"வி மிஸ் யூ காம்ரேட்" தமிழ்நாட்டுக்கும் சீதாராம் யெச்சூரிக்கும் அப்படி ஒரு தொடர்பு இருக்கு!
இந்தியாவின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரான சீதாராம் யெச்சூரிக்கும் தமிழ்நாட்டுக்கும் ஒரு நெருக்கமான தொடர்பு இருக்கிறது. அது என்ன என்பதை இந்த தொகுப்பில் தெரிந்து கொள்ளலாம்.
முன்னாள் மாநிலங்களவை உறுப்பினரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளருமான சீதாராம் யெச்சூரி இன்று காலமானார். உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.
தமிழ்நாட்டுக்கும் சீதாராம் யெச்சூரிக்கும் உள்ள தொடர்பு: இந்தியாவின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரான சீதாராம் யெச்சூரிக்கும் தமிழ்நாட்டுக்கும் ஒரு நெருக்கமான தொடர்பு இருக்கிறது. அது என்ன என்பதை இந்த தொகுப்பில் தெரிந்து கொள்ளலாம்.
சென்னையில் தெலுங்கு பேசும் குடும்பத்தில் பிறந்தவர் சீதாராம் யெச்சூரி. இவரின் இயற்பெயர் யெச்சூரி சீதாராம் ராவ். இவரது பெற்றோர் ஆந்திராவை சேர்ந்தவர்கள்.
ஹைதராபாத் நிஜாம் கல்லூரியில் படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டு டெல்லிக்கு இடம் பெயர்ந்தார். கடந்த 1970ஆம் ஆண்டு, மத்திய பள்ளிக் கல்வி வாரியத்தின் 12 ஆம் வகுப்பு தேர்வில் அகில இந்திய அளவில் முதல் ரேங்க் பெற்றார்.
கடந்து வந்த பாதை: செயின்ட் ஸ்டீபன் கல்லூரி மற்றும் ஜேஎன்யூவில் பொருளாதாரம் பயின்றார். மாணவ பருவத்தில் இடதுசாரி இயக்கங்களின் மீதிருந்த ஈர்ப்பால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார். பின்னர், சக கம்யூனிஸ்டான பிரகாஷ் காரத்தை முதலில் சந்தித்தார்.
சிறந்த பேச்சாளர்களில் ஒருவரான சீதாராம் யெச்சூரி, தெலுங்கு, வங்காளம், இந்தி, தமிழ் ஆங்கிலம் உட்பட ஐந்து மொழிகளில் சரளமாக பேசக்கூடியவர். ஒன்பது புத்தகங்களை எழுதியுள்ளார். இரண்டு முறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த யெச்சூரி, கட்சி அரசியல் தாண்டி பல தலைவர்களுடன் அன்பு பாராட்டியவர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோ உறுப்பினராக 32 ஆண்டுகளாக இருந்திருக்கிறார். கடந்த 2015ஆம், கட்சியின் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். மேற்கு வங்கத்தில் இருந்து இரண்டு முறை மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்டார்.
யெச்சூரியின் மறைவு இந்திய அரசியலில் ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கு அவர் செய்த பங்களிப்புகளுக்காக மக்கள் மனதில் எப்போதும் நினைவுகூரப்படுவார்.
கடந்த 2021 ஆம் ஆண்டு, அவர் தனிப்பட்ட வாழ்வில் மிகப்பெரிய இழப்பை சந்திக்க நேரிட்டது. அவரின் மூத்த மகனும் பத்திரிகையாளரும் ஆஷிஷ் யெச்சூரி, கொரோனாவால் பாதிக்கப்பட்டு மரணம் அடைந்தார்.
இதையும் படிக்க: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி காலமானார்!