நோய் இருப்பதை போன்று நடிக்கிறார்... உச்ச நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜிக்கு எதிராக அதிரடி வாதம் வைத்த அமலாக்கத்துறை..!
செந்தில் பாலாஜியின் மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவுக்கு எதிராகவும் மாவட்ட முதன்மை நீதிமன்றம் விதித்த நிபந்தனைகளுக்கு எதிராகவும் அமலக்காத்துறை உச்ச நீதிமன்றத்தில் இரண்டு மனுக்களை தாக்கல் செய்தன.
கடந்த 2011ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரையில், அதிமுக ஆட்சி காலத்தில் மாநில போக்குவரத்துத்துறை அமைச்சராக பதவி வகித்த செந்தில் பாலாஜி, வேலை வாங்கி தருவதாக பணம் பெற்று கொண்டு ஏமாற்றிய வழக்கில் அமலாக்கத்துறை அவரை ஜூன் 14ஆம் தேதி கைது செய்தது.
கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி:
கைதை தொடர்ந்து நெஞ்சு வலி ஏற்பட்டதாக செந்தில் பாலாஜி கூறிய நிலையில், அவர் ஓமந்தூரார் பல்நோக்கு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், செந்தில் பாலாஜியை கைது செய்ததது சட்ட விரோதம் எனக் கூறி, அவரின் மனைவி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.
அதேநேரம் செந்தில் பாலாஜி சார்பில் ஜாமின் கோரியும், அவரை விசாரணைக் காவலில் எடுக்க அனுமதி கோரி அமலாக்கத்துறையும் சென்னை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தன.
உயர் நீதிமன்ற அனுமதியுடன் தனியார் மருத்துவமனைக்கு மாற்றம்:
ஆட்கொணர்வு மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் அமைச்சர் செந்தில் பாலாஜியை, உயர்சிகிச்சைக்காக காவேரி மருத்துவமனைக்கு மாற்ற அனுமதி வழங்கியது. அமலாக்கத்துறையின் மருத்துவக் குழுவும் காவேரி மருத்துவமனைக்கு சென்று அமைச்சரின் உடல்நிலையை ஆராயலாம் எனத் தெரிவித்தது.
தொடர்ந்து, வழக்கு தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஜுன் 22ம் தேதிக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதேநேரம், வரும் 28ம் தேதி வரை அமைச்சர் செந்தில் பாலாஜி நீதிமன்ற காவலில் நீடிப்பார், அவரது உடல்நிலையை அமலாக்கத்துறை ஏற்பாடு செய்யும் மருத்துவக் குழுவும் ஆராயலாம் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
"நோய் இருப்பது போல் நடிக்கிறார்"
உயர்நீதிமன்ற உத்தரவையடுத்து ஓமந்தூரார் மருத்துவமனையில் இருந்து காவேரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக செந்தில்பாலாஜி மாற்றப்பட்டார். இதற்கிடையே, செந்தில் பாலாஜியின் மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவுக்கு எதிராகவும் அமலாக்கத்துறைக்கு சென்னை மாவட்ட முதன்மை நீதிமன்றம் விதித்த நிபந்தனைகளுக்கு எதிராகவும் அமலக்காத்துறை உச்ச நீதிமன்றத்தில் இரண்டு மனுக்களை தாக்கல் செய்தன.
அதில், "கைது செய்யப்பட்ட பிறகுதான் அவர் நோய்வாய்ப்பட்டதாக புகார் அளித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அமலாக்கத்துறையின் பயனுள்ள விசாரணையை அர்த்தமற்றதாக்குவதற்காக அவர் நோய் இருப்பது போல் நடிக்கிறார் என்ற நியாயமான அச்சம் உள்ளது. விசாரணையுடனும் நீதிமன்ற நடைமுறையுடனும் விளையாட குற்றம்சாட்டப்பட்டவர்களை அனுமதிக்க முடியாது" என குறிப்பிடப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்ற நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான விடுமுறை கால அமர்வின் முன், இந்த வழக்கின் விசாரணை நேற்று நடைபெற்றது. அப்போது, அமலாக்கத்துறையின் சார்பாக ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, "தனியார் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்த உடனேயே அமைச்சரை காவலில் எடுத்து விசாரிக்க விரும்புகிறோம்" என தெரிவித்தார்.
இதை தொடர்ந்து, வழக்கின் விசாரணை ஜூன் 21ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.