காலை 7 மணி முக்கியத் தலைப்புச் செய்திகள்
Tamil Nadu Morning Breaking News : நாட்டில் கொரோனா தொற்றால் குணமடைந்தோர் சதவீதம் 82.38 ஆக அதிகரித்துள்ளது
தமிழகம் மற்றும் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் நடைபெற்ற முக்கிய அரசியல் சமூக நிகழ்வுகளின் தொகுப்பை இங்கே காணலாம்.
1. தமிழக சட்டப்பேரவையின் எதிர்க்கட்சி தலைவராக அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். நேற்று நடைபெற்ற அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
2. 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எப்போது நடத்த வேண்டும் என்பது தொடர்பாக அனைத்து பள்ளி கல்வித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டதாகவும், மாணவர்களின் உடல் நலத்தை கவனத்தில் கொண்டு முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாகவும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் பொய்யாமொழி தெரிவித்தார்.
3. சென்னையில் 14 நாட்கள் ஊரடங்கு காலத்தில் மக்கள் அவசர உதவிக்கு காவல்துறையை அழைக்க புதிய உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதன்படி முழு ஊரடங்கு தொடர்பான சந்தேகங்கள், முதியவர்களுக்கான உதவி, தனியாக தங்கி இருக்கும் பெண்களுக்கு உதவி உள்ளிட்ட தேவைகளுக்கு சென்னை மக்கள் காவல்துறை உதவி மையங்களை அணுகலாம். இதற்காக 94981-81236, 94981-81239 என்ற இரண்டு புதிய எண்கள் அறிவிகப்பட்டுள்ளன. இந்த உதவி மையத்தை உதவி ஆணையர் தலைமையிலான குழு நடத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
4. அண்ணா பல்கலைக்கழகப் பருவத் தேர்வுகள் ஆன்லைன் தேர்வுகளாக மீண்டும் நடத்தப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.
5. கொரோனா பாதிப்பு அதிகமானால் எதிர்வரும் நாட்களில் 700 முதல் 800 டன் வரையில் ஆக்சிஜன் தேவைப்படும் என தமிழக அரசு தெரிவித்தது.
6. தவறு செய்யும் அமைச்சர்கள் யாராக இருந்தாலும் உடனடியாகப் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என முதல்வர் மு.க ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார். அவரது அறிவிப்பில், ‘பல எம்.எல்.ஏ.க்களாக இருக்கும் போது உங்களுக்கு அமைச்சராக வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. துறை சார்ந்த விபரங்களை முழுமையாக அறிந்து வைத்து நிர்வாகத்தை நடத்த வேண்டும். ஒவ்வொரு துறையிலும் நடைபெறும் பணி நியமனம் மற்றும் பணி மாறுதல்களை வெளிப்படையாக கையாண்டு மக்களிடம் நன்மதிப்பு பெற வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டது.
7. 12 வயதிலிருந்து கோவாக்சின் தடுப்பூசி போடலாம் என்று வரும் செய்திகள் வதந்தி என மத்திய அரசு கூறியுள்ளது. 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே கோவிட் தடுப்பூசி போட முடியும் என்றும் அரசு தெளிவுபடுத்தியது.
8. தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்றுக்கு சிகிச்சைப் பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 1,52, 389 ஆக அதிகரித்துள்ளது.
9. நாட்டில் கொரோனா தொற்றால் குணமடைந்தோர் சதவீதம் 82.38 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 3,53,000 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 1கோடியே 86 லட்சம் நோயாளிகள் குணமடைந்துள்ளனர்.
10. தமிழகத்தில் உள்ள தொழிற்சாலைகளில் ஆக்சிஜன் தயாரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ள தொழிற்சாலைகளை கண்டறிந்து, அங்கெல்லாம் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தொழிற்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார். முன்னதாக, காஞ்சிபுரம் மாவட்டம் மாம்பாக்கத்தில் இயங்கி வரும் தனியார் ஆக்ஸிஜன் தொழிற்சாலைகளை ஆய்வு மேற்கொண்டார்.