மாஸ் என்ட்ரி கொடுத்த யூனவ்ஃபார் கப்பல்கள்.. இந்தியாவுடன் கைகோர்த்த ஐரோப்பிய யூனியன்.. உலகமே ஷாக்
ஐரோப்பிய யூனியன் கடற்படை கப்பல்கள் முதல்முறையாக இந்தியாவிற்கு வந்துள்ளன. துறைமுக கட்டத்திற்குப் பிறகு இந்திய கடற்படைக்கும் யூனவ்ஃபார்-க்கும் இடையிலான கூட்டுப் பயிற்சி திட்டமிடப்பட்டுள்ளது.

யூனவ்ஃபார் (EUNAVFOR) எனப்படும் ஐரோப்பிய யூனியன் கடற்படை கப்பல்கள் இந்தியாவிற்கு வந்துள்ளன. ஸ்பெயின் கடற்படையின் கமாண்டர் சால்வடார் மோரேனோ ரெஜிலின் தலைமையில் அந்நாட்டு கப்பலான இஎஸ்பிஎஸ் ரெய்னா சோபியாவும் இத்தாலியக் கடற்படையின் கமாண்டர் ஆல்பர்டோ பார்டோலோமியோவின் தலைமையில் அந்நாட்டு கப்பல் ஐடிஎஸ் அன்டோனியோ மார்செக்லியாவும் இந்தியா வந்துள்ளன.
முதல் முறையாக வருகை தந்த யூனவ்ஃபார் கப்பல்கள்:
கடந்த மே 26 ஆம் தேதி முதல் நேற்று (ஜூன் 01, 2025) வரை இவை மும்பையில் உள்ளன. இரண்டு கப்பல்களும் தற்போது ஐரோப்பிய யூனியன் கடற்படையின் (EUNAVFOR) கீழ் இயங்குகின்றன. ஐரோப்பிய யூனியனின் கப்பல்கள் என்ற அடிப்படையில் முதல் இந்திய வருகையாக இந்த பயணம் அமைந்தது குறிப்பிடத்தக்கது.
பிரதமர் நரேந்திர மோடிக்கும் ஐரோப்பிய யூனியன் தலைவர் உர்சுலா ஒன்டெர் லேயனுக்கும் இடையிலான கலந்துரையாடல்களின் தொடர்ச்சியாக இந்த கப்பல்கள் இந்தியா வந்துள்ளன. இது சர்வதேச அமைதிக்கும் பாதுகாப்புக்குமான பகிரப்பட்ட உறுதிப்பாட்டை எடுத்துக்காட்டுகிறது.
இந்தியாவுடன் கைகோர்த்த ஐரோப்பிய யூனியன்:
ரியர் அட்மிரல் டேவிட் டா போஸோ தலைமையிலான யூனவ்ஃபார் தரப்பு, இந்தியக் கடற்படையின் மேற்கு கடற்படைத் தலைமையகத்தின் தலைமைப் பணியாளர் அதிகாரி (செயல்பாடுகள்) ரியர் அட்மிரல் வித்யாதர் ஹர்கேவுடன் கலந்துரையாடியதுடன், இரு தரப்புக்கும் இடையே கடல்சார் ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவது தொடர்பான விஷயங்களைக் குறித்து விவாதித்தது.
துறைமுகத்தில் கப்பல்கள் இருந்தபோது, கடலில் உத்திசார் ஒத்துழைப்புக்குத் தேவையான செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. கடற்கொள்ளை எதிர்ப்பு, கடத்தல் எதிர்ப்பு நடவடிக்கைகளின் அனுபவங்கள் குறித்த பரிமாற்றங்களிலிருந்து இரு தரப்பினரும் பெரிதும் பயனடைந்தனர்.
மிரண்டு போன உலக நாடுகள்:
துறைமுக கட்டத்திற்குப் பிறகு இந்திய கடற்படைக்கும் யூனவ்ஃபார்-க்கும் இடையிலான கூட்டுப் பயிற்சிக்கும் திட்டமிடப்பட்டுள்ளது. கடலில் நடைபெறும் இந்தப் பயிற்சியில் யூனவ்ஃபார்- ஐச் சேர்ந்த இஎஸ்பிஎஸ் ரெய்னா சோபியா, ஐடிஎஸ் அன்டோனியோ மார்செக்லியா, இந்திய கடற்படையைச் சேர்ந்த கப்பல்கள், விமானங்கள் ஆகியவை பங்கேற்கும். இந்த கடல்சார் ஈடுபாடுகள், இந்தியாவிற்கும் ஐரோப்பிய யூனியனுக்கும் இடையே அதிகரித்து வரும் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும்.
இதையும் படிக்க: Ukraines Drone Blitz: ரஷ்யாவிற்குள் இறங்கி அடித்த உக்ரைன் - ட்ரோன் தாக்குதலில் 40 போர் விமானங்கள் சேதம் - புதின் ஷாக்





















