(Source: ECI/ABP News/ABP Majha)
Zealandia: 375 ஆண்டுகளாக மாயமான 8ஆவது கண்டம்.. மர்மத்தை உடைத்த விஞ்ஞானிகள்: வெளியான ஆச்சரிய தகவல்
சுமார் 375 ஆண்டுகளாக கடலுக்கு அடியில் மூழ்கியிருந்த எட்டாவது கண்டமான 'சிலாந்தியா'-வை விஞ்ஞானிகள் கண்டுபிடித்து அசத்தியுள்ளனர்.
உலகில் எத்தனை கண்டங்கள் இருக்கிறது என கேட்டால், 7 என்று தான் பெரும்பானவர்கள் பதில் அளிப்பார்கள். ஆசியா, ஆப்பிரிக்கா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, அண்டார்டிகா, ஐரோப்பா, ஆஸ்திரேலியாவை தவிர்த்து 8ஆவது கண்டம் ஒன்று இருக்கிறது என சொன்னால் நீங்கள் நம்புவீர்களா? ஆம், இருக்கிறது என்பதே விஞ்ஞான உலகின் பதில்.
375 ஆண்டுகளாக கடலுக்கு அடியில் மூழ்கியிருக்கும் எட்டாவது கண்டம்:
சுமார் 375 ஆண்டுகளாக கடலுக்கு அடியில் மூழ்கியிருந்த எட்டாவது கண்டமான 'சிலாந்தியா'-வை விஞ்ஞானிகள் கண்டுபிடித்து அசத்தியுள்ளனர். கடல் தள பாறை மாதிரிகளில் இருந்து கிடைத்த தரவுகளை அடிப்படையாக கொண்டு, இரண்டு மில்லியன் (20 லட்சம்) சதுர மைல் பரப்பளவு கொண்ட புதிய கண்டத்தை வரைபடமாக்கியுள்ளனர் புவியியலாளர்கள்.
'சிலாந்தியா' தொடர்பாக எழுப்பப்படும் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளிக்கும் வகையில் இந்த புதிய வரைபடம் அமைந்துள்ளது. அதன் தனித்துவமான வரலாற்றை எடுத்துரைக்கிறது. சுமார் 83 மில்லியன் (830 லட்சம்) ஆண்டுகளுக்கு முன்பு, சூப்பர் கண்டம் என அழைக்கப்படும் கோண்டுவானா என்ற பெரிய நிலபரப்பு, பல புவியியல் காரணங்களால் உடைந்து சிதறியது. உடைந்து சிதறிய பகுதிகளே 7 கண்டகளாக உருவானது.
அதுமட்டும் இன்றி, 'சிலாந்தியா'வும் உருவானது. ஆனால், அதன் 94 சதவிகித நிலபரப்பு கடலில் மூழ்கிவிட்டது. மீதமுள்ள 6 சதவிகித நிலபரப்புதான் தற்போதைய நியூசிலாந்தும் அதை சுற்றியுள்ள தீவுகளும் ஆகும். கடலுக்கு அடியில் அமைந்திருப்பதால், 'சிலாந்தியா' குறித்து ஆராய்சச்சி மேற்கொள்ள முடியவில்லை. இதனால், அதன் வடிவம், கட்டமைப்பு தொடர்பாக பல மர்மங்கள் நீடித்து வருகிறது.
மர்மங்களை உடைக்கும் விஞ்ஞானிகள்:
இந்த மர்மங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சர்வதேச புவியியலாளர்களும், நில அதிர்வு நிபுணர்களும் கடல் தளம் மற்றும் கடலோர தீவுகளில் இருந்த பாறை மற்றும் படிவ மாதிரிகளை ஆய்வுக்கு உட்படுத்தி, 'சிலாந்தியா'வின் தற்போதைய வரைபடத்தை வெளியிட்டுள்ளனர்.
நில அதிர்வு ஆய்வு தொடர்பான தரவுகளுடன் 'சிலாந்தியா'வின் துல்லியமான வரைபடம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. நியூசிலாந்தின் மேற்கு கடற்கரை காம்ப்பெல் பீடபூமி அருகே பூமியின் டெக்டோனிக் தட்டுகள் மோதி கொள்ளும் புவியியல் மண்டலம் இருப்பதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அங்கு இருக்கும் பாறைகளில் காந்தப்புலத்தின் அளவில் எந்த மாற்றம் கண்டறியப்படவில்லை.
கோண்டுவானா நிலபரப்பு உடைந்து விரியும்போது, காம்ப்பெல் காந்த அமைப்பு உருவாகியுள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். பின்னர், 'சிலாந்தியா'வின் கீழ் கடல் பகுதிகள் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. 250 மில்லியன் ஆண்டுகள் முன்பு வரை, 'சிலாந்தியா'வின் விளிம்பு பகுதியில் டெக்டோனிக் தட்டுகள் ஒன்றன் மேல் ஒன்று மோதி கொண்டுள்ளது. ரசாயன கலவைகள் மற்றும் புவியியல் தடயங்களை ஆய்வு செய்ததில் இது தெரிய வந்தது. அந்த பகுதியே, தற்போது காம்ப்பெல் பீடபூமியாக உள்ளது.
புவியியலாளர்களை வியப்படைய செய்யும் ஆய்வு முடிவுகள்:
சிலாந்தியாவும், அண்டார்டிகாவும் கணிசமான அளவில் உருமாற்றம் அடைந்துள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். சுமார் 83 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, சிலாண்டியா/மேற்கு அண்டார்டிகா மற்றும் அண்டார்டிகா/ஆஸ்திரேலியா உடைந்து, டாஸ்மன் கடலில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
அதன்பின், ஏறத்தாழ 79 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு கிரெட்டேசியஸ் காலத்தின் பிற்பகுதியில், சிலாந்தியாவும் மேற்கு அண்டார்டிகாவும் பிரிந்து, பசிபிக் பெருங்கடலை உருவாக்கியது. மேற்கு அண்டார்டிகாவைப் போலவே, சிலாந்தியாவின் மேலோடு பிரிந்து செல்வதற்கு முன் கணிசமாக மெலிந்தது எப்படி என்பது புவியியலாளர்களை வியப்படைய செய்துள்ளது. 100லிருந்து 80 மில்லியன் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் நிலபரப்பு உடைந்து விரிவடைந்ததற்கான பல ஆதாரங்கள், ஆய்வாளர்களுக்கு கிடைத்துள்ளது.
8ஆவது கண்டம் இருப்பது இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. ஆய்வு தகவல்களை மற்ற விஞ்ஞானிகள் உறுதி செய்த பிறகுதான், அது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.