"அச்சமில்லா தலைவர்.. உறுதியான சித்தாந்தவாதி" சீதாராம் யெச்சூரிக்கு தலைவர்கள் இரங்கல்!
சீதாராம் யெச்சூரியின் இறப்புக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் மாநிலங்களவை உறுப்பினருமான சீதாராம் யெச்சூரியின் இறப்புக்கு பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். உடல் நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.
"உறுதியான சித்தாந்தவாதி"
இந்த நிலையில், குடியரசு தலைவர் திரௌபதி முர்மு வெளியிட்ட இரங்கல் செய்தியில், "மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரியின் மறைவு குறித்து அறிந்து வருத்தம் அடைந்தேன். முதலில் மாணவர் தலைவராகவும், பின்னர் தேசிய அரசியலிலும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் தனித்துவம் வாய்ந்த, செல்வாக்கு மிக்க குரலாக இருந்தவர்.
உறுதியான சித்தாந்தவாதியாக இருந்தாலும், கட்சி எல்லைகளைக் கடந்து நண்பர்களை வென்றவர். அவரது குடும்பத்தினருக்கும் அவரது கட்சியினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்" என எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
Saddened to learn about the demise of CPI (M) general secretary Shri Sitaram Yechury. First as a student leader and then in national politics and as a parliamentarian, he had a distinct and influential voice. Though a committed ideologue, he won friends cutting across the party…
— President of India (@rashtrapatibhvn) September 12, 2024
எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி வெளியிட்ட இரங்கல் செய்தியில், "சீதாராம் யெச்சூரி ஒரு நல்ல நண்பர். நமது நாட்டைப் பற்றிய ஆழமான புரிதலுடன் இந்தியா கருத்தாக்கத்தின் பாதுகாவலர். நாங்கள் நடத்திய நீண்ட விவாதங்களை நான் மிஸ் செய்கிறேன். இந்த துயரமான நேரத்தில் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்" என பதிவிட்டுள்ளார்.
"நீதிக்காக அர்ப்பணிப்புடன் செயல்பட்டவர்"
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தியில், "இடதுசாரி இயக்கத்தின் தலைவரும் இந்திய அரசியலில் தலைசிறந்த ஆளுமையுமான தோழர் சீதாராம் யெச்சூரியின் மறைவு ஆழ்ந்த அதிர்ச்சியையும் வருத்தத்தையும் அளிக்கிறது.
தோழர் சீதாராம் யெச்சூரி அச்சமற்ற தலைவராக இருந்தவர். சிறு வயதிலிருந்தே, மாணவர் தலைவராக துணிச்சலாக அவசரநிலைக்கு எதிராக களம் கண்டார். நீதிக்காக அர்ப்பணிப்புடன் செயல்பட்டார். உழைக்கும் வர்க்கம், மதச்சார்பின்மை, சமூக நீதி, சமத்துவம் மற்றும் முற்போக்கான விழுமியங்களுக்கான அவரது அர்ப்பணிப்பு எதிர்கால சந்ததியினருக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கும்.
அவருடன் மேற்கொண்ட ஆழமான உரையாடல்களை நான் எப்போதும் போற்றுவேன். இக்கட்டான நேரத்தில் அவரது குடும்பத்தினருக்கும் தோழர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். செவ்வணக்கம், தோழர்" என எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.