Naga Tribes Rally: 3 மாதங்களுக்கு மேலாக நீடிக்கும் வன்முறை.. இன்று பேரணியில் ஈடுபடும் நாகா மக்கள்.. மணிப்பூரில் மீண்டும் பரபரப்பு..!
மணிப்பூரில் கடந்த 3 மாதங்களுக்கு மேலாக வன்முறை நடைபெற்று வரும் நிலையில் நாகா பழங்குடியின மக்கள் இன்று பேரணி நடத்த இருக்கின்றனர்.
மணிப்பூரில் கடந்த 3 மாதங்களுக்கு மேலாக வன்முறை நடைபெற்று வரும் நிலையில் நாகா பழங்குடியின மக்கள் இன்று பேரணி நடத்த இருக்கின்றனர். இந்த பேரணி ஆகஸ்ட் 9 ஆம் தேதி காலை 10:00 மணி முதல் மணிப்பூரின் நாகா பகுதிகளில் தமெங்லாங் தலைமையகம், சாண்டல் தலைமையகம், உக்ருல் தலைமையகம் மற்றும் சேனாபதி தலைமையகம் ஆகிய இடங்களில் நடைபெற இருக்கிறது.
பேரணி:
மணிப்பூரில் உள்ள நாகா பழங்குடியின மக்களின் அமைப்பான யுனைடெட் நாகா கவுன்சில் (யுஎன்சி) பல ஆண்டுகளாக, நாகா மக்களின் அரசியல் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் இன்று (ஆகஸ்ட் 9ம் தேதி) நாகா பகுதிகளில் மாபெரும் பேரணியை நடத்தவுள்ளது. தொடர்ந்து, மெய்தி மற்றும் குகி மக்களுக்கு இடையே நடந்து வரும் வன்முறையை முடிவுக்கு கொண்டுவர இருதரப்புடனும் மத்திய அரசு அமைதி பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமெனவும் கோரிக்கை வைக்க இருக்கிறது.
இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், “ தமெங்லாங், சேனாபதி, உக்ருல் மற்றும் சந்தேல் மாவட்டங்களின் மாவட்ட தலைநகரங்களில் புதன்கிழமை (ஆகஸ்ட் 9ம் தேதி) காலை 10 மணி முதல் பேரணிகள் நடைபெறும். இதில் நாகா மக்கள் அதிக அளவில் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்படுகிறது” என தெரிவித்திருந்தது.
அமைதிப் பேச்சுவார்த்தை:
மேலும், “கடந்த ஆகஸ்ட் 3, 2015 அன்று இந்திய அரசு (GOI) மற்றும் நாகாலாந்து தேசிய சோசலிஸ்ட் கவுன்சில் (NSCN) இடையே வரலாற்று கட்டமைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதன் மூலம் இந்தோ-நாகா அமைதி செயல்முறை குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்தது. ஆனால், தற்போது வரை இறுதி ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதில் அதிக தாமதம் ஏற்படுவது கவலைக்குரியது. இதனால், அமைதிப் பேச்சுவார்த்தையை சீர்குலைக்கும் சாத்தியம் உள்ளது.
இந்தோ-நாகா இடையே நீடித்து வரும் அரசியல் பிரச்சினைக்கு, ஒப்பந்தத்தின் அடிப்படையில் விரைவில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணவும், நாகா மற்றும் வடகிழக்கு பகுதிகளில் நீடித்த அமைதியை நிலைநாட்டவும் இந்த பேரணி நடைபெறவுள்ளது. அனைத்து மனசாட்சியுள்ள நாகா குடிமக்கள் பங்குதாரர்கள் மற்றும் நலம் விரும்பிகள் இந்த பேரணியில் மிகுந்த ஒத்துழைப்பையும், பங்கேற்பையும், பிரார்த்தனையுடன் வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.” என அந்த அறிக்கையில் தெரிவித்திருந்தது.
மணிப்பூர் கலவரம்:
முன்னதாக, கடந்த ஆகஸ்ட் 3ம் தேதி குக்கி பழங்குடியின மக்களின் அமைப்பான குகி இன்பி மணிப்பூர், இந்த பேரணிக்கு ஆதரவளிப்பதாக தெரிவித்தது.
கடுமையான வன்முறைக்கு மத்தியில் நாகா பழங்குடிகளின் பேரணி நடைபெற இருப்பதால், அப்பகுதி முழுவதும் காவல்துறையினர் மற்றும் மத்திய பாதுகாப்பு படைகள் குவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், மணிப்பூரில் உள்ள நாகா எம்.எல்.ஏக்கள் 10 பேரும் வருகின்ற 21ம் தேதி தொடங்கும் சட்டமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்ககூடாது என நாகா பழங்குடியின மக்களின் மற்றொரு செல்வாக்கு மிக்க அமைப்பான ‘ நாகா ஹோஹோ’ வலியுறுத்தியுள்ளது. தொடர்ந்து, குகி இனத்தை சேர்ந்த பெரும்பாலான எம்.எல்.ஏக்களும் வருகின்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்க மாட்டார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
வன்முறை:
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் பழங்குடியின அந்தஸ்து விவகாரத்தில் மெய்தி மற்றும் குகி இன மக்களுக்கு இடையே கடந்த மே மாதம் மிகப்பெரிய இனக்கலவரம் வெடித்தது. கிட்டத்தட்ட 3 மாதங்களுக்கு மேலாகியும் அந்த கலவரம் முடிவுக்கு வரவில்லை. இதுகுறித்து நாடாளுமன்றத்திலும் எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.