அடுத்தடுத்து வெற்றி.. அரசியல் கூட்டங்களில் கலந்து கொள்ள சந்திரபாபு நாயுடுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி
பொதுக்கூட்டங்களிலும் பேரணிகளிலும் கலந்து கொள்ளக்கூடாது என ஆந்திர உயர் நீதிமன்றம் விதித்த நிபந்தனையை உச்ச நீதிமன்றம் திரும்ப பெற்றுள்ளது.
ஆந்திர பிரதேச முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு. கடந்த 2014ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரை முதலமைச்சராக பதவி வகித்தபோது, திறன் மேம்பாட்டு துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதியை தவறாக பயன்படுத்தி 300 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்படுத்தியதாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
இந்த வழக்கு தொடர்பாக அவர் கைது செய்யப்பட்ட சம்பவம் அம்மாநில அரசியலில் பெரும் புயலை கிளப்பியது. இந்த வழக்கில் ஆந்திர பிரதேச குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் (சிஐடி) தாக்கல் செய்த முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யக் கோரி அம்மாநில உயர் நீதிமன்றத்தில் சந்திரபாபு நாயுடு வழக்கு தொடர்ந்தார்.
ஆனால், அதனை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து சந்திரபாபு நாயுடு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. சந்திரபாபு நாயுடு தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதிகளும் தள்ளுபடி செய்தனர். சட்டப் போராட்டத்தில் தொடர் பின்னடைவுகளை சந்தித்து வந்த சந்திரபாபு நாயுடுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி ஆந்திர பிரதேச உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இருப்பினும், சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருந்தது.
அரசியல் கூட்டங்களில் கலந்து கொள்ள அனுமதி:
தற்போது, அந்த நிபந்தனைகளை உச்ச நீதிமன்றம் தளர்த்தியுள்ளது. பொதுக்கூட்டங்களிலும் பேரணிகளிலும் கலந்து கொள்ளக்கூடாது என ஆந்திர உயர் நீதிமன்றம் விதித்த நிபந்தனையை உச்ச நீதிமன்றம் திரும்ப பெற்றுள்ளது. ஆனால், வழக்கு குறித்து ஊடகத்திடமோ, பொது மக்களிடமோ பேசக் கூடாது என்ற நிபந்தனை தொடரும் என உச்ச நீதிமன்றம் விளக்கம் அளித்துள்ளது.
அதுமட்டும் இன்றி, பிணை வழங்கிய ஆந்திர உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அம்மாநில அரசு மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளது. இந்த மனுவுக்கு பதில் அளிக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். இந்த வழக்கை பீலா திரிவேதி மற்றும் சதீஸ் சந்திர சர்மா விசாரித்து வருகின்றனர்.
தெலங்கானா தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்துவாரா சந்திரபாபு நாயுடு?
நாளை மறுநாள், தெலங்கானாவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் கூட்டங்களில் கலந்து கொள்ள சந்திரபாபு நாயுடுக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. தெலங்கானாவில் தேர்தல் பிரச்சாரம் இன்றுடன் நிறைவடைந்திருக்கிறது.
சந்திரபாபு நாயுடுவின் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து தெலுங்கு தேச கட்சியினரும் அவரது ஆதரவாளர்களும் குடும்பத்தினரும் கடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். தெலங்கானா தேர்தலில் தெலுங்கு தேச கட்சி போட்டியிடாது என கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது. தெலங்கானாவில் அக்கட்சிக்கு என நல்ல செல்வாக்கு உள்ளது. கடந்த 2014ஆம் ஆண்டு நடந்த தேர்தலில், 15 தொகுதிகளில் அக்கட்சி வெற்றிபெற்றது. 2019 தேர்தலில் 2 இடங்களில் வெற்றிபெற்றது.