"அப்படி மட்டும் சொல்லாதீங்க.. என்னோட பாதி சம்பளத்த தரேன்" - உச்ச நீதிமன்ற நீதிபதி
ஆங்கிலேயர்கள் காலத்தில் கொண்டு வரப்பட்ட சில நடைமுறைகள் பிற்போக்காகவும் நவீனத்துவத்துக்கு ஏற்ற வகையில் இல்லாத காரணத்தாலும் அவை கால போக்கில் மாற்றப்பட்டு வருகின்றன.
நீதிமன்றத்தில் பின்பற்றப்பட்டு வரும் பழைய நடைமுறைகள்:
சமீப காலமாக, நீதித்துறையில் பல்வேறு சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. ஆங்கிலேயர்கள் காலத்தில் கொண்டு வரப்பட்ட சில நடைமுறைகள் பிற்போக்காகவும் நவீனத்துவத்துக்கு ஏற்ற வகையில் இல்லாத காரணத்தாலும் அவை கால போக்கில் மாற்றப்பட்டு வருகின்றன. குறிப்பாக, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இதற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
அந்த வகையில், நீதிபதிகளை 'மை லாட்' என்றும் 'யுவர் லார்ட்ஷிப்' என்றும் அழைக்கும் நடைமுறை பல ஆண்டுகாலமாக தொடர்ந்து வருகிறது. ஆனால், இம்மாதிரியாக அழைப்பது ஆங்கிலேயர் கால நடைமுறை என்றும் அடிமைத்தனத்தை குறிக்கும் வகையில் இருப்பதாகவும் பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிக்க: Mahua Moitra: 'கேவலமான கேள்விகள் கேட்கிறார்கள்' - மக்களவை நெறிமுறைக் குழுவை விளாசித் தள்ளிய மஹூவா மொய்த்ரா!
இந்திய பார் கவுன்சில் நிறைவேற்றிய தீர்மானம்:
நீதிபதிகளை 'மை லாட்', 'யுவர் லார்ட்ஷிப்' என வழக்கறிஞர்கள் அழைக்கக்கூடாது என இந்திய பார் கவுன்சில் கடந்த 2006ஆம் தீர்மானம் நிறைவேற்றியது. தீர்மானம் நிறைவேற்றப்பட்டாலும் அது ஏட்டளவில் மட்டுமே உள்ளது. நடைமுறையில் பின்பற்றுவதில்லை. ஆனால், 'மை லாட்', 'யுவர் லார்ட்ஷிப்' என அழைக்கும் போதெல்லாம் நீதிபதிகள் அதற்கு அதிருப்தி தெரிவித்து வந்துள்ளனர்.
இந்த நிலையில், உச்ச நீதிமன்றத்தில் ஒரு சுவாரஸ்ய சம்பவம் நடந்துள்ளது. நீதிமன்றத்தில் விசாரணை நடந்து கொண்டிருந்தபோது, நீதிபதி பி.எஸ். நரசிம்மாவை மூத்த வழக்கறிஞர் ஒருவர், 'மை லாட்', 'யுவர் லார்ட்ஷிப்' என தொடர்ந்து அழைத்து வந்துள்ளார். இதை கேட்டு கொண்டிருந்த நீதிபதி நரசிம்மா ஒரு கட்டத்தில் பொறுமையை இழந்தார்.
"அப்படி மட்டும் சொல்லாதீங்க.. என்னோட பாதி சம்பளத்த தரேன்"
திடீரென எதிர்வினையாற்றிய அவர், "மை லார்ட் என்று எத்தனை முறை சொல்வீர்கள்? இதைச் சொல்வதை நிறுத்தினால், என் சம்பளத்தில் பாதி தருகிறேன்" என தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், "அதற்கு பதிலாக நீங்கள் ஏன் 'Sir' என அழைக்கக்கூடாது? மூத்த வழக்கறிஞர் "மை லார்ட்" என்று எத்தனை முறை உச்சரித்தார் என்று எண்ண தொடங்க போகிறேன்" என்றார்.
நேற்று முன்தினம் நடந்த விசாரணையின்போது இந்த சம்பவம் நடந்துள்ளது. நீதிபதிகள் ஏ. எஸ். போபண்ணா, பி.எஸ். நரசிம்மா ஆகியோர் கொண்ட அமர்வு வழக்கு ஒன்றை விசாரித்து கொண்டிருந்தபோது, இந்த சம்பவம் நடந்துள்ளது.
இதையும் படிக்க: Cauvery Water Issue: இன்று கூடும் காவிரி மேலாண்மை ஆணையம்.. முரண்டு பிடிக்கும் கர்நாடகா! தமிழ்நாட்டிற்கு கிட்டுமா நியாயம்?