"பாத்ரூம் போகனும்" அழைத்து சென்ற ஐஆர்எஸ் அதிகாரி.. நீதிமன்ற வளாகத்திலேயே தீர்த்து கட்டிய மாமனார்!
நீதிமன்ற வளாகத்தில் வைத்து ஐஆர்எஸ் அதிகாரியை அவரது மாமனாரே சுட்டு கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் சண்டிகரில் நடந்துள்ளது.
சண்டிகரில் நீதிமன்ற வளாகத்தில் வைத்து ஐஆர்எஸ் அதிகாரியை அவரது மாமனாரே சுட்டு கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தன்னுடைய மருமகனை கொன்று நீதிமன்றத்தை அலறவிட்டவர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட காவல்துறை அதிகாரி ஆவார்.
சண்டிகர் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு: குற்றஞ்சாட்டப்பட்ட மல்விந்தர் சிங் சித்து, காவல்துறையில் துணை ஐ.ஜி-ஆக பணியாற்றியவர். ஆனால், தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். கொல்லப்பட்ட ஐஆர்எஸ் அதிகாரியின் குடும்பத்திற்கும் குற்றம் சாட்டப்பட்டவரின் குடும்பங்களுக்கு இடையே குடும்பத் தகராறு இருப்பதாகக் கூறப்படுகிறது.
குடும்ப பிரச்னையை தீர்ப்பதற்காக இரு தரப்பினரும் சண்டிகர் குடும்பநல நீதிமன்றத்திற்கு வந்திருந்தனர் அங்கு, இருதரப்புக்கும் இடையே சமரச பேச்சுவார்த்தை நடந்து வந்தது. அப்போது, கழிவறையைப் பயன்படுத்த அனுமதிக்குமாறு மல்விந்தர் சிங் கோரிக்கை விடுத்தார்.
ஐஆர்எஸ் அதிகாரியை தீர்த்து கட்டிய மாமனார்: கழிவறை இருக்கும் இடத்திற்கு செல்ல அவரது மருமகனே உதவி புரிந்துள்ளார். இருவரும் அறையை விட்டு வெளியே சென்றனர். சிறிது நேரம் கழித்து, கழிவறையில் இருந்து ஐந்து துப்பாக்கி குண்டுகளின் சத்தம் கேட்டது. மல்விந்தர் சுட்ட ஐந்து குண்டுகளில், இரண்டு தோட்டாக்கள் மருமகன் மீது பட்டது.
இதில், அவர் நிலைதடுமாறி கீழே விழுந்தார். நீதிமன்ற வளாகத்தில் எடுக்கப்பட்ட வீடியோவில் அவர் தரையில் விழுந்து கிடந்தது பதிவானது. ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை சிலர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால், மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியிலேயே குண்டடிப்பட்டவர் உயிரிழந்தார்.
நீதிமன்ற வளாகத்தில் இருந்த சில வழக்கறிஞர்கள் குற்றவாளியை பிடித்து ஒரு அறையில் அடைத்து வைத்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். குற்றவாளிகளை போலீசார் கைது செய்துள்ளனர்.