Sushil Kumar Modi: பாஜகவிற்கு பேரிழப்பு..! பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுசில் குமார் மோடி காலமானார்..
Sushil Kumar Modi: பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுசில் குமார் மோடி, புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
Sushil Kumar Modi: சுசில் குமார் மோடியின் மரணம், பீகார் பாஜகவிற்கு நிரப்ப முடியாத பேரிழப்பு என, அக்கட்சியின் மாநில தலைவர் தெரிவித்துள்ளார்.
சுசில் குமார் மோடி காலமானார்:
பீகார் முன்னாள் துணைத் தலைவர் சுசில் குமார் மோடி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு திங்கள்கிழமை மாலை காலமானார். அவருக்கு வயது 72. டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று இரவு 9.45 மணிக்கு அவரது உயிர் பிரிந்தது. சுசில் குமார் மோடியின் மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பான டிவிட்டர் பதிவில், "பீகாரில் பாஜகவின் எழுச்சி மற்றும் வெற்றியில் அவர் விலைமதிப்பற்ற பங்கு வகித்துள்ளார். எமர்ஜென்சியை கடுமையாக எதிர்த்து, மாணவர் அரசியலில் தனக்கென ஒரு பெயரைப் பெற்றார். அவர் மிகவும் கடின உழைப்பாளி மற்றும் நேசமான எம்.எல்.ஏ என்று அறியப்பட்டார். அரசியல் தொடர்பான பிரச்சனைகளில், அவருக்கு ஆழ்ந்த புரிதல் இருந்தது" என்று பிரதமர் மோடி தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். இதேபோன்று அமித் ஷா உள்ளிட்ட, பாஜகவின் மூத்த தலைவர்கள் பலரும் சுசில் குமார் மோடியின் மறவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
पार्टी में अपने मूल्यवान सहयोगी और दशकों से मेरे मित्र रहे सुशील मोदी जी के असामयिक निधन से अत्यंत दुख हुआ है। बिहार में भाजपा के उत्थान और उसकी सफलताओं के पीछे उनका अमूल्य योगदान रहा है। आपातकाल का पुरजोर विरोध करते हुए, उन्होंने छात्र राजनीति से अपनी एक अलग पहचान बनाई थी। वे… pic.twitter.com/160Bfbt72n
— Narendra Modi (@narendramodi) May 13, 2024
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சுசில் குமார்:
கடந்த ஏப்ரல் மாதம் தனக்கு புற்றுநோய் பாதிப்பு இருப்பதாக, சுசில் குமார் வெளிப்படையாக அறிவித்தார். அந்த அறிக்கையில், "கடந்த ஆறு மாதங்களாக நான் புற்றுநோயுடன் போராடுகிறேன். இப்போது, இதைப் பற்றி மக்களுக்குத் தெரிவிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று நினைக்கிறேன். மக்களவை தேர்தலில் என்னால் பரப்புரை செய்ய முடியாது. பிரதமரிடம் எல்லாவற்றையும் தெரிவித்துள்ளேன். நாடு, பீகார் மற்றும் கட்சிக்கு எப்போதும் நன்றியுடனும், அர்ப்பணிப்புடனும் இருக்கிறேன்” என்று தெரிவித்து இருந்தார்.
பீகார் பாஜகவின் நட்சத்திர பேச்சாளர்களில் ஒருவராகவும், கட்சியின் தேர்தல் அறிக்கைக் குழுவின் உறுப்பினராகவும் சுசில் குமார் நியமிக்கப்பட்டு இருந்தார். அவரது மாநிலங்களவை பதவிக்காலம் சமீபத்தில் முடிவடைந்தது. இருப்பினும், பிப்ரவரியில் அறிவிக்கப்பட்ட பாஜகவின் மாநிலங்களவை வேட்பாளர் பட்டியலில் அவரது பெயர் இடம்பெறவில்லை.
சுசில் குமார் நீண்ட காலமாக பீகாரில் பாஜகவின் முகமாக இருந்து வருகிறார். முதலமைச்சர் நிதிஷ் குமாரின் கீழ் NDA அரசாங்கத்தில் இரண்டு முறை துணை முதலமைச்சராக இருந்தார், நீண்ட காலமாக நிதி இலாகாவை வைத்திருந்தார். நிதிஷ் குமாருக்கு நெருக்கமானவராகக் கருதப்பட்ட அவர், NDA முகாமுக்கு நிதிஷ் குமார் மீண்டும் வர சுசில் குமார் மோடி தான் காரணமாக கூறப்படுகிறது.