Transgender Reservation: சமூக நீதியின் அடுத்த உச்சம்... திருநர்களுக்கு இட ஒதுக்கீடு? உச்ச நீதிமன்றம் அதிரடி
கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் திருநர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
![Transgender Reservation: சமூக நீதியின் அடுத்த உச்சம்... திருநர்களுக்கு இட ஒதுக்கீடு? உச்ச நீதிமன்றம் அதிரடி Supreme Court asks Centre state to reply on plea seeking reservation for transgender persons in education employment Transgender Reservation: சமூக நீதியின் அடுத்த உச்சம்... திருநர்களுக்கு இட ஒதுக்கீடு? உச்ச நீதிமன்றம் அதிரடி](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/26/592df928d84330e1fe850f38e330d80b1693055199532729_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ஒடுக்கப்பட்ட, வாய்ப்பு மறுக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்கும் வகையில் இடஒதுக்கீடு முறை அமல்படுத்தப்பட்டது. இந்தியா மட்டும் இன்றி அமெரிக்கா உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளில் இடஒதுக்கீடு முறை அமலில் உள்ளது. இந்தியாவை பொறுத்தவரையில் சாதியின் அடிப்படையில் இங்கு பாகுபாடு காட்டப்பட்டது என்றால், அமெரிக்க போன்ற நாடுகளில் நிறத்தின் அடிப்படையில் இனத்தின் அடிப்படையில் மக்கள் ஒடுக்கப்பட்டனர்.
எனவே, ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக கல்வியில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மக்களை முன்னேற்றிவிடும் நோக்கில் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் தேர்தலிலும் அவர்களுக்கான இடத்தை உறுதி செய்து வருகிறது இடஒதுக்கீடு முறை. கல்வியிலும் சமூக அளவிலும் பின்தங்கிய மக்களுக்கு மட்டும் இன்றி, பெண்களுக்கும் இடஒதுக்கீடு முறை அமலில் உள்ளது. பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில், உள்ளாட்சி அமைப்புகளில் 33 சதவிகித இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது.
சமூக நீதியின் அடுத்த உச்சம்:
அதேபோல, திருநர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது நீண்டகால கோரிக்கையாக இருந்து வருகிறது. இச்சூழலில், கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் திருநர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவில், "அரசியலமைப்பின் 16வது பிரிவின் கீழ் (பொது வேலை வாய்ப்புகளில் சமத்துவம்) இடஒதுக்கீட்டை பெற திருநர்களுக்கு உரிமை உண்டு.
திருநர்களுக்கு போதிய பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு திறன் திட்டங்கள் இல்லாததால், இந்த ஒடுக்கப்பட்ட பிரிவினருக்கு கணிசமான அளவு வேலை வாய்ப்புகள் இல்லை. திருநர்களுக்கான பல்வேறு உரிமைகளை திருநர்கள் (உரிமைகள் பாதுகாப்பு) சட்டம், 2019 வழங்கியுள்ளது. ஆனால், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்கவில்லை" என குறிப்பிடப்பட்டது.
இந்த மனுவை கேரளாவை சேர்ந்த திருநங்கை சுபி என்பவர் தாக்கல் செய்திருந்தார். மனுதாரரின் சார்பாக வழக்கறிஞர்கள் காளீஸ்வரம் ராஜ் மற்றும் துளசி கே. ராஜ் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் ஆஜராகினர்.
திருநர்களுக்கு இட ஒதுக்கீடா?
இந்த வழக்கை இந்தியா தலைமை நீதிபதி டி. ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு, இன்று விசாரணைக்கு எடுத்து கொண்டது. அப்போது, இந்த மனுவுக்கு பதில் அளிக்கக் கோரி மத்திய, மாநில, யூனியன் பிரதேச அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
நேற்று முன்தினம்தான், உள்ளாட்சி அமைப்புகளில் திருநர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
"திருநர்களின் வாழ்க்கை பல நூற்றாண்டுகளாக பாரபட்சம் கொண்டதாக உள்ளது. அவா்கள் தங்கள் நிலையை தெரிவிக்க முடியாததால் இந்த சமுதாயத்தால் மிக மோசமாகவும், சொந்த குடும்பங்களாலும் இரக்கமின்றியும் ஒதுக்கி வைக்கப்படுகின்றனா். திருநர்களுக்கான அரசின் நலத்திட்டங்கள் இதுவரை சரியான முறையில் கிடைக்கவில்லை.
சமூக நலன் கிடைக்க போதுமான கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும். நாடு சுதந்திரமடைந்து 76 ஆண்டுகள் கடந்த நிலையில் ஏன் இந்த பாரபட்சம்? இதை இன்னும் ஏன் அகற்ற முடியவில்லை? என்ற கேள்வி எழுகிறது" என சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)