சரிந்த சுரங்கப்பாதை.. சிக்கி தவிக்கும் தொழிலாளர்கள்.. ஸ்ரீசைலம் அணைக்குப் பின்னால் திக் திக்!
ஸ்ரீசைலம் அணைக்குப் பின்னால் உள்ள சுரங்கப்பாதையின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் 6 தொழிலாளர்கள் சிக்கி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

தெலங்கானாவில் புதிதாக கட்டப்பட்டு வரும் சுரங்கப்பாதையின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் 6 தொழிலாளர்கள் சிக்கி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. சுரங்கப்பாதையின் கட்டுமான பணிகளில் ஈடுபட்டு வரும் கட்டுமான நிறுவனம், கூடுதல் விவரங்களுக்கு ஆய்வு குழுவை உள்ளே அனுப்பியுள்ளது.
சரிந்து விழுந்த சுரங்கப்பாதை:
ஸ்ரீசைலம் அணைக்குப் பின்னால் உள்ள சுரங்கப்பாதையின் ஒரு பகுதியில், சில தொழிலாளர்கள் கசிவை சரிசெய்ய உள்ளே சென்றபோது, இடிந்து விழுந்தது. அவர்களில் மூன்று பேர் தப்பித்துவிட்டனர். ஆனால், குறைந்தது ஆறு பேர் உள்ளே சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. மேலும் அவர்களை பாதுகாப்பாக வெளியே கொண்டு வர மீட்புப் பணி தொடங்கியுள்ளது.
இந்த சுரங்கப்பாதை நாகர்கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீசைலம் இடது கரை கால்வாயின் (SLBC) கட்டுமானத்தில் உள்ள அம்ராபாத்தில் அமைந்துள்ளது. விபத்து குறித்து வெளியான அதிகாரப்பூர்வ அறிக்கையில், "இன்று, டோமலபெண்டா அருகே ஸ்ரீசைலம் அணைக்குப் பின்னால் உள்ள ஸ்ரீசைலம் இடது கரை கால்வாய் சுரங்கப்பாதையின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது.
சிக்கி தவிக்கும் தொழிலாளர்களின் நிலை என்ன?
இடது பக்க சுரங்கப்பாதையின் கூரை மூன்று மீட்டர் வரை இடிந்து விழுந்தது. ஊழியர்கள் அந்த இடத்தில் தங்கள் பணிகளைச் செய்து கொண்டிருந்தபோது இது நடந்துள்ளது. நான்கு நாட்களுக்கு முன்புதான் சுரங்கப்பாதை மீண்டும் திறக்கப்பட்டது" என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி அதிர்ச்சி தெரிவித்துள்ளார். சுரங்கப்பாதை இடிந்து விழுந்ததில் பலர் காயமடைந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஆனால், எத்தனை பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது என்பது குறித்த சரியான புள்ளிவிவரங்களை அவர் பகிர்ந்து கொள்ளவில்லை.
இதுகுறித்து அவர் கூறுகையில், "சுரங்கப்பாதை இடிந்து விழுந்து பலர் காயமடைந்ததாக தகவல் கிடைத்துள்ளது. அதிகாரிகளுக்கு முதலமைச்சர் உடனடியாக தகவல் தெரிவித்திருக்கிறார். மாவட்ட ஆட்சியர், எஸ்பி, தீயணைப்புத் துறை, ஹைட்ராலிக் மற்றும் நீர்ப்பாசனத் துறை அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட்டார்.
நீர்ப்பாசன அமைச்சர் என். உத்தம் குமார் மற்றும் அவரது துறையைச் சேர்ந்த பிற அதிகாரிகள் சிறப்பு ஹெலிகாப்டரில் விபத்து நடந்த இடத்திற்கு புறப்பட்டனர்.
சுரங்கப்பாதை விபத்துக்கான காரணங்கள் குறித்து மத்திய நிலக்கரி அமைச்சர் ஜி கிஷன் ரெட்டியும் விசாரித்து, சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படும் நபர்களை பாதுகாப்பாக வெளியே கொண்டு வருமாறு அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டார்.