மத்திய அரசின் 12 மணி நேர வேலை சட்டத்தால் நன்மைகள் சில... பாதிப்புகள் பல...
”12 மணி நேரம் ஒரே வேலையில் ஈடுபட்டிருந்தால், உடல் பருமன் அதிகரிக்கும், நீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்தம், இதய நோய்கள் ஏற்படலாம்”
தொழில் நிறுவனங்கள் தொழிலாளர் நலன் சார்ந்து கடைப்பிடிக்க வேண்டிய 44 சட்டங்களை நீக்கிவிட்டு புதிய சட்டத்தொகுப்பை மத்திய அரசு கொண்டு வந்தது. இதில் 8 மணி நேர வேலை உரிமை, சட்டவிரோதக் கதவடைப்பு மற்றும் வேலை நீக்கம் ஆகியவற்றுக்கு எதிராகப் போராடும் உரிமை உள்ளிட்ட பல அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்க உருவாக்கப்பட்ட மூன்று முக்கிய தொழிற்சங்கச் சட்டங்களும் நீக்கப்பட்டன.
தற்போது உள்ள தொழிலாளர் சட்ட விதிகளின்படி, ஒரு பணியாளர் நாளொன்றுக்கு 8 மணி நேரம் என வாரம் 6 நாட்கள் வேலை செய்ய வேண்டும். தற்போது தினமும் 12 மணி நேரம் வரை பணியாளர்களுக்கு வேலை கொடுத்து, 3 நாட்கள் விடுமுறை வழங்கும் முறையை மத்திய அரசால் கொண்டு வரப்பட்டு உள்ளது.
இதை ஒவ்வொரு தொழிலாளியின் ஒப்புதலுடன் நிறுவனங்கள் மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்து உள்ள மத்திய அரசு, அடிப்படை ஊதியம் 50% ஆக இருக்க வேண்டும் என்றும், வீட்டு வாடகைப்படி, அகவிலைப்படி, பயணப்படி ஆகியவை 50% ஆக இருக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்து உள்ளது.
4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை என்ற மத்திய அரசின் இந்த புதிய சட்டத்தால், 3 நாட்கள் ஓய்வு கிடைப்பதுடன் வெளியூர்களில் தங்கி பணிபுரிபவர்கள் சொந்த ஊர் சென்று குடும்பத்துடன் நேரம் செலவிடலாம். 6 நாட்கள் பணிக்கு வரும் அலைச்சல், பயண செலவு, பயண நேரம் குறையும். இதைத் தவிர்த்து சாதகமான வேறு எதையும் இதில் கூற முடியவில்லை. இதனால் தொழிலாளர்களுக்கு பாதங்களே அதிகம் என மருத்துவர்கள், தொழிற்சங்கத்தினர் தெரிவிக்கின்றனர். குறிப்பாக அடிப்படை ஊதியம் 50 சதவீதம் இருக்க வேண்டும் என்பது தொழிலாளர்களை அதிகம் வருமான வரி செலுத்தும் நிலைக்கு தள்ளும் முயற்சி என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து மருத்துவர் சையத் ஹஃபீஸ் கூறுகையில், ”நாளொன்றுக்கு 12 மணி நேர வேலை செய்தால் தொழிலாளர்களிப் உடல் நலம், மனநலம் இரண்டும் பாதிப்படைகிறது. சர்வதேச அளவில் எடுத்துக்கொண்டால் ஒரு மனிதனால் சராசரியாக ஒரு நாளைக்கு 6 மணி நேரம் மட்டுமே வேலை செய்ய முடியும். குறிப்பாக காலை நேரங்களில் பணியை அதிகம் செய்ய இயலும்.
12 மணி நேர வேலை என்பது ஊழியரின் வேலை தரத்தை பாதிப்பதுடன் அதிக கவனச்சிதறலையும் ஏற்படுத்தும். பட்டாசு தொழிற்சாலைகள், ரசாயண தொழிற்சாலைகள், பெரிய இயந்திரங்களை கொண்டுள்ள தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களின் சிறிய கவனக்குறைவும் மிகப்பெரிய விபத்துகளுக்கு வித்திடும்.
