Nupur Sharma Case: ”உங்களுக்கு சிகப்பு கம்பளம் போட்டிருக்கணுமே..” : நுபுர் ஷர்மா வழக்கறிஞரை கடிந்த உச்சநீதிமன்றம்..
தனது வெறுப்புப் பேச்சு காரணமாக இந்தியாவில் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் உருவாக காரணமாக இருந்த பாஜக தலைவர் நுபுர் ஷர்மா நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
நபிகள் நாயகம் குறித்த தனது வெறுப்புப் பேச்சு காரணமாக, அரபு நாடுகளின் கோபமும், இந்தியாவில் பல்வேறு இடங்களில் போராட்டங்களும் உருவாக காரணமாக இருந்த பாஜக தலைவர் நுபுர் ஷர்மா ஒட்டுமொத்த நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. மேலும், தற்போது இந்தியாவில் நிலவி வரும் பிரச்னைகளுக்கு நுபுர் ஷர்மாவே முழுப் பொறுப்பு ஏற்க வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்த வழக்கு விசாரணையின் போது, உச்ச நீதிமன்ற நீதிபதி சூர்யா காந்த், `தொலைக்காட்சி விவாதத்தில் அவர் பேசியதைக் கண்டோம். இத்தனை அவதூறுகளைப் பேசிவிட்டு, பின்னர் தானும் வழக்கறிஞர் தான் என அவர் கூறியிருப்பது அவமானகரமானது. அவர் மொத்த நாட்டு மக்களிடமும் மன்னிப்பு கோர வேண்டும்’ எனக் கூறியுள்ளார்.
தன் மீது பதியப்பட்ட வழக்குகள் அனைத்தையும் டெல்லிக்கு மாற்றக் கோரி நுபுர் ஷர்மா தாக்கல் செய்திருந்த மனு மீது உச்ச நீதிமன்ற விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், நுபுர் ஷர்மாவுக்குக் கொலை மிரட்டல்கள் வருவதாகவும், அவர் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் அவரது வழக்கறிஞர் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
அப்போது உச்ச நீதிமன்ற நீதிபதி சூர்யா காந்த், `நுபுர் ஷர்மாவுக்கு அச்சுறுத்தல்கள் வருகின்றனவா அல்லது அவரே பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக மாறிவிட்டாரா? நாடு முழுவதும் மக்களின் உணர்வுகளை அவர் தூண்டியிருக்கும் விதம் காரணமாக, அவரே நாட்டில் தற்போது நடைபெற்று வரும் பிரச்னைகளுக்குப் பொறுப்பு’ எனக் கூறியுள்ளார்.
Suspended BJP leader Nupur Sharma moves Supreme Court seeking transfer of all the FIRs registered against her, across several states over her controversial remark, to Delhi for investigation. Sharma says she is constantly facing life threats. pic.twitter.com/hcZUPYsf58
— ANI (@ANI) July 1, 2022
மேலும் அவர், `நீதிமன்றத்தில் இருக்கும் விவகாரங்களைத் தொலைக்காட்சி விவாதம் நடத்த வேண்டிய அவசியம் என்ன? இது வெறும் அரசியல் பிரச்சாரம் மட்டுமே.. இப்படியான பேச்சுகளை நுபுர் ஷர்மா பேச வேண்டிய அவசியம் என்ன?’ எனக் கூறியுள்ளதோடு, அவரின் வெறுப்புப் பேச்சு பலரையும் தொந்தரவு செய்துள்ளதாகக் கூறியுள்ளார்.
When Nupur Sharma's lawyer tells Supreme Court that she is joining the investigation and not running away, Supreme Court says - there must be a red carpet for you there.
— ANI (@ANI) July 1, 2022
நுபுர் ஷர்மாவின் வழக்கறிஞர் தனது தரப்பில் நுபுர் ஷர்மா மன்னிப்பு கேட்டுள்ளதாகவும், கருத்துகளையும் பின்வாங்கியுள்ளதாகவும் கூற, உச்ச நீதிமன்ற நீதிபதி சூர்யா காந்த், `மிகத் தாமதமாகவே கருத்துகளைப் பின்வாங்கியுள்ளார்.. அதுவும் உணர்வுகள் புண்பட்டிருந்தால் எனக் கூறி நிபந்தனையோடு மன்னிப்பு கேட்டுள்ளார். அவர் தாக்கல் செய்திருக்கும் இந்த மனு அவரது ஆணவத்தைக் காட்டுகிறது.. இந்த நாட்டின் மேஜிஸ்திரேட்கள் அவருக்கு மிகச் சிறியதாக இருக்கிறார்கள் போல.. இவர்கள் மத நம்பிக்கை கொண்ட மனிதர்கள் அல்ல.. மக்களைத் தூண்டுவதற்காக கருத்து தெரிவிப்போர் இவர்கள்’ எனவும் கடுமையாக சாடியுள்ளார். நுபுர் ஓடி ஒளியவில்லையே என்ற வாதத்துக்கு பதிலளித்த நீதிபதி, உங்களுக்கு சிகப்பு கம்பளம் விரித்திருக்க வேண்டுமா என கண்டித்தார்