Sikkim Flood: வெள்ளத்தால் சிக்கி தவிக்கும் சிக்கிம்: 100 பேர் மாயம்...நாளுக்கு நாள் அதிகரிக்கும் உயிரிழப்பு எண்ணிக்கை!
அசாம் மாநிலத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி 40 பேர் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Sikkim Flood: அசாம் மாநிலத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக நாளுக்கு நாள் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திடீர் மேகவெடிப்பு:
சிக்கிம் மாநிலத்தில் திடீர் மேகவெடிப்பு காரணமாக தொடர்ந்து மூன்று நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால், மாநிலத்தில் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதோடு, அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால், அணைகளில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இதனை அடுத்து, லாச்சென் பள்ளத்தாக்கில் உள்ள டீஸ்டா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து அந்த பள்ளாத்தாக்குப் பகுதியில் இருந்த ராணுவ வாகனங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன. சுமார் 50-க்கும் மேற்பட்ட வாகனங்கள் சேற்றில் மூழ்கியுள்ளது. மேலும், மரங்கள், 277 வீடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதோடு, 14 பாலங்கள் சேதம் அடைந்துள்ளன. சிக்கிமின் சுங்தாங் நகரம் கடுமையாக பாதிக்கப்பட்டதாக தெரிகிறது.
மற்ற பகுதிகளைக் காட்டிலும் 80 சதவீதம் சுங்தாங் நகரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் டீஸ்டா நதி பாயும் வடக்கு வங்கத்திற்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடும் வெள்ளத்தால் மங்கன், கேங்டாக், பாக்யோங் மற்றும் நாம்ச்சி மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகள் அக்டோபர் 8ஆம் தேதி மூடப்படும் என்று கல்வித்துறை அறிவித்துள்ளது.
40 பேர் உயிரிழப்பு:
சிக்கிம் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 40ஆக உயர்ந்துள்ளது. நேற்று வரை 14 ஆக இருந்த உயிரிழப்பு எண்ணிக்கை, இன்று 40ஆக உயர்ந்துள்ளது. மேலும், 22 ராணுவ வீரர்கள் உட்பட 103 பேர் காணாமல் போனதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர்களில், பாக்யோங்கில் 59 பேரும், காங்டாக்கில் 22 பேரும், மங்கனில் 17 பேரும், நாம்ச்சியில் 5 பேரும் காணாமல் போயுள்ளனர். நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டார் காணாமல் போனதாக தகவல் வெளியாகி உள்ளது. லாச்சென், லாச்சுங் மற்றும் சுங்தாங் பகுதிகளில் இதுவரை 1,471 சுற்றுலா பயணிகளை மீட்டுள்ளனர். மேலும், 22,034 பேர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை வெள்ளத்தில் சிக்கி 2,011 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
அறிவுறுத்தல்:
வெள்ளத்தில் சிக்கி மாயமானவர்களை தேடும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. மீட்பு பணிகளில் 30 பேர் கொண்ட குழு ஈடுபட்டுள்ளது. தேசிய பேரிடர் மேலாண்மைப் படையினரும், எல்லை சாலை அமைப்பினரும் ஈடுபட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதுவரை 2,411 பேர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நான்கு மாவட்டங்களில் சுமார் 26 நிவாரண முகாம்கள் செயல்பட்டு வருகிறது. பொதுமக்கள் தேவையற்ற பயணங்களை தவிர்க்க வேண்டும் என்றும், பாதுகாப்பான இடங்களில் மக்கள் தஞ்சம் அடைய வேண்டும் என்றும் முதல்வர் பிரேம் சிங் தமாங் அறிவுறுத்தியுள்ளார். மேலும், சுற்றுலா பயணிகள் யாரும் இங்கு தற்போது வர வேண்டாம் என்றும் நிலைமை சரியான பிறகு தங்களது பயணங்களை மேற்கொள்ள வேண்டும் என்றும் சுற்றுலா பயணிகளுக்கு சிக்கிம் அரசு அறிவுறுத்தியுள்ளது.