Waqf Amendment: நாடே எதிர்பார்ப்பு - 73 மனுக்கள், தாக்கு பிடிக்குமா வக்பு சட்டம்? உச்சநீதிமன்றம் இன்று விசாரணை
Waqf Amendment: மத்திய அரசின் வக்பு திருத்த சட்டத்திற்கு எதிரான மனுக்கள் மீது உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை தொடங்குகிறது.

Waqf Amendment: கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வக்பு திருத்த சட்டம் அண்மையில் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டது.
வக்பு திருத்த சட்டம் - வழக்கு விசாரணை:
வக்பு திருத்த சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்களின் தொகுப்பை, உச்ச நீதிமன்றம் இன்று விசாரிக்க உள்ளது. பட்டியலிடப்பட்ட தரவுகளின்படி, பிற்பகல் 2 மணிக்கு விசாரணை நடைபெற உள்ளது. அண்மையில் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் மத்திய அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிய வக்ஃப் (திருத்தம்) சட்டத்திற்கு எதிராக, திமுக, தவெக தலைவர் விஜய் உட்பட அரசியல் கட்சிகள் மற்றும் மதக் குழுக்களும் தாக்கல் செய்த மனுக்களின் மீது இந்த விசாரணை நடைபெற உள்ளது. தலைமை நீதிபதி சஞ்சய் குமார் மற்றும் நீதிபதி கே.வி. விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு வழக்கை விசாரிக்க உள்ளது. இதனால் சட்டம் தொடர்ந்து நடைம்றையில் இருக்குமா? அல்லது தேர்தல் பத்திரங்கள் விவகாரத்தை போன்று நீதிமன்றம் ஏதேனும் அதிரடியான தீர்ப்பை வழங்குமா? என பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
எதிர்ப்பும்..வன்முறையும்..
வக்பு சொத்துக்களின் நிர்வாகத்தை நெறிப்படுத்த முயலும் இந்தச் சட்டத்திற்கு, இஸ்லாமிய சமூகத்தினரிடையே கடுமையான எதிர்ப்பு எழுந்துள்ளது. இஸ்லாமியர்களின் உரிமையை பறிப்பதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. வக்பு குழுவிற்குள் மற்ற சமூகத்தை சேர்ந்தவர்களும் உறுப்பிபனர் ஆகலாம் என்பதையும், சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் முடிவு எடுப்பார் என்பது போன்ற விதிகளும் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்காளத்தின் முர்ஷிதாபாத் மற்றும் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டங்களில் வன்முறைகளும் வெடித்தது குறிப்பிடத்தக்கது.
73 மனுக்கள்:
திமுக மற்றும் தவெக மட்டுமின்றி, ஒவைசியின், ஆம் ஆத்மி தலைவர் அமானத்துல்லா கான், சிவில் உரிமைகள் பாதுகாப்பு சங்கம், அர்ஷத் மதானி, சமஸ்தா கேரள ஜமியத்துல் உலேமா, அஞ்சும் கதாரி, தைய்யாப் கான் சல்மானி, முகமது ஷாஃபி, முகமது ஃபஸ்லுர்ரஹீம் மற்றும் ஆர்ஜேடி தலைவர் மனோஜ் குமார் ஜா, டி.எம்.சி எம்பி மஹுவா மொய்த்ரா, சம்பலைச் சேர்ந்த சமாஜ்வாடி கட்சி எம்பி ஜியா-உர்-ரஹ்மான் பர்க், ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான YSRCP, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) என, வக்பு திருத்த மசோதாவிற்கு எதிராக 73 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் (AIMPLB), ஜமியத் உலமா-இ-ஹிந்த், திராவிட முன்னேற்றக் கழகம் (DMK), காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இம்ரான் பிரதாப்கர்ஹி மற்றும் முகமது ஜாவேத் ஆகியோர் மற்ற முக்கிய மனுதாரர்கள் ஆவர். வக்பு திருத்த சட்டத்தை ரத்து செய்து, இஸ்லாமியர்களின் உரிமைகள் காக்கப்பட வேண்டுமென மனுக்களில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அதேநேரம், பாஜக ஆளும் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், அசாம், சத்தீஸ்கர், மகாராஷ்டிரா மற்றும் உத்தராகண்ட் ஆகிய மாநிலங்கள், சட்ட திருத்தத்திற்கு ஆதரவாக மனுதாக்கல் செய்துள்ளன.
நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்:
மத்திய அரசு சமீபத்தில் வக்ஃப் (திருத்தம்) சட்டம், 2025 ஐ அறிவித்தது. இரு அவைகளிலும் நீண்ட நெடிய விவாதங்களைத் தொடர்ந்து ஏப்ரல் 5 அன்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பின்னர் குடியரசு தலைவர் திரவுபதி முர்முவின் ஒப்புதலைப் பெற்றது. இந்த மசோதாவிற்கு மாநிலங்களவையில் 128 உறுப்பினர்கள் ஆதரவாகவும் 95 பேர் எதிராகவும் வாக்களித்ததனர். 288 உறுப்பினர்கள் ஆதரவுடனும், 232 உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்ததன் மூலம் மக்களவையில் இது நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

