(Source: ECI/ABP News/ABP Majha)
Gyanvapi Case: ஆய்வுக்கு யெஸ்..அகழ்வாராய்ச்சிக்கு நோ..ஞானவாபி மசூதி வழக்கில் உச்ச நீதிமன்றம் உத்தரவு
இந்த வழக்கை இன்று விசாரித்த இந்தியா தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு, அலகாபாத் உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்துவிட்டது.
உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் காசி விஸ்வநாதர் கோயிலுக்கு அருகே உள்ள ஞானவாபி மசூதியில் இந்திய தொல்லியல் துறை ஆய்வு மேற்கொள்ள அலகாபாத் உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது. இதை எதிர்த்து மசூதி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை இன்று விசாரித்த இந்தியா தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு, அலகாபாத் உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்துவிட்டது. இருந்த போதிலும், ஆய்வின்போது மசூதி வளாகத்திற்கு சேதம் ஏற்படுத்தாத வகையிலான வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என இந்திய தொல்லியல் துறைக்கு உத்தரவிட்டுள்ளது.
"மசூதியில் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளக்கூடாது"
அதே சமயத்தில், மசூதி வளாகத்தில் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்திய தலைமை நீதிபதி பிறப்பித்த உத்தரவில், "இந்திய தொல்லியல் துறையின் ஆய்வின்போது, கட்டிடங்களுக்கு சேதம் ஏற்படுத்தாத வகையில் வழிமுறைகள் கடைபிடிக்க வேண்டும் என உத்தரவிடுகிறோம்.
அந்த இடத்தில் அகழ்வாராய்ச்சி செய்யக்கூடாது என்ற உயர்நீதிமன்ற உத்தரவை உறுதி செய்கிறோம். தொல்லியல் துறையின் ஆய்வு அறிக்கை மீண்டும் உயர்நீதிமன்றத்திற்கு அனுப்பப்பட்டு, வழக்கின் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்" என குறிப்பிடப்பட்டுள்ளது.
"வரலாற்றை தோண்டி எடுக்க முயற்சி"
விசாரணையின்போது, மசூதி தரப்பின் சார்பாக ஆஜரான மூத்த வழக்கிறிஞர் உசேஃபா அகமாதி, "வரலாற்றைத் தோண்டும் செயலில் இந்திய தொல்லியில் துறை ஈடுபட்டுள்ளது. வழிபாட்டுத் தலங்கள் சட்டத்தை மீறும் செயலில் ஈடுபட்டுள்ளது. சகோதரத்துவம் மற்றும் மதச்சார்பின்மைக்கு இடையூறாக இருக்கிறது.
வரலாற்றில் 500 ஆண்டுகளுக்கு முன்பு என்ன நடந்தது என்பதை தோண்டி எடுக்க முயற்சி செய்கிறது இந்திய தொல்லியல் துறை. கடந்த கால காயங்களை மீண்டும் திறக்க முயற்சிக்கிறது" என வாதிட்டார்.
இந்த வாதத்தை கேட்ட உச்ச நீதிமன்றம், "1947ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி அன்று, ஞானவாபி மசூதி எப்படி இருந்தது என்பது இங்கு கேள்வி இல்லை" என பதில் அளித்தது.
வழிபாட்டு தலங்கள் சட்டம், 1991இன்படி, "கடந்த 1947ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி அன்று, வழிபாட்டு தலங்கள் எப்படி இருந்ததோ, அதன்படியே தொடர வேண்டும். அதில் எந்த மாற்றமும் செய்யக்கூடாது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஞானவாபி மசூதியில் ஆண்டுக்கு ஒரு முறை இந்துக்கள் வழிபாடு மேற்கொண்டு வருகின்றனர். இந்த மசூதிக்கு உள்ளே அமைந்துள்ள சிறிய குளத்தில், சிவலிங்கம் இருப்பதாகவும், முகலாயர் காலத்தில் கட்டப்பட்ட ஞானவாபி மசூதி, இந்துக் கோயில் இருந்த இடத்தில் கட்டப்பட்டதா என்பதை அறிய, அங்கு ஆய்வு செய்ய உத்தரவிடக் கோரி இந்துக்கள் தரப்பு வாரணாசி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.