட்டத்தை தொடர்ந்து பேசிய பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், ”பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையால் திணறி போயுள்ளது. இதனால், காரணம் சொல்லாமலேயே இந்த மாத இறுதியில் நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தை மத்திய அரசு கூட்டியுள்ளது.
இதனால்தான், சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய மத்திய அரசுக்கு நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது. இந்திய கூட்டணியின் உள்ள எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை கண்டு, பா.ஜ.,வினருக்கு பீதியை ஏற்படுத்தி உள்ளது" என்றார்.
இந்த கூட்டணியில் 14 பேர் கொண்ட ஒருங்கிணைப்பு குழு ஒன்று அமைக்கப்பட்டது. I.N.D.I.A கூட்டணியின் ஒருங்கிணைப்பு குழு இன்று டெல்லியில் கூடுகிறது. இன்று மாலை டெல்லியில் தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார் இல்லத்தில் நடைபெற உள்ளது. இன்று கூடும் இந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
மக்களவைத் தொகுதிகளில் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர்களுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளர் நிறுத்தப்படுவதை உறுதிசெய்ய கட்சி தலைவர்கள் தொகுதி பங்கீடு திட்டத்தை விரைவில் உருவாக்க திட்டமிடப்படும் என கூறப்படுகிறது. இன்று நடைபெறும் கூட்டம் தொடர்பாக ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தின் உறுப்பினரும் ஆம் ஆத்மி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான ராகவ் சத்த, “ கூட்டத்தில் மக்களை சந்திப்பது, கூட்டணி தலைவர்களை ஒருங்கிணைத்து பொதுக்கூட்டங்கள் நடத்துவது, அனைத்து மாநிலத்திலும் வித்தியசமாக மேற்கொள்ளப்படும் பிரச்சாரங்களை வீடு வீடாக எடுத்துச் செல்வது போன்றவை குறித்து விவாதிக்கப்படும்” என குறிப்பிட்டுள்ளார்.
Sanatana Dharma: “வாக்கு வங்கிக்காக இப்படியா செய்வது?” - சோனியா காந்தி மவுனத்தை சாடும் பாஜக