Sanatan Dharma Row: சனாதன தர்ம விவகாரம்... அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்..
சனாதன தர்ம விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு மீதான விசாரணையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
![Sanatan Dharma Row: சனாதன தர்ம விவகாரம்... அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்.. Supreme Court issued a notice to Minister Udayanidhi to respond to the writ petition filed regarding the Sanatan dharma Row controversy Sanatan Dharma Row: சனாதன தர்ம விவகாரம்... அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/22/e4a46aa99e18a9a2df5820ad17c49e171695367681041589_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
சனாதன ஒழிப்பு மாநாடு தொடர்பாக தமிழ்நாடு அரசு, அமைச்சர்கள் உதயநிதி, சேகர் பாபு ஆகியோருக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தொடர்ந்து மனுதாரர் ஏன் உயர்நீதிமன்றத்தை நாடக்கூடாது என உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
என்ன பேசினார் உதயநிதி ஸ்டாலின்..?
முன்னதாக சென்னையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் பேசிய அமைச்சர் உதயநிதி, ““இந்த மாநாட்டின் தலைப்பே மிகவும் சிறப்பாக அமைந்திருக்கின்றது. நீங்கள் `சனாதன எதிர்ப்பு மாநாடு’ என்று போடாமல் `சனாதன ஒழிப்பு மாநாடு’ என்று போட்டிருக்கிறீர்கள். அதற்கு என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். சிலவற்றை நாம் ஒழிக்கத்தான் வேண்டும். எதிர்க்க முடியாது.
உதாரணமாக கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்கக்கூடாது. ஒழித்துக்கட்ட வேண்டும். அப்படித்தான் இந்த சனாதனம். சனாதனம் என்பதை எதிர்ப்பதைவிட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டிய முதல் காரியம் ஆகும். எனவே இந்த மாநாட்டிற்கு மிகப் பொருத்தமான தலைப்பு வைத்திருக்கிறீர்கள். சனாதனம் என்றால் என்ன? சனாதனம் என்கிற பெயரே சமஸ்கிருதத்திலிருந்து வந்ததுதான்.
மக்களை ஜாதிகளாகப் பிரித்து தனித்தனியாக இருக்கவேண்டும் என்று சொன்னதுதான் சனாதனம். ஆனால், கலைஞர் அவர்களோ எல்லா சமூக மக்களையும் ஒரே இடத்தில் குடி அமர்த்தி அந்த இடத்திற்கு, `சமத்துவபுரம்’ என்று பெயர் வைத்து சனாதனத்திற்குச் சம்மட்டி அடி கொடுத்தவர்தான் நம்முடைய கலைஞர் அவர்கள். ஆகவே சனாதனம் வீழட்டும், திராவிடம் வெல்லட்டும் என்று சனாதனத்தை பற்றி பேசியிருந்தார்.
அமைச்சர் உதயநிதியின் இந்த கருத்திற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு சனாதன தர்மத்தை பின்பற்றுவோர் மனதை புண்படுத்துவதாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்டுக்கு முன்னாள் நீதிபதிகள் உட்பட 262 பேர் கையெழுத்திட்ட புகார் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, பாஜகவை சேர்ந்த பல தலைவர்களும் உதயநிதிக்கு கடும் எதிர்ப்புகளை பதிவு செய்தனர். டெல்லி, பீகாரில் அமைச்சர் உதயநிதிக்கு எதிராக வழக்கும் தொடரப்பட்டுள்ளது. அயோத்தி சாமியார் என்பவர் அமைச்சர் உதயநிதிக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இந்நிலையில் சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் பி. ஜெகநாத் சார்பில் ஜி.பாலாஜி உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், “செப்டம்பர் 2 ஆம் தேதி சனாதன ஒழிப்பு மாநாடு நடைபெற்றது. அதில் ஹிந்து மதம், சனாதன தர்மத்தை குறி வைத்து தகாத முறையில் பேசி அவமதிக்கும் வகையில் நடத்தப்பட்டுள்ளது. டெங்கு மலேரியா போல் சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும் என தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார். தமிழக அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர் பாபு பங்கேற்றது அரசமைப்பு சாசனத்தின் 25,26 பிரிவுகள் மீறப்பட்டது, முரணானது என அறிவிக்க வேண்டும்.
இந்த மாநாட்டிற்கு தமிழீழ விடுதலை புலிகள் போன்ற பயங்கரவாத இயக்கம் மூலம் நிதி வழங்கப்பட்டுள்ளதா என்பதை சிபிஐ விசாரணை செய்ய வேண்டும். அதற்கு உத்தரவிட வேண்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ரிட் மனு மீதான விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் அனிருதா போஸ், பேலா எம். திரிவேதி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது சனாதன தர்மம் குறித்து பேசியது தொடர்பாக அமைச்சர் உதயநிதி பதிலளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் சனாதன ஒழிப்பு மாநாட்டில் அமைச்சர்கள் ஏன் பங்கேற்றார்கள் என்பது குறித்தும் தமிழ்நாடு அரசு பதிலளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் இந்த சர்ச்சை தொடர்பாக ஏன் உயர்நீதிமன்றத்தை நாட கூடாது என மனுதாரருக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வியும் எழுப்பி உள்ளனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)