Supreme Court : திருமணத்திற்காக மத மாற்றத்துக்கு கட்டுப்பாடுகளா..? வழக்கை விசாரிக்கும் உச்ச நீதிமன்றம்..!
மத மறுப்பு திருமணங்களால் நிகழும் மத மாற்று சம்பவங்களை தடுக்கும் வகையில் நிறைவேற்றப்பட்ட சட்டங்களுக்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணை வரும் பிப்ரவரி 3ஆம் தேதி நடைபெறும்.
மத மறுப்பு திருமணங்களால் வாயிலாக நிகழும் மத மாற்று சம்பவங்களை தடுக்கும் வகையில் பாஜக ஆளும் பல்வேறு மாநிலங்களில் சர்ச்சைக்குரிய சட்டங்கள் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டங்களுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தொடரப்பட்டுள்ளது.
இந்நிலையில், மத மறுப்பு திருமணங்களால் நிகழும் மத மாற்று சம்பவங்களை தடுக்கும் வகையில் நிறைவேற்றப்பட்ட சட்டங்களுக்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணை வரும் பிப்ரவரி 3ஆம் தேதி நடைபெறும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் மற்றும் நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்மா, ஜே.பி.பார்திவாலா ஆகியோர் அடங்கிய அமர்வு, இதுதொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
வழக்கின் விசாரணையின்போது பேசிய நீதிபதிகள், "மனுக்களை பட்டியலிட்டு அறிவிப்பு வெளியிடுவோம். இது தொடர்பான அனைத்து மனுக்களும் வெள்ளிக்கிழமை அன்று விசாரிக்கப்படும். மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர், இந்த மனுக்களை ஆய்வு செய்வார்" என்றார்கள்.
இந்த விவகாரத்தில், சமூக ஆர்வலர் டீஸ்டா செடல்வாட்டின் "Citizens for Justice and Peace" என்ற அரசு சாரா அமைப்பின் சார்பாக மூத்த வழக்கறிஞர் சி.யு.சிங் ஆஜரானார்.
அப்போது, "இந்த மாநில சட்டங்களால் மக்கள் திருமணம் செய்து கொள்ள முடியாது. நிலைமை மிகவும் மோசமாக உள்ளது" என வாதம் முன்வைதாார்.
இதற்கு பதில் அளித்த மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் ஆர். வெங்கடரமணி, "இந்த விவகாரத்தில் மாநில சட்டங்களுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. அந்தந்த மாநில உயர் நீதிமன்றங்களே இந்த வழக்குகளை விசாரிக்கலாம்" என்றார்.
மதமாற்றத்திற்கு எதிரான இந்த சர்ச்சைக்குரிய மாநில சட்டங்களுக்கு எதிரான வழக்குகளை உச்ச நீதிமன்றம் விசாரிக்க கோரி தொடரப்பட்ட மனுக்களை ஒரே மனுவாக தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் முன்னதாக வழக்குதாரர்களை கேட்டு கொண்டது.
இந்த விவகாரத்தில், "Citizens for Justice and Peace" என்ற அமைப்பு மனு தாக்கல் செய்ய என்ன உரிமை உள்ளது என
சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கேள்வி எழுப்பினார்.
இது தொடர்பாக அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் ஐந்து மனுக்களும், மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத்தில் ஏழு மனுக்களும், குஜராத் மற்றும் ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றங்களில் தலா இரண்டு மனுக்களும், இமாச்சலப் பிரதேச உயர் நீதிமன்றத்தில் மூன்று மனுக்களும், கர்நாடகா மற்றும் உத்தரகண்ட் உயர் நீதிமன்றங்களில் தலா ஒரு மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டது.
#SupremeCourt hears the batch of petitions challenging various Anti-Conversion laws across India. The matter is listed before a bench led by CJI DY Chandrachud. #SupremeCourt #SupremeCourtOfIndia #ReligiousConversion pic.twitter.com/kLFovIrPt8
— Live Law (@LiveLawIndia) January 30, 2023
இவை, அனைத்தையும் உச்ச நீதிமன்றத்திற்கு மாற்றக்கோரி ஒரே மனுவாக தாக்கல் செய்யுமாறு உச்ச நீதிமன்றம் கேட்டு கொண்டது.