NEET OBC Reservations: நீட் தேர்வு மாணவர் சேர்க்கையில் இடஒதுக்கீடு - உச்சநீதிமன்றம் ஒப்புதல்
மருத்துவ நீட் தேர்வில் இடஒதுக்கீடு முறையை பின்பற்ற உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.
நாடு முழுவதும் உள்ள மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வு மூலம் மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது. அதில் இளங்கலை மற்றும் முதுகலை மருத்துவபடிப்புகளுக்கான நீட் தேர்வு மூலம் நடத்தப்படும் மாணவர் சேர்க்கையில் பிற்படுத்தப்பட்ட வகுப்புகளுக்கான 27% மற்றும் முற்பட்டசாதியினருக்கான 10% இடஒதுக்கீடு பின்பற்றப்படும் என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது. இது தொடர்பாக மத்திய அரசு ஜூலை 29ஆம் தேதி ஒரு அறிவிப்பை வெளியிட்டிருந்தது.
இந்த அறிவிப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் சந்திரசூட் மற்றும் ஏ.எஸ்.போபண்ணா அமர்வு முன்பாக கடந்த இரண்டு நாட்களாக விசாரிக்கப்பட்டு வந்தது. இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. அதன்படி நீட் மூலம் நடைபெறும் மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையில் இடஒதுக்கீடு முறை பின்பற்றலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
Supreme Court allows NEET-PG Counselling for 2021-2022 based on existing EWS/OBC reservation
— ANI (@ANI) January 7, 2022
இந்த தீர்ப்பில் சில இடைக்கால உத்தரவுகளையும் உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. அதன்படி இந்தாண்டு மருத்துவ மாணவர் சேர்க்கையில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் முற்பட்டசாதியில் பொருளாதாரத்தில் நலிந்த வகுப்புகளுக்கான இடஒதுக்கீடு அமல்படுத்தலாம். இதை 2021-22 ஆண்டு நீட் மாணவர் சேர்க்கையில் அமல்படுத்தலாம்.அதேபோல் இந்தாண்டு மாணவர் சேர்க்கைக்கு முற்பட்டசாதியில் பொருளாதாரத்தில் நலிந்தவர்களை தீர்மானிக்க 8 லட்சம் ரூபாய் என்று வரையறுக்கப்பட்டத்தை பின்பற்றலாம். இந்த வரையறை தொடர்பாக வரும் மார்ச் மாதம் மீண்டும் விசாரிக்கப்படும். அதுவரை மாணவர்களின் நலன் கருதி இதை பயன்படுத்தலாம் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
முன்னதாக கடந்த அக்டோபர் மாதம் முதுகலை நீட் தேர்விற்கு பின்பு இந்த வழக்கு தொடரப்பட்டது. அதில் மத்திய அரசு சார்பில் முற்பட்ட சாதியினருக்கான 8 லட்சம் ரூபாய் என்ற வரையறையை மீண்டும் பரிசீலனை செய்வதாக தெரிவித்திருந்தது. அதன்பின்னர் இதை செய்ய பாண்டே தலைமையில் ஒரு குழுவை நியமித்தது. அந்த குழு கடந்த டிசம்பர் 31ஆம் தேதி தனது அறிக்கையை தாக்கல் செய்தது. அதில் முற்பட்ட சாதியினருக்கான இடஒதுக்கீடு வரையறையை 8 லட்சம் ரூபாய் என்றே தொடரலாம் என்று தெரிவித்திருந்தது. அவர்களின் பரிந்துரைக்கு பிறகு இந்த வழக்கு மீண்டும் அவசர வழக்காக எடுத்து விசாரிக்கப்பட்டது. அந்த வழக்கில் அனைவரின் வாதத்தையும் கேட்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள் இன்று தங்களுடைய தீர்ப்பை அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: இனி வழக்கமான பாஸ்போர்ட் வேண்டாம்.. டிஜிட்டலுக்கு மாறும் மத்திய அரசு.. வருகிறது இ பாஸ்போர்ட்.!!