Savarkar Flew On Bulbul : சாவர்க்கர் புல்புல் பறவை மீது ஏறி பறந்தார்.. பாடப்புத்தகத்தில் இப்படி ஒரு கதையா? விளக்கம் என்ன?
சமீபகாலமாக கர்நாடகாவில் சாவர்கர் சர்ச்சை பெரும் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது.
சமீபகாலமாக சாவர்க்கர் பற்றி பேசப்படும் நிகழ்வுகள், விவாதங்களாக, சர்ச்சைகளாக உருவெடுத்துள்ளது.
அண்மையில் சுதந்திர தின விழாவிற்காக கர்நாடகாவில் வைக்கப்பட்ட பேனரில் சாவர்கர் படம் இடம்பெற்றிருந்தது. இதற்கு காங்கிரஸாரும் சிறுபான்மையினரும் எதிர்ப்பு தெரிவித்திருந்திருந்தனர்.
இந்நிலையில் சாவர்க்கர் பற்றி கர்நாடக பாடப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ள குறிப்புகளால் சர்ச்சை கிளம்பியுள்ளது. கர்நாடக மாநில 8 ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில் சாவர்கர் பற்றி ஒரு குறிப்பு உள்ளது. அதில், சாவர்கர் அடைக்கப்பட்டிருந்த அறையில் ஒரு சாவித் துவாரம் கூட இல்லை. ஆனால், அங்கு புல்புல் பறவைகள் தினமும் வந்து செல்லும். அந்தப் பறவையில் மீதேறி அன்றாடம் தாய்நாட்டிற்கு சாவர்க்கர் வந்து செல்வார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வார்த்தைகளை சுட்டிக்காட்டி வரலாற்றில் இல்லாத ஒன்றை புனைவாக பாடப்புத்தகத்தில் கூறலாமா என்று கேட்கின்றனர்.
இதற்கு பாடநூலை எழுதியவர்கள் சாவர்கர் பற்றிய குறிப்பு மெருகேற்றப்பட்ட வாக்கியம், சாகித்ய அலங்காரம் அல்லது உவமை. அதைவைத்து அரசியலும் சர்ச்சையும் செய்வது கேவலம் என்று விளக்கம் கூறுகின்றனர்.
யார் இந்த சாவர்க்கர்?
சாவர்க்கரின் இயற்பெயர் விநாயக தாமோதர் சாவர்க்கர். இவர் 1883-ஆம் ஆண்டு மகாராட்டிர மாநிலத்தில் நாசிக்கு அருகில் பாகுர் என்ற கிராமத்தில் தாமோதர் பந்த சாவர்க்கர், இராதா பாய் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். இவருக்கு இரு சகோதரர்கள் ஒரு சகோதரி. இவர் நாசிக்கில் பள்ளிக்கல்வியை முடித்தார். இவர் அந்தமான் சிறையில் அடைக்கப்பட்டபோது மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்து விடுதலையானர் என்ற விமர்சனம் உண்டு. சாவர்க்கர் பல முறை ஆங்கிலேயர்களிடம் மன்னிப்பு கேட்டார். அது மட்டுமல்ல, பிரிட்டிஷ் அரசிடமிருந்து மாதந்தோறும் அறுபது ரூபாய் ஓய்வூதியமும் பெற்றார் சாவர்க்கர் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கூறுகின்றன. இந்த சர்ச்சை நாடாளுமன்ற வரை ஒலித்தது.
அப்போது மத்திய அரசு தரப்பில் "அந்தமான் மற்றும் நிக்கோபார் நிர்வாகத்தின் கலை மற்றும் கலாசாரத் துறையிலிருந்து பெறப்பட்ட தகவல்களின்படி, செல்லுலார் சிறையில் இருந்தபோது, அவர் மன்னிப்பு கேட்டார் என்பதை உறுதிப்படுத்தும் ஆவணங்களோ அல்லது கருணை மனு கொடுத்ததாகவோ எந்த பதிவும் இல்லை" என்று கூறப்பட்டது. சாவர்க்கர் குறித்த சர்ச்சை இன்னமும் ஓய்ந்தபாடில்லை. சாவர்க்கருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்ற கோரிக்கை ஆர்எஸ்எஸ், பாஜக தரப்பில் தொடர்ந்து முன்னிலைப்படுத்தப்படுகிறது. அந்த வகையில் தான் கர்நாடக பாஜக சாவர்கரை தொடர்ந்து கொண்டாடி வருகிறது என்று கூறப்படுகிறது.
சாவர்க்கர் புல்புல் பறவை மீதேறி பறந்தார் என்ற கருத்தைக் குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கிண்டல் பதிவுகளையும், கேலி மீம்ஸ்களையும் பகிர்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.