Stalin wishes Bihar CM: பீகாரில் அமைந்துள்ள கூட்டணி ஜனநாயக சக்திகளை ஒற்றுமையை காட்டுகிறது - முதலமைச்சர் ஸ்டாலின்
பீகார் மாநிலத்தில் அமைந்துள்ள புதிய ஆட்சிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பீகார் மாநில முதலமைச்சராக நிதிஷ் குமார் (Nihish Kumar) 8ஆவது முறையாக பதவியேற்றுள்ளார். அவருக்கு பீகார் மாநில ஆளுநர் பகு சவுகான் பதவிப் பிரமாணம் செய்து வைத்துள்ளார். கடந்த 22 ஆண்டுகளில் பீகார் முதலமைச்சராக நிதிஷ் குமார் 8ஆவது முறையாகப் பதவியேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.இவருடன் பீகார் மாநில துணை முதலமைச்சராக தேஜஸ்வி யாதவ் பதவியேற்றுள்ளார். பாஜகவுடன் இருந்த 17 ஆண்டுகால கூட்டணியை முறித்துவிட்டு ராஷ்ட்ரிய ஜனதா தளத்துடன் இணைந்து ஆட்சியமைத்துள்ளார் நிதிஷ் குமார்.
இந்நிலையில் பீகார் முதலமைச்சராக பதவியேற்றுள்ள நிதிஷ் குமார் மற்றும் துணை முதலமைச்சராக பதவியேற்றுள்ள தேஜஸ்வி யாதவ் ஆகிய இருவருக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை செய்துள்ளார். அதில், “பீகார் முதலமைச்சராக பதவியேற்றுள்ள நிதிஷ் குமார் மற்றும் துணை முதலமைச்சராக பதவியேற்றுள்ள அருமை சகோதரர் தேஜஸ்வி யாதவ் ஆகிய இருவருக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள். பீகாரில் தற்போது அமைந்துள்ள மாபெரும் கூட்டணி ஜனநாயக மற்றும் மதசார்ப்பின்மை சக்திகளின் ஒருங்கிணைப்பிற்கு முக்கியமான ஒன்று. இது ஜனநாயக சக்திகளின் ஒற்றுமையை காட்டுகிறது. ” எனத் தெரிவித்துள்ளார்.
Heartiest wishes to Thiru @NitishKumar and my brother @yadavtejashwi on taking oath as the CM & Dy CM of Bihar respectively.
— M.K.Stalin (@mkstalin) August 10, 2022
The return of the Grand Alliance in Bihar is a timely effort in the unity of secular and democratic forces of the country. pic.twitter.com/c2Hu9US49g
ஐக்கிய ஜனதா தளம் - ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சிகளின் கூட்டணியான மகாதத் பந்தன் கூட்டணியின் முதலமைச்சராக நிதிஷ்குமார் பதவியேற்றுள்ளார். முன்னதாக தான் முதலமைச்சராக பதவியேற்பது குறித்துப் பேசிய நிதீஷ் குமார், “எங்களுக்கு ஏழு கட்சிகளின் ஆதரவு உள்ளது. ஆதரவு கடிதத்தில் அனைவரும் கையெழுத்திட்டுள்ளனர். மொத்தம் இரண்டு சுயேச்சைகள் உட்பட 164 எம்.எல்.ஏ.க்கள் புதிய அரசுக்கு ஆதரவளிக்க உள்ளனர்” எனத் தெரிவித்திருந்தார்.
243 உறுப்பினர்களைக் கொண்ட பீகார் மாநில சட்டப்பேரவையில், ஆர்ஜேடி தற்போது 79 எம்எல்ஏக்களுடன் தனிப் பெரிய கட்சியாக உள்ளது. JD(U) 45 சட்டப்பேரவை உறுப்பினர்களையும், காங்கிரஸ் 19 மற்றும் CPI(ML) தலைமையிலான இடது முன்னணி 17 சட்டப்பேரவை உறுப்பினர்களையும் கொண்டுள்ளது.
முன்னதாக புதிய முதலமைச்சராக பதவியேற்கவுள்ள நிதீஷ் குமார் தனது கட்சி எம்.எல்.ஏக்களின் கூட்டத்தை கூட்டிய சில மணி நேரங்களிலேயே பீகார் அரசியலில் திருப்பம் ஏற்பட்டது. “ பாஜகவுடனான கூட்டணி முடிந்து விட்டது. காவி கூட்டணி மரியாதை கொடுக்கவில்லை, சதி செய்கிறது” என அவர் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. ராஜ் பவனுக்கு வெளியே நிதிஷ் குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், ”பிஜேபி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வெளியேற ஜேடி(யு) கட்சியின் அனைத்து எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் ஒருமித்த கருத்துடன் உள்ளனர் என்றும் தெரிவித்தனர்.