குரூப் பட பாணியில் கொலை; 7 கோடி ரூபாய் இன்சூரன்ஸ் பணத்தை சுருட்ட முயற்சி - அரசு அதிகாரி சிக்கியது எப்படி?
தெலங்கானாவில் ரூபாய் 7 கோடி இன்சூரன்ஸ் பணத்திற்காக அப்பாவி ஒருவரை கொலை செய்து நாடகமாடிய அரசு அதிகாரியை மனைவியுடன் போலீசார் கைது செய்துள்ளனர்.
மலையாள நடிகர் துல்கர் சல்மான் நடித்த குரூப் திரைப்படத்தில் இன்சூரன்ஸ் பணத்திற்காக தன்னைத் தானே கொலை செய்து நாடகமாடுவது போல ஒரு காட்சி இருக்கும். தற்போது, அதே பாணியில் தெலுங்கானாவில் அரசு அதிகாரி ஒருவர் இன்சூரன்ஸ் பணத்திற்காக நாடகமாடியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஜனவரி 8-ந் தேதி தெலங்கானாவின் மேடக் மாவட்டத்தின் வெங்கடாபுரம் கிராமம் அருகே காரில் உடல் எரிந்த நிலையில் உடல் ஒன்று கண்டெக்கப்பட்டது. காரும், உடலும் முற்றிலும் எரிந்த நிலையில் இருந்தன. காரில் இருந்த ஐ.டி. கார்டு மற்றும் நபரின் அங்க அடையாளங்களை வைத்து உயிரிழந்தவர் ஹைதரபாத்தில் உள்ள தெலுங்கானா தலைமை செயலகத்தில் உதவி பிரிவு அதிகாரியாக பணியாற்றுபவர் என்று தெரியவந்தது.
7 கோடி ரூபாய் இன்சூரன்ஸ்
இருந்தாலும் போலீசார் இந்த வழக்கை சந்தேக மரணமாக வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தனர். போலீசார் விசாரணையில் அடுத்தடுத்து பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியானது. போலீசார் விசாரணையில் உயிரிழந்த அரசு அதிகாரிக்கு பங்குச்சந்தையில் முதலீடு செய்து ரூபாய் 85 லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டிருந்தது தெரியவந்தது. இதனால், அவருக்கு கடன் அளித்தவர்கள் யாரேனும் அவரை கொலை செய்திருக்கலாமா? என்ற சந்தேகத்தில் போலீசார் விசாரணை நடத்தினர்.
ஆனால், போலீசார் விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியானது. கடன் தொல்லையில் சிக்கித் தவித்து வந்த அரசு அதிகாரி கடந்த ஓராண்டில் மட்டும் ரூபாய் 7 கோடிக்கு அதிகமான மதிப்புள்ள காப்பீடு பாலிசிகள் 25-ஐ எடுத்து இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, விசாரணை கோணத்தை வேறு பாதையில் போலீசார் மாற்றினர். மேலும், எரிந்த நிலையில் கைப்பற்றப்பட்ட சடலம் உயிரிழந்ததாக நம்பப்படும் அரசு அதிகாரியின் சடலம் இல்லை என்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.
குரூப் பட பாணியில் கொலை:
இதனால், அரசு அதிகாரி உயிரோடு இருப்பதை கண்டுபிடித்த போலீசார் விசாரணையை துரிதப்படுத்தினர். போலீசார் விசாரணையில் கடன் தொல்லையால் தவித்து வந்த அரசு அதிகாரி தனது காப்பீடு மூலம் தனது கடனை சரி செய்து கொள்ளலாம் என்று திட்டமிட்டது தெரியவந்தது. அதற்காக அவரும், அவரது மனைவி மற்றும் அவருடைய நண்பர்கள் இருவர் என 4 பேர் சேர்ந்து சதித்திட்டம் தீட்டியுள்ளனர்.
அவர்களின் சதித்திட்டத்தின்படி கடந்த 8-ந் தேதி இரவு நிஜாமாபாத் ரயில் நிலையம் அருகே அந்த அரசு அதிகாரி போலவே இருந்த ஒரு நபரை நயவஞ்சகமாக பேசி அவரை தலையை மொட்டை அடிக்க வைத்துள்ளனர். பின்னர், அரசு அதிகாரியின் ஆடையை அவரை அணிய வைத்துள்ளனர். பின்னர், அவரை காரில் வெங்கடாபுரம் கிராமத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
மனைவியுடன் சிக்கிய அரசு அதிகாரி:
பின்னர், வெங்கடாபுரம் கிராமத்திற்கு ஒரு ஒதுக்குப்புறமாக அந்த நபரை காரில் அழைத்துச் சென்று காரின் உள்ளேயும், காரின் வெளியேயும் பெட்ரோலை ஊற்றியுள்ளனர். பின்னர், அந்த நபரை காரின் உள்ளே ஓட்டுநர் சீட்டில் உட்காரச் சொல்லியுள்ளனர். ஆனால், அவர் உட்கார மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால், இருவரும் ஏற்கனவே தாங்கள் தயாராக வைத்திருந்த கோடாரி மற்றும் கட்டையால் அந்த நபரை சரமாரியாக தாக்கி கொலை செய்தனர். பின்னர், காரை தீ வைத்து எரித்தனர்.
இவர்களின் இந்த நாடகத்தால் போலீசார் உள்பட பலரும் உயிரிழந்தது 44 வயதான அந்த அரசு அதிகாரி என்றே நம்பினர். இந்த சதித்திட்டத்தை தீட்டிய அரசு அதிகாரி, அவரது மனைவி மற்றும் உடந்தையாக இருந்த 2 பேர் என நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் தெலங்கானா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.