The Kerala Story: தி கேரளா ஸ்டோரி படத்திற்கு விதிக்கப்பட்ட தடை நிறுத்திவைப்பு...உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு..
'தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்திற்கு மேற்கு வங்க அரசு தடை விதித்திருந்த நிலையில், அந்த தடையை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது.
நாடு முழுவதும் சர்ச்சையை கிளப்பிய 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்திற்கு மேற்கு வங்க அரசு தடை விதித்திருந்த நிலையில், அந்த தடையை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது. மேலும், தமிழ்நாட்டில் தடை செய்யக்கூடாது என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
சர்ச்சையை கிளப்பிய திரைப்படம்:
வெறுப்பை பரப்பும் விதமாக எடுக்கப்பட்டதாக 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்திற்கு பெரும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், மேற்குவங்கத்தில் அந்த திரைப்படத்திற்கு தடை விதிக்கப்பட்டது. பாக்ஸ் ஆபிஸில் போதுமான வரவேற்பு கிடைக்கவில்லை எனக் கூறி, தமிழ்நாட்டில் திரையரங்க உரிமையாளர்கள், தானாக முன்வந்து திரைப்படத்தை திடையிடுவதில்லை என முடிவு செய்தனர்.
இதற்கு எதிராக திரைபடத்தின் தயாரிப்பாளர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். கேரளாவில் திரைப்படத்திற்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்த கேரள உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக பத்திரிகையாளர் குர்பான் அலி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த மனுக்கள் அனைத்தையும் ஒன்றாக சேர்த்து விசாரித்த இந்திய தலைமை நீதிபதி டி.ஓய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு, மேற்கு வங்க அரசு விதித்த தடையை நிறுத்தி வைக்க உத்தரவிட்டது.
கேரளாவில் உள்ள 32,000 பெண்கள், இஸ்லாமுக்கு கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்யப்பட்டதாக திரைப்படத்தில் தெரிவித்த கருத்துக்கு தங்களிடம் ஆதாரம் இல்லை என திரைப்படக்குழுவினர் மறுப்பு தெரிவிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், இந்த திரைப்படம் முழுக்க முழுக்க கற்பனையே என்பதை படம் தொடங்குவதற்கு முன்பு டிஸ்கிளைமராக போட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.
உச்ச நீதிமன்றம் அதிரடி:
விசாரணையின் போது பேசிய இந்திய தலைமை நீதிபதி டி.ஓய். சந்திரசூட், "மத்திய திரைப்படத் தணிக்கை வாரியம் (CBFC) இப்படத்திற்கு சான்றிதழ் வழங்கியிருப்பதால் மாநில அரசு சட்டம் ஒழுங்கை பராமரிக்க வேண்டும். முன் வைக்கப்பட்டு வாதங்களை கருத்தில் கொண்டு பார்த்தால், மேற்கு வங்கத்தில் விதிக்கப்பட்ட தடை ஏற்கத்தக்கது அல்ல என கருதுகிறோம். இதனால் படத்திற்கு தடை விதிக்கப்பட்ட உத்தரவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது" என்றார்.
தமிழ்நாட்டை பொறுத்தவரையில், தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு செல்வோரின் பாதுகாப்பை தமிழ்நாடு அரசு உறுதி செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு மத்திய திரைப்படத் தணிக்கை வாரியம் ஒப்புதல் வழங்கியதற்கு எதிராக தொடரப்பட்ட மனு வரும் ஜூலை மாதம் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அதா ஷர்மா, சித்தி இத்னானி, தேவதர்ஷினி, யோகிதா பிஹானி, சோனியா பாலானி, உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் இப்படத்தில் நடித்துள்ள நிலையில், ஆவணப்பட இயக்குநர் சுதிப்தோ சென் இப்படத்தை இயக்கியுள்ளார்.
இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியானது. ட்ரெய்லர் வெளியானது முதலே கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் என பல அரசியல் தலைவர்கள் தொடங்கி நெட்டிசன்கள் வரை இப்படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், மற்றொருபுறம் இப்படத்துக்கு ஆதரவுகளும் இணையத்தில் குவிந்தது குறிப்பிடத்தக்கது.