புதுச்சேரி : அரசு விழாக்களில் அரசியல் சாயம் பூசுகிறது பாஜக - முன்னாள் முதல்வர் நாராயணசாமி
புதுச்சேரியில் அரசு விழாக்களில் அரசியல் சாயம் பூசுகிறது பாஜக என கடுகடுக்கிறார் முன்னாள் முதல்வர் நாராயணசாமி

புதுச்சேரி மாநிலம் முழுவதும் சுகாதாரத்துறை சார்பில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. அதேபோல லாஸ்பேட்டையில் குறிஞ்சிநகர், ஜீவானந்தபுரம் ஆகிய பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக தடுப்பூசி முகாம் நடந்தது. அந்த இடங்களில் பா.ஜக.வினர் தங்கள் பேனர்களை வைத்ததுடன், கட்சிக் கொடிகளையும் பறக்க விட்டனர். அதுமட்டுமல்லாமல் அந்த முகாம்களை பா.ஜ.கவின் மாநில தலைவர் சாமிநாதன் தொடங்கி வைத்தார். இந்நிலையில் செல்லப்பெருமாள்பேட்டையில் ஊத்துக்காட்டு மாரியம்மன் கோவில் வளாகத்தில் தடுப்பூசி முகாம் அமைக்கப்பட்டிருந்தது. அங்கும் பா.ஜ.கவினர் அவர்களது கட்சி கொடிகளை கட்டி பேனர்களையும் வைத்திருந்தனர். அப்போது, 'இது அரசு நடத்தும் தடுப்பூசி முகாம். இங்கு ஏன் உங்கள் கட்சிக் கொடிகளை வைக்கிறீர்கள்?’ என்று எதிர்ப்பு தெரிவித்தனர் பணியில் இருந்த சுகாதாரத்துறை ஊழியர்கள். அதனால் சுகாதாரத்துறை ஊழியர்களிடமும், பணியில் இருந்த மருத்துவரிடமும் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் பா.ஜ.க நிர்வாகிகள்.

தகவலறிந்து தனது ஆதரவாளர்களுடன் தடுப்பூசி முகாம் நடைபெறும் இடத்திற்கு சென்றார் லாஸ்பேட்டை தொகுதியின் காங்கிரஸ் எம்.எல்.ஏ வைத்தியநாதன். அதையடுத்து அங்கிருந்த பா.ஜ.க நிர்வாகிகள் கலைந்து சென்றனர். ஆனாலும் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பதற்றம் நீடித்தது. தொடர்ந்து தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்த எம்.எல்.ஏ வைத்தியநாதன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “ஏற்கெனவே குறிஞ்சிநகர், ஜீவானந்தபுரம் பகுதிகளில் தடுப்பூசி முகாம்களை பா.ஜ.கவினர் நடத்துவது போல கட்சிக்கொடி, பேனர்களை வைத்திருந்தனர்.

தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த ஒரு கட்சியின் தலைவர் முகாமை தொடங்கி வைக்கிறார். இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளேன். பா.ஜ.க வெற்றி பெற்றிருக்கும் ஆறு தொகுதிகளில் நடக்கும் அரசு விழாக்களை காங்கிரஸ் மற்றும் தி.மு.கவினர் முகாம்களை தொடங்கி வைக்கலாமா? அரசு விழாவை தாங்கள் நடத்தும் விழாபோல காட்டிக்கொண்டு சொந்தம் கொண்டாடுகின்றனர்.

இது தொடர்பாக சபாநாயகரிடம் உரிமை மீறல் புகாரை தெரிவிக்க இருக்கிறேன்” என்றார். மேலும் முன்னாள் முதல்வர் நாராயணசாமி அவர் ABP நாடுக்கு அளித்த சிறப்பு நேர்காணலில் அவர் கூறியது, ”புதுச்சேரியில் கொரோனாவின் தாக்கத்தை கடந்த ஆட்சியில் கட்டுக்குள் வைத்து போர்க்கால அடிப்படையில் அதிகாரிகளை முடுக்கிவிட்டு நடவடிக்கை மேற்கொண்டதாக முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார், ஆனால் தற்பொழுது உள்ள என்.ஆர் காங்கிரஸ் கூட்டணியானது பதவிக்காக பேரம் பேசிக்கொண்டு நாற்காலி சண்டைபோட்டு வருகின்றனர். இவர்களின் நாற்காலி சண்டை கிடையில் பொதுமக்களின் வாழ்வாதாரம் முற்றிலுமாக கேள்விக்குறியாக இருப்பதாகவும், கொரோனாவின் இரண்டாவது அலை மிகவும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது, புதுச்சேரியில் தற்போது தடுப்பூசி திருவிழா எனும் பெயரில் சுகாதாரத்துறை சார்பில் நடைபெற்று வருகிறது இதில் பாஜக மாநிலத் தலைவர் சாமிநாதன் அவர்கள் அரசு விழாக்களில் அரசியல் சாயம் பூசுவது அநாகரிகமான அரசியலாகும்” என கூறினார்.





















