Spicejet Employee: பாதுகாப்பு படை வீரரின் கன்னத்தில் பளேர்..! ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் ஸ்பைஸ்ஜெட் பெண் ஊழியர் சம்பவம்
Spicejet Employee: ஜெய்பூரில் பாதுகாப்பு படை வீரர் ஒருவரை ஸ்பைஸ்ஜெட் நிறுவன பெண் ஊழியர், கன்னத்தில் அறைந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
Spicejet Employee: ஜெய்பூர் விமான நிலையத்தில் பாதுகாப்பு படை வீரர் அறைந்த, ஸ்பைஸ்ஜெட் நிறுவன பெண் ஊழியர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பாதுகாப்பு படை வீரரை அறைந்த பெண்:
ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் உள்ள சிசிடிவியில் பதிவான காட்சியில், ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தைச் சேர்ந்த பெண் ஊழியர் ஒருவர், மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படையின் (சிஐஎஸ்எஃப்) உதவி காவல் ஆய்வாளரை அறைந்ததை காண முடிகிறது. வாக்குவாதத்தின் போது ஆவேசமடைந்த பெண், அதிகாரியை தாக்கியதை காட்சிகள் காட்டுகின்றன. இச்சம்பவத்தைத் தொடர்ந்து, அரசு ஊழியரைத் தாக்கியதாக அந்த பெண் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேநேரம், தங்களது ஊழியர் "பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டதாக" ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் குற்றம்சாட்டியுள்ளது.
"SpiceJet is taking immediate legal action in this serious case of sexual harassment against its female employee and has approached the local police. We stand firmly by our employee and are committed to providing her with full support."pic.twitter.com/w7GfjjXd17 https://t.co/mb3vKJIoic
— Sameer Allana (@HitmanCricket) July 11, 2024
சி.ஐ.எஸ்.எஃப்., படைப்பிரிவு சொல்வது என்ன?
சிஐஎஸ்எஃப் அதிகாரிகளின் கூற்றுப்படி, ”அதிகாலை 4 மணியளவில் ஸ்பைஸ்ஜெட் ஊழியர் அனுராதா ராணி மற்ற ஊழியர்களுடன் விமான நிலையத்திற்குள் நுழைய விடாமல் தடுத்து நிறுத்தப்பட்டார். வாயில் வழியாக உள்ளே செல்ல உரிய அங்கீகாரம் இல்லாததால், உதவி காவல் ஆய்வாளர் கிரிராஜ் பிரசாத் இந்த பணியை மேற்கொண்டுள்ளார். அருகில் உள்ள நுழைவாயிலில் நடைபெறும் விமானக் குழுவினருக்கான ஸ்கிரீனிங்கிற்குச் செல்லும்படி வலியுறுத்தியுள்ளார். அப்போது இருதரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில், அனுராதா ராணி, பாதுகாப்பு படையை சேர்ந்த கிரிராஜ் பிரசாத்தை அறைந்தார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் சொல்வது என்ன?
ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ அறிக்கையில், ஊழியரிடம் "சரியான விமான நிலைய நுழைவு பாஸ்" இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் " தங்களது ஊழியர் சிஐஎஸ்எஃப் பணியாளரால், பணி நேரம் முடிந்ததும் தன்னை வந்து வீட்டில் சந்திக்கச் சொன்னது உட்பட, தகாத மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாத வார்த்தைகளுக்கு உட்படுத்தப்பட்டார்" என்று குற்றம் சாட்டியுள்ளது. தங்களது பெண் ஊழியருக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் தொடர்பான இந்த கடுமையான வழக்கில் உடனடி சட்ட நடவடிக்கை எடுக்கக் கோரி, உள்ளூர் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளது. எங்கள் ஊழியருக்கு முழு ஆதரவுடன் செயல்படுவோம் என்றும் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, பாரத் நியாய சன்ஹிதா (பிஎன்எஸ்) பிரிவுகள் 121 (1) (அரசு ஊழியரை தனது கடமையிலிருந்து தடுக்க தானாக முன்வந்து காயப்படுத்துதல்) மற்றும் 132 (பொது ஊழியரைத் தாக்குதல்) ஆகிய பிரிவுகளின் கீழ் பெண் ஊழியர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும், அனுராதா ராணி கைது செய்யப்பட்டு, அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.