South Korea Marriages : வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு குறைவான திருமணங்கள்...சிக்கி தவிக்கும் தென்கொரியா..!
கடந்த ஆண்டு, 1 லட்சத்து 92 ஆயிரம் தம்பதிகள் திருமணம் செய்து கொண்டதாக தென் கொரியாவின் புள்ளிவிவரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
உலக அளவில் சீனா, இந்தியா ஆகிய நாடுகளின் மக்கள் தொகை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. உலக மக்கள் தொகையில் சீனா முதலிடத்திலும் இந்தியா இரண்டாவது இடத்திலும் அமெரிக்கா மூன்றாவது இடத்திலும் உள்ளது.
ஆனால், இந்தாண்டில் சீனாவை பின்னுக்கு தள்ளி இந்தியா முதலிடம் பிடிக்கும என ஐக்கிய நாடுகள் சபை தகவல் வெளியிட்டுள்ளது.
தென் கொரியாவில் என்னதான் பிரச்னை?
நிலைமை இப்படியிருக்க, ஜப்பானிலும் தென் கொரியாவிலும் நிலை தலைகீழாக உள்ளது. உலகிலேயே மிக குறைந்த அளவில் பிறப்பு விகிதத்தை கொண்ட நாடாக தென் கொரியா உள்ளது. இத்தகைய சூழலில், கடந்த ஆண்டு, அங்கு திருமணம் செய்து கொள்பவர்களின் எண்ணிக்கையும் வரலாற்றில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது.
கடந்த ஆண்டு, 1 லட்சத்து 92 ஆயிரம் தம்பதிகள் திருமணம் செய்து கொண்டதாக தென் கொரியாவின் புள்ளிவிவரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. இது, பத்தாண்டுகளுக்கு முன்பு, 2012ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டவர்களின் எண்ணிக்கையை விட 40 சதவிகிதம் குறைவு.
அதாவது, 2012ஆம் ஆண்டு, அங்கு 3 லட்சத்து 27 ஆயிரம் தம்பதியினர் திருமணம் செய்து கொண்டனர். தென் கொரியாவில் திருமணம் தொடர்பான புள்ளிவிவரங்கள், கடந்த 1970ஆம் ஆண்டு முதல் பதிவு செய்யப்பட்டு வருகிறது. அந்த காலக்கட்டத்தில் இருந்து தற்போது வரை, பதிவான மிக குறைந்த திருமண எண்ணிக்கை இதுவாகும்.
திருமணம் செய்து கொள்ளும் பெண்களின் சராசரி வயது அதிகரிப்பு:
முதல் முறையாக திருமணம் செய்து கொள்ளும் ஆண்களின் சராசரி வயது 33.7 ஆக உள்ளது. வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு ஆண்களின் சராசரி திருமண வயது உச்சம் தொட்டுள்ளது. அதே நேரத்தில், முதல் முறையாக திருமணம் செய்து கொள்ளும் பெண்களின் சராசரி வயதும் அதிகரித்துள்ளது. அது, 31.3 வயதாக உள்ளது.
பத்தாண்டுகளுக்கு முன்பு இருந்த ஆண்களின் சராசரி திருமண வயதை விட தற்போது கூடுதலான வயதில்தான் ஆண்களும் பெண்களும் திருமணம் செய்து கொள்கின்றனர். எடுத்துக்காட்டாக சொல்ல வேண்டும் என்றால், பத்தாண்டுகளுக்கு முன்பு ஆண்கள் 28 வயதில் திருமணம் செய்து கொண்டால் தற்போது 29 வயது ஆறு மாதத்தில் திருமணம் செய்து கொள்கிறார்கள்.
அந்த வகையில் பெண்கள், 26 வயதில் திருமணம் செய்து கொண்டால் தற்போது 27 வயது 9 மாதங்களில் திருமணம் செய்து கொள்கிறார்கள். கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்ட 80 சதவீத தம்பதிகள் முதல் முறையாக திருமணம் செய்து கொள்ளும் தம்பதிகள் ஆவர்.
குறைவான பிறப்பு விகிதத்தால் தென் கொரியா பிரச்னையை சந்தித்து வரும் சூழலில், தற்போது இந்த பிரச்னை விஸ்வரூபம் எடுத்துள்ளது.
கடந்தாண்டு, அங்கு, 2 லட்சத்து 49 ஆயிரம் குழந்தைகளே பிறந்துள்ளன. தென் கொரிய வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு குறைவான எண்ணிக்கை இதுவாகும். பிறப்பு விகிதத்தை அதிகரிக்கும் முயற்சியில் 2006 ஆம் ஆண்டு முதல் தென் தொரியா அரசாங்கம் சுமார் 280 டிரில்லியன் வோன்களை ($213 பில்லியன்) செலவிட்டுள்ளது.