நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடைநீக்கம் வாபஸ்.. மத்திய அரசு முடிவுக்கு காரணம் என்ன?
பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்க உள்ள நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடைநீக்கம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
வரும் ஏப்ரல், மே மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அடுத்த நிதியாண்டிற்கான வரவு செலவுகளை தீர்மானிக்கும் இடைக்கால பட்ஜெட் வரும் பிப்ரவரி 1ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது.
ஆண்டின் முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடரான பட்ஜெட் கூட்டத்தொடர், குடியரசு தலைவர் திரவுபதி முர்முவின் உரையுடன் நாளை தொடங்குகிறது. இதை தொடர்ந்து, பிப்ரவரி 1ஆம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடைநீக்கம் வாபஸ்:
இந்த நிலையில், குளிர்கால கூட்டத்தொடரில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டது திரும்ப பெறப்பட்டுள்ளது. பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்க உள்ள நிலையில், நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர், இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
கடந்த மாதம் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் போது, மாநிலங்களவை, மக்களவை உறுப்பினர்கள் என 146 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு மீறல் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கம் தரக் கோரி அவர்கள் போராட்டம் நடத்தினர். இந்த விவகாரத்தை முன்வைத்து அவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
சஸ்பெண்ட் செய்யப்பட்ட 146 பேரில் 132 எம்பிக்கள் அமர்வின் எஞ்சிய காலத்திற்கு இடைநீக்கம் செய்யப்பட்டனர். அதனால், அமர்வு முடிந்ததும் அவர்களின் சஸ்பெண்ட் ரத்து செய்யப்பட்டது. ஆனால், அமர்வு முடிந்து பிறகும், மீதமுள்ள 11 மாநிலங்களவை உறுப்பினர்கள், 3 மக்களவை உறுப்பினர்களின் சஸ்பெண்ட் தொடர்ந்தது.
மத்திய அரசு முடிவுக்கு காரணம் என்ன?
எனவே, இந்த விவகாரத்தில் இறுதி முடிவு எடுப்பதற்காக நாடாளுமன்ற ஒழுங்கு நடவடிக்கை குழுவுக்கு பரிசீலனைக்கு அனுப்பப்பட்டது. 3 மக்களவை எம்.பி.க்களின் இடைநீக்கத்தை மக்களவையின் ஒழுங்கு நடவடிக்கை குழு ஜனவரி 12 ஆம் தேதி ரத்து செய்த நிலையில், 11 மாநிலங்களவை எம்.பி.க்களின் சஸ்பெண்ட் இன்று திரும்ப பெறப்பட்டது.
இதுகுறித்து நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி கூறுகையில், "அனைத்தும் இடைநீக்கங்களும் ரத்து செய்யப்படும். நான் மக்களவை சபாநாயகர் மற்றும் மாநிலங்களவை தலைவருடன் பேசியுள்ளேன், அரசாங்கத்தின் சார்பாகவும் நான் அவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளேன். இது சபாநாயகர் மற்றும் தலைவரின் அதிகார வரம்பு.
எனவே, சம்மந்தப்பட்ட சிறப்புக்குழுக்களுடன் பேசி, இடைநீக்கத்தை ரத்து செய்து, அவைக்கு வர வாய்ப்பளிக்க வேண்டும் என, இருவரையும் கேட்டுக் கொண்டுள்ளோம். இருவரும் சம்மதித்தனர். சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்பிக்கள் நாளை முதல் சபைக்கு வரவுள்ளனர்" என்றார்.
இந்த விவகாரம் குறித்து முன்னதாக பேசியிருந்த மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, "நாடாளுமன்ற அதிகார வரம்புக்குள் அவையின் பாதுகாப்பு வருகிறது. அதில், மத்திய அரசு தலையிட முடியாது. மக்களவை செயலகத்தில் (பொறுப்புகளில்) அரசாங்கம் தலையிட முடியாது. அதையும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம்" என்றார்.
முக்கிய மசோதாக்களை விவாதம் இன்றி நிறைவேற்றுவதற்காக எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர் என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியிருந்தன.