தலைவலியாக மாறிய மம்தா! மகாராஷ்டிராவில் தொடரும் பஞ்சாயத்து - பிரச்னைக்கு தீர்வு காணுமா INDIA கூட்டணி?
மற்ற மாநிலங்களில் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டாலும், மேற்கு வங்கம் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் INDIA கூட்டணி கட்சிகளுக்கு இடையே உடன்பாடு எட்டப்படாமல் உள்ளது.
அடுத்த மாத இறுதியிலோ அல்லது ஏப்ரல் மாதத்தின் தொடக்கத்திலோ நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலுக்கு இன்னும் 1 மாதம் கூட இல்லாத நிலையில், அரசியல் களம் சூடுபிடித்து வருகிறது. தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க பாஜக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
INDIA கூட்டணி:
அதே சமயத்தில், பாஜகவை ஆட்சி அதிகாரத்தில் இருந்து அகற்ற எதிர்க்கட்சிகள் அடங்கிய INDIA கூட்டணி தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. INDIA கூட்டணியில் இடம்பெற்றுள்ள சமாஜ்வாதி, ஆம் ஆத்மி கட்சிகளுடன் காங்கிரஸ் தொகுதி பங்கீட்டை இறுதி செய்துள்ளது.
இறுதி செய்துள்ள தொகுதிப் பங்கீட்டின் படி, டெல்லியில் உள்ள 7 மக்களவை தொகுதிகளில் 4இல் ஆம் ஆத்மியும் 3இல் காங்கிரஸ் கட்சியும் போட்டியிட உள்ளது. குஜராத்தில் உள்ள 26 தொகுதிகளில் காங்கிரஸ் 24 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி 2 தொகுதிகளிலும் ஹரியானாவில் உள்ள 10 தொகுதிகளில் காங்கிரஸ் 9 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி 1 தொகுதியிலும் போட்டியிட உள்ளது. கோவாவில் உள்ள 2 தொகுதிகளிலும் சண்டிகரில் உள்ள 1 தொகுதியிலும் காங்கிரஸ் போட்டியிட உள்ளது.
முரண்டு பிடிக்கும் மம்தா:
மற்ற மாநிலங்களில் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டாலும், மேற்குவங்கம் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் INDIA கூட்டணி கட்சிகளுக்கு இடையே உடன்பாடு எட்டப்படாமல் உள்ளது. தொகுதி பங்கீட்டை இறுதி செய்வதில் காங்கிரஸ், மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே தொடர் இழுபறி நீடித்து வருகிறது.
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியிடம் மேற்குவங்க காங்கிரஸ் தலைவர் அதீர் ரஞ்சன் சவுத்ரி 10 தொகுதிகள் கேட்பதாகவும் ஆனால், 2 தொகுதிகள் மட்டுமே கொடுக்க மம்தா சம்மதம் தெரிவித்துள்ளார். இதனால், கூட்டணி பேச்சுவார்த்தை அடுத்தக்கட்டத்திற்கு செல்ல முடியாத நிலையில் உள்ளது.
ஒரு கட்டத்தில், மேற்குவங்கத்தில் உள்ள 42 தொகுதிகளிலும் திரிணாமுல் காங்கிரஸ் தனித்து களமிறங்கும் என மம்தா அறிவித்தார். இருப்பினும், காங்கிரஸ் மேலிடம் தலையிட்டு, 5 தொகுதிகள் வரை கேட்பதாக கூறப்படுகிறது. ஆனால், இதற்கும் மம்தா ஒப்பு கொள்ளவில்லை என கூறப்படுகிறது.
மகாராஷ்டிராவில் தொடரும் பஞ்சாயத்து:
மகாராஷ்டிராவை பொறுத்தவரையில், காங்கிரஸ், உத்தவ் தாக்கரே, சிவசேனா, சரத் பவார் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தமுள்ள 48 தொகுதிகளில் 40 தொகுதிகளில் எந்த கட்சி போட்டியிடுவது என இறுதி செய்யப்பட்டுவிட்டது. ஆனால், 8 தொகுதிகளை ஒதுக்குவதில் தொடர் பிரச்னை நீடித்து வருகிறது.
மும்பை நகரத்தில் 6 மக்களவை தொகுதிகள் உள்ளன. மும்பையில் 4 தொகுதிகள் உள்பட மொத்தமாக 18 தொகுதிகளில் போட்டியிட உத்தவ் தாக்கரே சிவசேனா விரும்புகிறது. ஆனால், மும்பையில் 3 மக்களவை தொகுதிகளில் போட்டியிட காங்கிரஸ் விரும்புவதாகக் கூறப்படுகிறது. இதில், தொடர் பிரச்னை நீடித்து வந்த நிலையில், தொகுதி பங்கீட்டை இறுதி செய்ய சமீபத்தில் உத்தவ் தாக்கரேவிடம் தொலைபேசியில் பேசியுள்ளார் ராகுல் காந்தி.