முரசொலி செல்வம் உடலை பார்த்து கதறி அழுத முதல்வர் ஸ்டாலின்.. தாங்கி பிடித்த துணை முதல்வர் உதயநிதி!
முரசொலி செல்வம் உடலுக்கு அஞ்சலி செலுத்த சென்ற தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான ஸ்டாலின், அவரது உடலை பார்த்து கதறி அழுத சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மருமகனும், முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் உடன்பிறந்த சகோதரருமான முரசொலி செல்வம், இன்று அதிகாலை மாரடைப்பால் உயிரிழந்தார். பெங்களூரில் இருந்து அவரது உடல் இன்று பிற்பகல் சென்னைக்குக் கொண்டு வரப்பட்டது.
தற்போது, சென்னை கோபாலபுரத்தில் அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவருக்கு பல்வேறு தரப்பினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த சென்ற தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான ஸ்டாலின், உடலை பார்த்து கதறி அழுத சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
கதறி அழுத ஸ்டாலின்:
திமுக தலைவர்கள், நிர்வாகிகளை தவிர மாற்று கட்சியை சேர்ந்தவர்களும் முரசொலி செல்வத்திற்கு அஞ்சலி செலுத்தினர். மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ, முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும் நடிகருமான கமல், நடிகர் ரஜினி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளனர்.
கருணாநிதியின் சகோதரி சண்முக சுந்தரம்மாளின் மகனான முரசொலி செல்வத்தை தான், முதலமைச்சர் ஸ்டாலினின் தங்கையான செல்வி திருமணம் செய்திருந்தார். 83 வயதான முரசொலி செல்வம், முரசொலி நாளிதழின் நிர்வாக ஆசிரியராக பொறுப்பு வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
யார் இந்த முரசொலி செல்வம்?
முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தியில், “முத்தமிழறிஞர் தலைவர் கலைஞரின் அன்பு மருமகனும், அவரது மனசாட்சியான முரசொலி மாறனின் இளவலும், தங்கை செல்வியின் கணவருமான என் அன்புக்குரிய முரசொலி செல்வம் மறைந்தார் என்ற செய்தி இடி போல என் நெஞ்சத்தைத் தாக்கி, வேதனைக் குருதியை வடியச் செய்கிறது.
தலைவர் கலைஞரின் மூத்த பிள்ளையான முரசொலியின் பணிகளைத் தன் தோளில் சுமந்துகொண்டு இளமைப் பருவம் முதலே திறம்படச் செயலாற்றியவர் அண்ணன் முரசொலி செல்வம். தலைவர் கலைஞரும் அவரது மனசாட்சியான முரசொலி மாறனும் மனதில் நினைப்பதை எழுத்தில் - செயலில் நிறைவேற்றியவர் பாசத்திற்குரிய முரசொலி செல்வம்.
கழகத்தின் போர்வாளான முரசொலி நாளேட்டின் ஆசிரியராகப் பொறுப்பேற்று தன் எழுத்துகளால் ஜனநாயகக் குரலாக ஒலித்தவர். அடக்குமுறைக்கு அஞ்சாமல் சட்டமன்றத்தில் கூண்டிலேறி கருத்துரைத்தவர். தேர்தல் களம் முதல் திரைப்படப் பணிகள் வரை அனைத்துத் துறைகளிலும் முத்திரையைப் பதித்தவர்" என குறிப்பிட்டுள்ளார்.