சென்னை டூ செகந்திராபாத்: ‘அவர்கள் உணவை மட்டுமே சுமந்து செல்வதில்லை’ - ஸ்விக்கி டெலிவரி பாயின் மனிதநேயம்!
சாலையில் நாம் செல்லும்போது 10ல் 4 இருச்சக்கர வாகனம் ஏதேனும் உணவு டெலிவரி நிறுவனத்தின் வாகனமாகத் தான் இருக்கிறது. சிவப்பு, ஆரஞ்சு, கறுப்பு என அவர்கள் சாலைகளில் குறுக்கும் நெடுக்கும் ஓடிக் கொண்டிருக்கின்றனர்.
சாலையில் நாம் செல்லும்போது 10ல் 4 இருச்சக்கர வாகனம் ஏதேனும் உணவு டெலிவரி நிறுவனத்தின் வாகனமாகத் தான் இருக்கிறது. சிவப்பு, ஆரஞ்சு, கறுப்பு என அவர்கள் சாலைகளில் குறுக்கும் நெடுக்கும் ஓடிக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் பின்னால் உள்ள பெட்டியில் உணவுப் பொட்டலங்கள் இருப்பதுபோல் இந்த டெலிவரி பாய்கள் நிறைய பேர் மனதில் அன்புப் பொட்டலங்களை சுமந்து செல்கின்றனர். அப்படி ஒரு நெகிழ்ச்சிக் கதைதான் இது.
இந்தக் கதையை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார் சாய்கிரண் கண்ணன். அவருடைய தாய் பெங்களூருவில் வசிக்கிறார். அவருக்குத் தெரிந்த வயதான தம்பதி சென்னையில் வசிகின்றனர். அவர்களின் மகன் தனியாக செகந்தராபாத்தில் வசிக்கிறார். சென்னை, செகந்தராபாத், பெங்களூரு ஆகிய மூன்று நகரங்களை இணைத்து நடந்துள்ளது இந்த சம்பவம்.
சாய்கிரணின் போஸ்டில் இருந்து...
நேற்றிரவு என் தாயின் தூரத்து உறவினரான வயதான தம்பதியிடம் இருந்து அவருக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. அவர்கள் என் தாயிடம் செகுந்தரபாத்தில் உள்ள தங்கள் மகனை சில நாட்களாகவே தொடர்பு கொள்ள முடியவில்லை. போனில் கூட பேசுவதில்லை. எங்களுக்கு பயமாக இருக்கிறது என்று கூறியுள்ளனர். கூடவே அந்த நபரின் செகுந்தராபாத் இல்ல அட்ரஸையும் கொடுத்துள்ளனர்.
Last night, a distant relative of my mother (an old couple) notified her of not being able to reach their son (Let us call him Mr. X) who lives alone in Secunderabad. Mr. X was not answering his phone for the past few days. The old couple shared his house address.
— Saikiran Kannan | 赛基兰坎南 (@saikirankannan) September 12, 2022
அந்த அட்ரஸைப் பெற்ற எனது அம்மா அந்த அட்ரஸில் கொஞ்சம் பிஸ்கட் மற்றும் ஜூஸ் ஐட்டத்தை டெலிவரி செய்யுமாறு ஸ்விக்கியில் ஆர்டர் கொடுத்துள்ளார். அந்த ஸ்விகி நபர் கொடுக்கப்பட்ட அட்ரஸ் இருந்த ஏரியாவில் அரை மணி நேரம் சுற்றித்திரிந்துவிட்டு லொகேஷனை அடையாளம் காண முடியாமல் ஆர்டர் கொடுத்த என் அம்மாவுக்கே ஃபோன் செய்துள்ளார். அதனைக் கேட்ட என் தாயார் சரி நீங்களே அந்த பிஸ்கட், ஜூஸை சாப்பிட்டுவிடுங்கள் என்று கூறியுள்ளார். சில நிமிடங்களில் என் அம்மாவுக்கு துல்லியமான அட்ரஸ் கிடைத்துள்ளது. உடனே அந்த ஸ்விக்கி டெலிவரி பாய்க்கே ஃபோன் செய்துள்ளார். அந்த நபர் மிகவும் இனிமையாகப் பேசியுள்ளார். நான் ஒரு டெலிவரியில் உள்ளேன். அதனை முடித்துவிட்டு அங்கு சென்று பார்க்கவா என்று கேட்டுள்ளார். அம்மாவும் சரியென்று சொல்லியுள்ளார்.
அந்த நபர் சரியாக அரை மணி நேரத்தில் அந்த அட்ரஸுக்கு சென்றுள்ளார். அங்கிருந்து ஒரு ஆண் வெளியே வர அவரிடம் ஃபோனைக் கொடுத்துள்ளார். மறுமுனையில் அந்த ஃபோனில் பேசிய என் அம்மா, உங்களுக்கு என்னவாயிற்று என்று வினவியுள்ளார். அப்போதுதான் எல்லா விவரமும் தெரியவந்துள்ளது. சில தினங்களுக்கு முன்னர் அந்த நபருக்கு விபத்து நடந்துள்ளது. அதிலிருந்து அவர் நிறைய மருந்து மாத்திரைகளை உட்கொண்டு வருவதால் சோர்வாக இருந்துள்ளார். இதனால் அவர் தனது பெற்றோரிடம் சோர்வான குரலுடன் பேசினால் விபத்து நடந்தது தெரிந்துவிடுமோ என்று எண்ணி பேசாமல் இருந்துள்ளார். அதை அவர் என் அம்மாவிடம் கூற எல்லாப் பிரச்சனையும் தீர்ந்தது.
இவ்வாறாக சாய்கிரண் பதிவிட்டுள்ளார்.
இப்போது நீங்களே சொல்லுங்கள் அந்த ஸ்விக்கி நபரை எவ்வளவு பாராட்டினால் தகுமென்று.