Adani Case: அதானி - ஹிண்டன்பர்க் விவகாரம்...விசாரணையை முடிக்க 14 நாட்கள் கால அவசாகம் கேட்ட செபி
பங்குசந்தையில் அதானி குழுமம் ஏராளமான மோசடி வேலைகளை செய்ததாக ஹிண்டன்பர்க் நிறுவனம் ஆய்வறிக்கையில் தெரிவித்திருந்தது.
அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் எனும் நிறுவனம் சமீபத்தில் ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதானி குழுமம் பங்குசந்தையில் ஏராளமான மோசடி வேலைகளை செய்ததாக ஆய்வறிக்கையில் குற்றஞ்சாட்டப்பட்டது. இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தையும் அதானி குழுமம் மறுத்து வருகிறது.
பங்குசந்தை மோசடியில் ஈடுபட்டதா அதானி குழுமம்?
ஆனால், ஆய்வறிக்கை வெளியானதன் விளைவாக, அதானி கழுமம் பெரிய அளவில் இழப்பை சந்தித்தது. பங்கு சந்தையில், 10 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக அதானி குழுமம் இழப்பை சந்தித்திருப்பதாக தகவல் வெளியானது. பங்கு சந்தையில் அதானி குழுமத்தின் பங்குகளை வாங்கிய இந்திய முதலீட்டாளர்கள் பெரிய அளவில் இழப்பை சந்தித்தனர்.
இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தலையிடக் கோரி பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. கடந்த மார்ச் 2ஆம் தேதி, இந்த மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு, அதானி குழுமம் தொடர்பாக ஹிண்டன்பர்க் வெளியிட்ட அறிக்கை குறித்தும் அதானி குழுமம் ஏதேனும் விதி மீறலில் ஈடுபட்டதா என்பது பற்றியும் ஆராய இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியத்திற்கு (செபி) உத்தரவிட்டது.
விசாரணை செய்து வரும் செபி:
முதலில் இரண்டு வார காலத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் வழங்கப்பட்ட நிலையில், பின்னர், ஆகஸ்ட் 14ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது.
அதேபோல, இதுபோன்ற சூழல் எதிர்காலத்தில் நடைபெறாமல் இருக்கும் வகையில் இந்திய பங்கு சந்தையின் முதலீட்டாளர்களை பாதுகாப்பது தொடர்பாக ஆராய நிபணர் குழு ஒன்றையும் உச்ச நீதிமன்றம் அமைத்தது. கடந்த மே மாதம், நிபுணர் குழு தங்களின் அறிக்கையை தாக்கல் செய்தது. அதில், அதானி குழுமம் எந்த தவறும் செய்யவில்லை என்றும் விதிகளை மீறவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், செபிக்கு வழங்கப்பட்ட கால அவகாசம் இன்றுடன் நிறைவு பெறும் நிலையில், விசாரணையை முடிப்பதற்கு மேலும் 14 நாள்கள் அவகாசம் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் செபி மனு தாக்கல் செய்தது.
செபி தாக்கல் செய்த அந்த மனுவில், "விசாரணையில் கணிசமான முன்னேற்றம் அடைந்துள்ளோம். 24 விவகாரங்களில் 17 விவகாரங்களில் விசாரணையை நிறைவு செய்துள்ளோம். செபியின் நடைமுறைகளின்படி தகுதிவாய்ந்த அதிகாரி விசாரணையின் முடிவுகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளார்.
ஒரு விவகாரத்தில், செபி இதுவரை சேகரித்த விஷயங்களின் அடிப்படையில் விசாரணையை முடித்து, இடைக்கால அறிக்கை தயாரிக்கப்பட்டு, செபியின் நடைமுறைகளின்படி தகுதிவாய்ந்த அதிகாரி அதற்கு ஒப்புதல் அளித்துள்ளார். மீதமுள்ள ஆறு விவகாரங்களில், நான்கு விவகாரங்களில் விசாரணை முடிவுகள் தெளிவாக உள்ளது. இது தொடர்பாக தயாரிக்கப்பட்ட அறிக்கைகளுக்கு விரைவில் ஒப்புதல் வாங்கப்படும்
இந்த நான்கு விவகாரங்களுக்கான விசாரணை அறிக்கைகளுக்கு விரைவில் ஒப்புதல் பெறப்படும். ஆகஸ்ட் 29 ஆம் தேதி நடைபெறும் அடுத்தகட்ட நீதிமன்ற விசாரணைக்குள் அறிக்கை தாக்கல் செய்யப்படும்" என குறிப்பிடப்பட்டுள்ளது.