TN Corona LIVE Updates :தமிழகத்தில் ஒரே நாளில் 397 நபர்கள் கொரோனாவினால் உயிரிழப்பு
தமிழகம் மற்றும் இந்தியாவில் கொரோனா நோய்த் தொற்று தொடர்பான அனைத்து செய்திகளையும் இந்த லைவ் ப்ளாக்கில் தெரிந்து கொள்ளலாம்.
LIVE
Background
பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் பகுதிநேர அடிப்படையில் தன்னார்வத்தோடு மருத்துவ சேவைப்பணி செய்ய மருத்துவர்கள் தேவை என சென்னை மாநகராட்சி ஆணையம் தெரிவித்தது. நாள் ஒன்றுக்கு மூன்று மணி நேரம் மட்டுமே பணியமர்த்தப்படுவார்கள் என்றும், மருத்துவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
கொரோனா நோய்த் தொற்றில் இருந்து குணமடைந்து மூன்று மாதங்களுக்குப் பின் கொரோனா தடுப்பூசியை எடுத்துக் கொள்ள வேண்டும் , முதல் டோஸ் பெற்று இரண்டாம் டோஸ் பெறுவதற்கு முன் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நபர்களும் குணமடைந்து மூன்று மாதங்களுக்குப் பின் கொரோனா தடுப்பூசியை பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற கொரோனா தடுப்பு மருந்து வழங்கலுக்கான தேசிய நிபுணர் குழுவின் புதிய பரிந்துரைகளை மத்திய சுகாதார அமைச்சகம் ஏற்றது.
விரைவில் விற்பனைக்கு வரும் கொரோனா ஹோம் டெஸ்ட் கிட்
இந்தியாவின் முதல் கொரோனா ஹோம் டெஸ்ட் கிட் ரூ.250 விலையில் விரைவில் விற்பனைக்கு வருகிறது
தமிழகத்தில் ஒரே நாளில் 397 நபர்கள் கொரோனாவினால் உயிரிழப்பு
தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்று பரவல் மக்களுக்கு கவலை அளிக்கும் விதமாக அமைந்து வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் கடந்த வாரம் 30 ஆயிரம் என்ற அளவில் தினசரி கொரோனா பாதிப்பு இருந்து வந்த நிலையில், இன்று மாநிலத்திலே முதன்முறையாக கொரோனா பாதிப்பு 35 ஆயிரத்தை தாண்டியுள்ளது, தமிழகத்தில் இன்று புதியதாக 35 ஆயிரத்து 579 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் அதிகபட்சமாக 6 ஆயிரத்து 73 நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மாநிலம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளோர் எண்ணிக்கை 17 லட்சத்து 34 ஆயிரத்து 804 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் 4 லட்சத்து 62 ஆயிரத்து 448 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் தனிமைப்படுத்தப்பட்டர்களில் மொத்தம் 2 லட்சத்து 63 ஆயிரத்து 390 நபர்கள் ஆவர். சென்னையில் மட்டும் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 47 ஆயிரத்து 667 ஆகும். மாநிலம் முழுவதும் மொத்தம் தொற்று உள்ளவர்களில் ஆண்கள் மட்டும் 10 லட்சத்து 33 ஆயிரத்து 741 ஆகும், பெண்கள் 7 லட்சத்து ஆயிரத்து 25 நபர்கள் ஆவார்கள், மூன்றாம் பாலினத்தவர் 38 நபர்கள் ஆவர். இன்று தொற்று உறுதியானவர்களில் ஆண்கள் 19 ஆயிரத்து 919 நபர்கள் ஆவார். பெண்கள் 15 ஆயிரத்து 660 நபர்கள் ஆவார். இன்று மட்டும் கொரோனா தொற்றில் இருந்து குணம் அடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 25 ஆயிரத்து 368 நபர்கள் ஆவர். இதனால், குணம் அடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை மாநிலம் முழுவதும் 14 லட்சத்து 52 ஆயிரத்து 283 நபர்களாக உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் மட்டும் 397 நபர்கள் உயிரிழந்துள்ளனர். மாநிலத்திலே முதன் முறையாக ஒரே நாளில் சுமார் 400 நபர்கள் உயிரிழந்திருப்பது மக்கள் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்று உயிரிழந்தவர்களில் 185 பேர் தனியார் மருத்துவமனையிலும், 212 நபர்கள் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்றவர்கள். இதனால், மொத்த உயிரிழப்பு மாநிலம் முழுவதும் 19 ஆயிரத்து 131 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் 6 ஆயிரத்து 105 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.
