Tamil Nadu Coronavirus LIVE News : தமிழகத்தில் தொடர்ந்து இறங்குமுகத்தில் கொரோனா பாதிப்பு
தமிழகம் மற்றும் இந்தியாவில் மேற்கொள்ளப்படும் கொரோனா நோய்த் தொற்று மேலாண்மை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த செய்திகளை உடனுக்குடன் இந்த லைவ் ப்ளாக்கில் தெரிந்து கொள்ளலாம்.
LIVE
Background
கடந்த 24 மணி நேரத்தில் 2,76,309 பேர் குணமடைந்துள்ளனர். தொடர்ந்து 17வது நாளாக, தினசரி குணமடைந்தோர் எண்ணிக்கை, தினசரி கொரோனா பாதிப்பை விட அதிகமாக உள்ளது. மேலும், குணமடைந்தோர் விகிதம் தொடர்ந்து அதிகரித்து 91.25 சதவீதமாக உள்ளது.
தினசரி கொரோனா பாதிப்பு விகிதம் 8.02 சதவீதமாக உள்ளது. தொடர்ந்து 6 நாட்களாக இந்த அளவு 10 சதவீதத்துக்கும் குறைவாக உள்ளது. தமிழகத்தில், கடந்த 24 மணி நேரத்தில் 28, 864 பேருக்கு புதிதாக நோய்த் தொற்று கண்டறியப்பட்டது.
தமிழகத்தில் தொடர்ந்து இறங்குமுகத்தில் கொரோனா பாதிப்பு
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 27 ஆயிரத்து 936 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் 2 ஆயிரத்து 596 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று ஒரேநாளில் 31 ஆயிரத்து 223 நபர்கள் கொரோனாவில் இருந்து குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால், மாநிலம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளோர் மொத்த எண்ணிக்கை 20 லட்சத்து 39 ஆயிரத்து 716 ஆக அதிகரித்துள்ளது. மாநிலம் முழுவதும் இன்று ஒரே நாளில் 478 நபர்கள் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
ஊரடங்கு நிவாரணத்தின் முதல் தவணை பெறாதவர்கள் ஜூன் மாதம் பெறலாம் - தமிழக அரசு அறிவிப்பு
தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த 10-ந் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. குறிப்பாக, கடந்த 24-ந் தேதி முதல் முழு ஊரடங்கு மாநிலம் முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ரூபாய் 4 ஆயிரம் நிவாரணமாக வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்திருந்தார். இதையடுத்து, முதல் தவணையாக ரூபாய் 2 ஆயிரம் அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் வழங்கப்பட்டது. இரண்டாம் தவணை விரைவில் வழங்கப்பட உள்ளது. இந்த நிலையில், முதல் தவணை பெறாதவர்கள் ஜூன் மாதம் தங்களது முதல் தவணையை பெறலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் ஜூன் 3 முதல் 6 வரை தடுப்பூசி செலுத்தப்படாது - சுகாதாரத்துறை செயலாளர் தகவல்
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக அனைத்து தரப்பினருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணியை தமிழக அரசு தீவிரப்படுத்தி வருகிறது. இந்த நிலையில், சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்த சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், கடந்த மாதம் தமிழகத்திற்கு 2 மடங்கிற்கு மேல் தடுப்பூசி டோஸ் ஒதுக்கியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஜூன் மாதம் 42.58 லட்சம் தடுப்பூசி டோஸ் ஒதுக்கீடு செய்வதாக மத்திய அரசு உறுதி அளித்துள்ளது. மத்திய அரசிடம் இருந்து இந்த மாதத்திற்கான 1.74 லட்சம் டோஸ் தடுப்பூசி வரவேண்டியுள்ளது. ஜூன் மாதத்திற்கான முதல் தவணை தடுப்பூசி வரும் 6-ந் தேதி தான் வரும் என்பதால், ஜூன் 3 முதல் 6ம் தேதி வரை கொரோனா தடுப்பூசி செலுத்துவது நிறுத்தப்பட உள்ளது என்றும் கூறினார்.
உத்தரகாண்டில் ஜூன் 9-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு
நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் பல மாநிலங்களில் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இந்த நிலையில், உத்தரகாண்ட் மாநிலத்தில் தற்போதுள்ள ஊரடங்கு வரும் ஜூன் 9-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அந்த மாநில அரசு அறிவித்துள்ளது. அதே நேரத்தில், வாரத்தில் ஜூன் 1 மற்றும் 7-ந் தேதிகளில் மட்டும் காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரை மளிகை கடைககள் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. நாளை ஒரு நாள் மட்டும் நோட்டு மற்றும் புத்தக கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளளது.
தமிழகத்தில் 5 லட்சம் தடுப்பூசிகளே கையிருப்பில் உள்ளது - சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகளை தமிழக அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. மாநிலத்தில் உள்ள அனைவருக்கும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசு தீவிரமாக விழப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில், சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழகத்தில் தற்போது கையிருப்பில் 5 லட்சம் தடுப்பூசிகள் மட்டுமே உள்ளதாக கூறினார்.