BCCI : கங்குலி, ஜெய்ஷாவுக்காக விதிகளையே மாற்றிய பிசிசிஐ.. ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம்
பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி மற்றும் செயலாளர் ஜெய் ஷா ஆகியோரது பதவிக்காலத்தை நீட்டிக்கும் வகையில் வாரியத்தின் விதிகளில் முன்மொழியப்பட்ட மாற்றங்களை உச்ச நீதிமன்றம் புதன்கிழமை அன்று ஏற்றுக்கொண்டது.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) தற்போதைய தலைவர் சவுரவ் கங்குலி மற்றும் செயலாளர் ஜெய் ஷா ஆகியோரது பதவிக்காலத்தை நீட்டிக்கும் வகையில் வாரியத்தின் விதிகளில் முன்மொழியப்பட்ட மாற்றங்களை உச்ச நீதிமன்றம் புதன்கிழமை அன்று ஏற்றுக்கொண்டது.
.@BCCI: #SupremeCourt rules in favour of @SGanguly99 and @JayShah. #BCCI #SouravGanguly @SGangulyFanClub @SouravGangulyCo@BCCIdomestic#cricketnewshttps://t.co/wqE19WbR0o
— The Telegraph (@ttindia) September 14, 2022
பிசிசிஐ நிரிவாகிகளின் பதவிக்காலம் முடிந்த உடனேயே, அவர்களால் அந்த பதவிகளில் தொடர முடியாது. குறிப்பிட்ட காலத்திற்கு பிறகே, அவர்கள் மீண்டும் அந்த பதவியில் தொடரும் வகையில் விதி உள்ளது. இதை மாற்றி அமைக்கும் வகையில், பிசிசிஐ சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
மாநில சங்கத்தில் 6 ஆண்டுகள், பிசிசிஐயில் 6 ஆண்டுகள் உள்பட 12 ஆண்டுகள் பதவி வகிக்கலாம் என உச்ச நீதிமன்றம் தனது உத்தரவில் இன்று கூறியுள்ளது. பிசிசிஐயில் கங்குலி மற்றும் ஷாவின் மூன்றாண்டு பதவிக் காலம் விரைவில் முடிவடைகிறது.
நீதிபதிகள் டி. ஒய். சந்திரசூட் மற்றும் ஹிமா கோஹ்லி ஆகியோர் அடங்கிய அமர்வு, "அலுவலகப் பொறுப்பாளர் தொடர்ந்து 12 ஆண்டுகள் பதவியில் இருக்கலாம். இதில், மாநில சங்கத்தில் ஆறு ஆண்டுகள், பிசிசிஐயில் ஆறு ஆண்டுகள் ஆகியவை அடங்கும்.
பிசிசிஐ மற்றும் மாநில சங்கத்தில் ஒரு அலுவலகப் பொறுப்பாளர் ஒரு குறிப்பிட்ட பதவியில் இரண்டு முறை தொடர்ந்து பணியாற்றலாம். அதன் பிறகு அவர் மூன்று ஆண்டுகள் அப்பதவியில் தொடர கூடாது. குறிப்பிட்ட காலத்திற்கு பதவியில் தொடரக் கூடாது என சொல்வதின் நோக்கமே விரும்பத்தகாத ஏகபோகங்களை உருவாக்குவதை தவிர்ப்பதே ஆகும்" என்றார்.
நிர்வாகிகளுக்கு விதிக்கப்பட்ட கட்டாய தடை காலத்தை ரத்து செய்ய பிசிசிஐ தங்களது விதிகளில் மாற்றம் மேற்கொண்டது. இதன் மூலம், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மகன் ஜெய் ஷா ஆகியோர், ஆறு ஆண்டுகளாக மாநில கிரிக்கெட் சங்களில் பதவி வகித்து வந்தாலும், அவர்களின் பதவிகளில் தொடர முடியும்.
முன்னதாக, நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையிலான கமிட்டி பிசிசிஐயில் சீர்திருத்தங்களை பரிந்துரைத்தது. அவை உச்ச நீதிமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. உச்ச நீதிமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட பிசிசிஐயின் அரசியலமைப்பு, மாநில கிரிக்கெட் சங்கத்திலோ அல்லது பிசிசிஐயிலோ தலா மூன்று ஆண்டுகள் தொடர்ந்து இரண்டு முறை பணியாற்றிய கட்டாயமாக மூன்றாண்டு தடை காலத்தை விதித்தது.
கங்குலி வங்க கிரிக்கெட் சங்கத்தின் நிர்வாகியாக இருந்தபோது, ஷா குஜராத் கிரிக்கெட் சங்கத்தின் நிர்வாகியாக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.