அதிக நேரம் பணிபுரிவதால் தினமும் குடும்பத்துடன் செலவிடும் நேரம் குறைகிறது. இதனால் தொழிலாளரின் ஒட்டுமொத்த குடும்பமும் பாதிப்பை சந்திக்கும். குறிப்பாக இதனால் பெண் தொழிலாளர்களுக்கு அதிகம் பாதிக்கப்படுவார்கள். அவர்களால் குடும்பத்தையும், குழந்தைகளையும் கவனிக்க முடியாமல் போகும். தமிழ்நாட்டில் 12 மாதங்கள் பேறு கால விடுப்பு வழங்கப்பட்டாலும், 12 மணி நேரம் குழந்தைகளை தாய் பிரிந்து இருப்பது அவர்க்ள் பணிக்கு செல்வதன் மீதான ஆர்வத்தை குறைத்து மனச்சோர்வை உருவாக்கும்.
உடல்நலன் சார்ந்து பார்த்தால், 12 மணி நேரம் ஒரே வேலையில் ஈடுபட்டிருந்தால், உடல் பருமன் அதிகரிக்கும், நீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்தம், இதய நோய்கள் ஏற்படலாம். நெடு நேரம் முறையற்ற வகையில் அமர்ந்திருப்பதன் முலம் முதுகெலும்பு பிரச்சனையும் அதனால் இடுப்பு, கர்ப்பப்பை வாய் பிரச்சனைகள் ஏற்படும் அபாயமும் இருக்கிறது.
குறிப்பாக இந்தியாவில் அதிக நேரம் பணிபுரியும் கூலித் தொழிலாளர்களுக்கு ஊதியம் குறைவாக வழங்கப்படுவதால் ஊட்டச்சத்து கொண்ட உணவுகளை அவர்கள் உட்கொள்வது இல்லை. உட்டச்சத்து இன்றி அதிக நேரம் பணிபுரிவது அவர்களின் உடல் நலனை மிகவும் மோசமாக்கும். ரசாயண தொழிற்சாலைகளில் பணிபுரிவோர் கதிர்வீச்சுகளால் பாதிக்கப்படலாம். குறிப்பாக பெண்களுக்கு ஹார்மோன் குறைபாடு, சினைப்பையில் பிரச்சனைகள் ஏற்படும் சாத்தியக்கூறுகள் உள்ளன.” என பிரச்சனைகளை அடுக்குகிறார்.
இதுகுறித்து, சிஐடியு தொழிற்சங்க முன்னாள் தலைவர் சவுந்திரராஜன் கூறுகையில், “தற்போதே, பல துணிக் கடைகளில் சட்டத்தை மீறி 12 மணி நேரம் வேலை வாங்குகிறார்கள். இதை சட்டமாக்கினால், மேலும் பல மணி நேரம் வேலை வாங்குவார்கள். 8 மணி நேரம் வேலை செய்தால், மீண்டும் வேலையை தொடர 9 மணி நேர ஓய்வு அவசியம். போக்குவரத்து துறையில் இன்றும் இது கடைபிடிக்கப்படுகிறது. 12 மணி நேரம் தொடர்ந்து பணிபுரிந்தால், தொழிலாளர்களின் உடல்நிலை கடுமையாக பாதிக்கும். இதை உணர்ந்து தான் உலக அளவில் 8 மணி நேரவேலை, வாரம் ஒரு நாள் விடுமுறை பின்பற்றப்படுகிறது.
ஜெர்மனியில் வாரத்துக்கு 35 மணி நேரம், ஸ்வீடனில் 32 மணி நேரமாகவும் வேலை நேரம் குறைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இந்த வேலை நேரத்தை குறைக்க முயற்சிக்காமல், ஏற்கெனவே உள்ள 48 மணி நேர வேலையை 4 நாட்களில் செய்ய சொல்வதை ஏற்க முடியாது. இதை செயல்படுத்தினால் தொழிலாளர்களின் சராசரி வாழ்நாள் 45 ஆண்டுகளாக குறையும். இப்போது உள்ள தொழிலாளர் சட்ட விதிமீறல் மீது நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், அந்த சட்டங்களை தளர்த்தினால், தொழிலாளர்களுக்கு பாதிப்பு அதிகமாக இருக்கும். 3 நாட்கள் விடுமுறையும் கிடைக்காது. இது தொழில் நிறுவனங்களுக்கே சாதகமாக அமையும்.” என விமர்சித்து உள்ளார்.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )