Liquor Policy Case: திகார் சிறையில் சிசோடியா.. அடுத்த கைது கவிதாவா? இன்று அமலாக்கத்துறையில் நேரில் ஆஜர்!
டெல்லி மதுபான கொள்கை ஊழல் தொடர்பாக அம்மாநில துணை முதலமைச்சராக இருந்த மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.
டெல்லி மதுபான கொள்கையில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், பாரத ராஷ்டிர சமிதி தலைவரும், தெலுங்கானா முதலமைச்சர் கே.சி.ஆரின் மகளுமான கவிதாவிடம் அமலாக்க இயக்குனரகம் இன்று விசாரணை நடத்த இருக்கிறது.
அமலாத்துறை அதிகாரிகளை நேற்று சந்திக்க இருந்த கவிதா, பெண்களுக்கு சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத்தில் 33 % இட ஒதுக்கீட்டை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று டெல்லியில் உண்ணா விரதத்தில் ஈடுபட்டார். இந்த போராட்டத்தை மேற்கோள் காட்டி அமலாக்கத்துறை அதிகாரிகளை சந்திக்க கவிதா நேற்று சந்திக்கவில்லை.
இந்தநிலையில், இன்று (மார்ச் 11ம் தேதி) கவிதா நேரில் சென்று ஆஜராக இருக்கிறார். இதையடுத்து, இன்றுமுழுவதும் அமலாக்கத்துறை கவிதாவை விசாரிக்க இருக்கிறது.
கைது செய்யப்பட்ட சிசோடியா:
முன்னதாக, டெல்லி மதுபான கொள்கை ஊழல் தொடர்பாக அம்மாநில துணை முதலமைச்சராக இருந்த மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த ஊழலில் தெலுங்கானா முதலமைச்சர் கே.சி.ஆரின் மகள் கவிதாவுக்கும் தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து கவிதாவை விசாரிக்க கடந்த 8ம் தேதி அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. அந்த சம்மனில் 9ம் தேதி கவிதா நேரில் ஆஜராக வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
சம்மனுக்கு பதில் கடிதம் எழுதிய கவிதா, தான் ஒரு பெண் என்பதால் தன்னை வீட்டிலேயே வைத்து விசாரிக்க சட்டத்தில் இடம் இருக்கிறது. எனவே, சட்டத்தின்படி தன்னை வீட்டில் வந்து விசாரிக்குமாறு தெரிவித்திருந்தார். இதை ஏற்க மறுத்த அமலாக்க இயக்குனரகம் நேரில் வந்து ஆஜராகும்படி தெரிவித்தது.
இதற்கு சம்மதம் தெரிவித்த கவிதா, மார்ச் 16ம் தேதி நேரில் வந்து ஆஜராவதாக் தெரிவித்தார். இதையும் அமலாக்கத்துறை ஏற்க மறுத்ததையடுத்து, மார்ச் 11ம் தேதி என முடிவானது. இதன் காரணமாக இன்று கவிதா விசாரணைக்காக நேரில் ஆஜராகிறார்.
மதுபானக் கொள்கை:
டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு பதவி ஏற்ற பிறகு, கடந்த 2021 ஆண்டு நவம்பரில் டெல்லி அரசு புதிய மதுபானக் கொள்கையை அறிமுகம் செய்தது. அதன்படி, டெல்லி பல மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, 800 க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்களுக்கு மதுபானம் விற்க உரிமம் வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தது. இதற்கு பல்வேறு தரப்பினரிடம் இருந்து எதிர்ப்புகள் கிளம்பியது.
கடந்த 2022 ஜூலையில் புதிய மதுபானக் கொள்கையை டெல்லி அரசு திரும்பப் பெற்றது. இதன் தொடர்ச்சியாக மதுபானக் கொள்கையை நடைமுறைப்படுத்தியதில் பெரும் முறைகேடு நடந்துள்ளதாக டெல்லி துணைநிலை ஆளுநர் வினய்குமார் சக்சேனா குற்றம்சாட்டினார். துணைநிலை ஆளுநரின் குற்றச்சாட்டை மேற்கோள் காட்டி அமலாக்கத்துறை, டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா உட்பட 15 பேர் மீது மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ), கடந்த மாதம் வழக்கு பதிவு செய்தது.