திராவிட மாடல் என்ற சொல்லை கேட்டு சிலர் பயப்படுகிறார்கள்... கலைஞர் நூற்றாண்டு விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின்..!
"திராவிட மாடல் கோட்பாடுகளுடன் ஆட்சியை நடத்துகிறோம் என்றால் அதற்கு அடித்தளம் போட்டவர் கருணாநிதி"
சென்னை புளியந்தோப்பு பின்னி மில் மைதானத்தில் தமிழ்நாட்டு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று வருகிறது.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக திராவிட கழக தலைவர் கி. வீரமணி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன், விசிக தலைவர் திருமாவளவன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி, மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
நிகழ்ச்சியில் பேசிய ஸ்டாலின், "கட்டுமரமாக மிதப்பேன் அதில் ஏறி நீங்கள் பயணம் செய்யலாம் கவிழ்த்து விடமாட்டேன் என்று சொல்லி 95 வயது வரை வாழ்ந்தவர் கருணாநிதி. அவரின் நூற்றாண்டு விழாவை, இந்தாண்டு ஜூன் 3ஆம் தேதி நடத்த ஏற்பாடு செய்திருந்தோம். ஒடிசா மாநிலத்தில் நடத்த ரயில் விபத்து காரணமாக இந்த நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டது.
அன்று நடைபெறவிருந்த அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டது. மனிதநேய மாண்பாளரான கருணாநிதியும் இதையேதான் விரும்பி இருப்பார். கருணாநிதியை கொண்டாட வேண்டியது, அவரது புகழை பரப்ப வேண்டியது நமது கடமை. அதனால்தான், இன்று தொடங்கி அடுத்தாண்டு ஜூன் 3ஆம் தேதி வரை, கொண்டாடவிருக்கிறோம்.
95 வயது வரை வாழ்ந்த கருணாநிதி, இன்னும் கூடுதலாக 5 ஆண்டுகள் வாழ்ந்திருந்தால் இன்று விழா நாயகராக இருந்திருப்பார். ஆனால், உடல் நலிவுற்ற காரணத்தால் நம்மை விட்டு பிரிந்து சென்றார். பிரிந்தார் என சொல்வதை விட நான் அடிக்கடி சொல்லி வருவதை போல, எங்கும் நிறைந்திருந்து நம்மை கண்காணித்து கொண்டிருக்கிறார் என்றுதான் சொல்வேன்.
எந்த விழாக்களில் பங்கெடுத்தாலும், எந்த நிலைபாடு எடுத்தாலும் கருணாநிதி எங்கும் நிறைந்து நம்மை கண்காணித்து கொண்டிருக்கிறார் என்ற எண்ணத்துடன்தான் அவரது நினைவுகளை தாங்கி நின்று கொண்டிருக்கிறேன். அந்த நினைவுகளின் காரணமாகதான் அண்ணன் அருகே துயில் கொண்டிருக்கிற நினைவகத்திற்கு அடிக்கடி செல்கிறேன்.
இந்த மேடையில், கருணாநிதி அமர்ந்து கொண்டிருக்கிறார் என்றே எண்ணி கொண்டிருக்கிறேன். பெரியார், அண்ணா, கருணாநிதி, அன்பழகன் நம்மை நாள்தோறும் இயக்கக்கூடிய உணர்வுகள். அந்த உணர்வுகள்தான் அவர்களின் மரணத்திற்கு பிறகு, நமக்கு உயிர் ஊட்டி கொண்டிருக்கிறது.
கருணாநிதி எப்போதும் உடன்பிறப்புகள் இடையேதான் இருப்பார். அப்படிப்பட்ட உடன்பிறப்புகளுடன்தான் அவரின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த 1949ஆம் ஆண்டு, செப்டம்பர் 14 ஆம் நாள் ராபிசன் பூங்காவில் திராவிட கழகம் தொடங்கப்பட்டது. அதே, இடத்தில் தான் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. திமுக தோன்றிய வடசென்னையில் இந்த நூற்றாண்டு விழா கொண்டாடுவது பொருத்தமானது.
நான் சீமான் வீட்டு பிள்ளை இல்லை சாமானிய வீட்டு பிள்ளை என்று கூறியவர் கருணாநிதி. மாணவர்களுக்கு பேருந்தில் இலவச பயணத்திற்கு பஸ் பாஸ் வழங்கியவர் கருணாநிதி. மருத்துவ காப்பீடு திட்டம் வழங்கியவர் கருணாநிதி. அமைப்புசாரா தொழிலாளர் வாரியம், உழவர் சந்தை திறந்தது கருணாநிதி. சமத்துவபுரம் உருவாக்கியது கருணாநிதி என்று நாள் முழுவதும் சொல்லிக் கொண்டே போகலாம். அந்த அளவிற்கு ஒடுக்கப்பட்ட அடக்கப்பட்ட மக்களுக்கு உதவியவர் கருணாநிதி.
திராவிட மாடல் கோட்பாடுகளுடன் ஆட்சியை நடத்துகிறோம் என்றால் அதற்கு அடித்தளம் போட்டவர் கருணாநிதி. திராவிட மாடல் என்ற சொல்லை கேட்டு சிலர் பயப்படுகிறார்கள். எல்லாருக்கும் எல்லாம் கிடைத்து விடக் கூடாது என்பவர்கள், திராவிட மாடலை எதிர்த்து வருகிறார்கள். திராவிட மாடல்தான் தமிழ்நாடு என்கிற மாநிலத்தை தலைசிறந்த மாநிலமாக காட்டுகிறது. பாஜக எதிரான ஜனநாயக கட்சிகளை ஒன்று சேர்த்தாக வேண்டும். தமிழ்நாட்டில் இருப்பவர்கள் சித்து விளையாட்டுகள் எல்லாத்தையும் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறோம்.
மக்களும் நம்முடன் இருக்கிறார்கள். நம் மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். எனவே, நமது உள்ளத்தை ஒற்றுமையால் கட்டமைப்போம். நீ நான் என்று சொன்னால் உதடுகள் ஒட்டாது. நாம் என்று சொன்னால் தான் உதடுகள் ஒட்டும் என்று கருணாநிதி எப்பொழுதும் சொல்லுவார். அடுத்த ஆண்டு நடைபெறுகின்ற தேர்தல் நமக்காக இல்ல; நாட்டிற்காக என்று உறுதி எடுப்போம்; சபதம் எடுப்போம்" என்றார்.