ISRO SpaDeX Mission: அப்படிபோடு..! முதல் முறையாக உயிரை விண்வெளிக்கு அனுப்பிய இஸ்ரோ..! ஸ்பேஸ் டாக்கிங் எப்போது?
ISRO SpaDeX Mission: விண்வெளியில் இரண்டு செயற்கைகோள்களை இணைக்கும் திறனை சோதிக்கும் நோக்கில், SpaDeX விண்கலத்தை இஸ்ரோ வெற்றிகரமாக ஏவியுள்ளது.
ISRO SpaDeX Mission: இஸ்ரோ முதல்முறையாக ஒரு உயிரை வெற்றிகரமாக விண்வெளிக்கு அனுப்பி சாதனை படைத்துள்ளது.
ஸ்பேடெக்ஸ் மிஷன்:
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள முதல் ஏவுதளத்தில் இருந்து PSLV-C60 ராக்கெட் மூலமாக, ஸ்பேஸ் டாக்கிங் சோதனைக்காக இரண்டு செயற்கைகோள்களை நேற்று இரவு விண்ணில் செலுத்தியது. முதலில் இரவு 9:58 மணிக்கு திட்டமிடப்பட்ட லிஃப்ட்-ஆஃப், தாமதத்திற்கான காரணத்தைக் குறிப்பிடாமல் இரவு 10 மணிக்கு மாற்றப்பட்டது. மைக்ரோ கிராவிட்டியில் தாவரங்கள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதை ஆய்வு செய்ய கீரை கால்சஸை விண்வெளிக்கு அனுப்புவது இந்த சோதனையில் அடங்கும். இப்படி ஒரு உயிரி பொருளை இஸ்ரோ விண்வெளிக்கு அனுப்புவது இதுவே முதல்முறையாகும்.
வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்ட செயற்கைகோள்கள்:
விண்கலம் ஏ (SDX01) மற்றும் விண்கலம் B (SDX02) ஆகிய இரண்டு விண்கலங்களும் வெற்றிகரமாகப் பிரிக்கப்பட்டு, 15 நிமிட பயணத்திற்குப் பிறகு பூமிக்கு மேலே 475 கிமீ தொலைவில், நிர்ணயிக்கப்பட்ட சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டதாக இஸ்ரோ அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.
இந்தியாவின் விண்வெளித் திட்டத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாகப் போற்றப்படும் SpaDeX பணியானது, ஸ்பேஸ் டாக்கிங், மனித விண்வெளிப் பயணத்திற்கான முக்கியமான தொழில்நுட்பம், செயற்கைக்கோள் சேவை மற்றும் எதிர்காலப் பணிகளான ககன்யான் திட்டம் மற்றும் இந்தியாவிற்கான விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தை நிறுவுதல் போன்றவற்றில் நாட்டின் திறனை நிறுவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 2035க்குள் இந்தியாவின் சொந்த விண்வெளி நிலையம் அமைக்க பணிகள் நடைபெற்று வருகின்றன.
VIDEO | PSLV-C60 Space Docking Experiment (SpaDeX) mission launched from Satish Dhawan Space Centre in Sriharikota.
— Press Trust of India (@PTI_News) December 30, 2024
A cost-effective technology demonstrator mission for in-space docking, it makes India join an elite list featuring China, Russia and the US. pic.twitter.com/5JQ9KjgaVH
ஸ்பேஸ் டாக்கிங் எப்போது நிகழும்?
ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டது தொடர்பாக இஸ்ரோ தலைவர் டாக்டர்.எஸ்.சோமநாத் பேசுகையில், "ராக்கெட் செயற்கைக்கோள்களை சரியான சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தியுள்ளது. SpaDeX செயற்கைக்கோள்கள் ஒன்றன் பின் ஒன்றாக நகர்ந்துள்ளன. மேலும் காலப்போக்கில் டாக்கிங் செயல்முறைக்கு முன்பாக சுமார் 20 கிமீ தூர இடைவெளியில் பயணிக்கும். டாக்கிங் ஜனவரி 7 ஆம் தேதி நிகழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது” என்று கூறினார்.
செயற்கைகோள் விவரங்கள்:
பிஎஸ்எல்வி-சி60 ராக்கெட், 44.5 மீட்டர் உயரத்திற்கு 220 கிலோ எடையுள்ள இரண்டு விண்கலங்களை சுமந்து சென்றது சேசர் (SDX01) மற்றும் Target (SDX02) என பெயரிடப்பட்ட இந்த செயற்கைகோள்கள் ஒரே வேகத்திலும் தூரத்திலும் ஒன்றாக பயணிக்கும். மேலும் தொடர்ச்சியான சுழற்சிகளுக்குப் பிறகு, சுமார் 470 கிமீ உயரத்தில் ஒன்றிணையும். ஆரம்பத்தில் 5 கிமீ தொலைவில் வைக்கப்படும் இந்த செயற்கைக்கோள்கள், ஒன்றாக இணைவதற்கு முன் வெறும் 3 மீட்டர் இடைவெளியில் பிரிக்கப்படும். இந்த சிக்கலான செயல்முறையானது லிஃப்ட்-ஆஃப் செய்யப்பட்ட 10-14 நாட்களுக்குப் பிறகு முயற்சி செய்யப்படும்.
SpaDeX ஐத் தவிர, ISRO தொழில்துறை மற்றும் கல்வித்துறையிலிருந்து 24 பேலோடுகளைக் கொண்ட PSLV சுற்றுப்பாதை பரிசோதனை தொகுதி-4 (POEM-4) சோதனையையும் நடத்தும். இந்த பேலோடுகள், PSLVயின் நான்காவது கட்டத்தைப் பயன்படுத்தி, சுற்றுப்பாதையில் உள்ள நுண் புவியீர்ப்புச் சூழலை ஆராய்ந்து, மூன்று முதல் நான்கு மாதங்கள் வரை செயல்பாட்டில் இருக்கும்.