கொரோனா மருந்துகள் பட்டியலில் இருந்து ரெம்டெசிவிர் மருந்து நீக்கம் - உலக சுகாதார அமைப்பு
இந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் தினசரி 2.50 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தமிழகத்தில் மட்டும் தினசரி 300க்கும் மேற்பட்டோர் உயிரழந்து வருகின்றனர். கொரோனாவால் உயிரிழப்பவர்கள் பெரும்பாலோனார் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழப்பதால், இதர கொரோனா நோயாளிகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து தற்காத்துக் கொள்வதற்காக ரெம்டெசிவிர் மருந்து சிகிச்சைக்காக பயன்படுத்தப்பட்டது. இதனால். இந்தியாவில் ரெம்டெசிவிர் மருந்தின் தேவை அதிகரித்தது. ரெம்டெசிவிர் மருந்து கள்ளச்சந்தையில் விற்கப்படும் அளவுக்கு அதன் தேவை அதிகரித்துள்ள நிலையில், உலக சுகாதார அமைப்பு அதிரடி நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டுள்ளது. கொரோனா சிகிச்சைக்கான மருந்துகள் பட்டியலில் இருந்து ரெம்டெசிவிர் மருந்தை உலக சுகாதார அமைப்பு நீக்கியுள்ளது. இதற்கு பதிலாக, ஸ்டீராய்டு மருந்துகளை எடுத்துக்கொள்ளலாம் என்று மருத்துவ வல்லுனர்கள் ஆலோசனை தெரிவித்துள்ளனர்.
கொரோனா தடுப்பு ஆலோசனைக்குழுவுடன் நாளை மறுநாள் முதல்வர் ஆலோசனை
தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகளில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு தொடர்ந்து தீவிரம் காட்டி வருகிறது. இதற்காக, சட்டமன்றத்தில் உள்ள அனைத்துக்கட்சி உறுப்பினர்களும் அடங்கிய கொரோனா தடுப்பு ஆலோசனைக்குழு ஒன்றை முதல்வர் அமைத்துள்ளார். முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்பட அனைத்துக்கட்சி உறுப்பினர்களும் அடங்கிய இந்த குழுவினருடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 22-ந் தேதி நாளை மறுநாள் ஆலோசனை நடத்த உள்ளார். இந்த ஆலோசனையில் ஊரடங்கு குறித்தும் முக்கிய ஆலோசனை எடுக்கப்பட உள்ளது.
கொரோனா தடுப்பு பணிகள் : முதல்வரிடம் ரூபாய் 2 லட்சம் வழங்கிய அமைச்சர்
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொரோனா தடுப்பு பணிகளை துரிதப்படுத்தும் நடவடிக்கைளை தொடர்ந்து எடுத்து வருகிறார். மேலும், கொரோனா தடுப்பு பணிகளை நேரில் ஆய்வு செய்வதற்காக இன்று சேலத்திற்கு சென்றார். அங்கு அவருககு வரவேற்பு அளித்த வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமி, கொரோனா தடுப்பு பணிகளுக்காக முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூபாய் 2 லட்சத்தை வழங்கினார். முன்னதாக, தமிழகத்தில் ஆக்சிஜன் சிலிண்டர்கள், ரெம்டெசிவிர் மருந்து, படுக்கை வசதிகளை அதிகரிப்பதற்காக பொதுமக்கள் தங்களால் இயன்ற நிதியுதவியை அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.