Sadhguru Health: சிகிச்சை முடிந்து மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார் சத்குரு!
டெல்லியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிந்த சத்குரு அவர்கள் இன்று (மார்ச் 27) டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
மூளை அறுவை சிகிச்சை:
சில வாரங்களாக கடும் தலைவலிக்கு உள்ளான சத்குருவிற்கு மார்ச் 17-ம் தேதி அப்போலோ மருத்துவமனையில் மூளை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. மிகவும் ஆபத்தான அந்த அறுவை சிகிச்சைக்கு பிறகு சத்குரு மருத்துவர்கள் எதிர்பார்த்ததை விட மிக வேகமாக உடல்நலனில் முன்னேற்றம் கண்டார். கிட்டத்தட்ட 10 நாட்கள் மருத்துவ சிகிச்சைக்கு பிறகு அவர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
முன்னதாக, அப்போலோ மருத்துவமனையின் இணை நிர்வாக இயக்குனர் டாக்டர் சங்கீதா ரெட்டி சத்குருவை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
குணமடைந்த சத்குரு:
இது தொடர்பாக அவர் கூறுகையில் “சத்குரு அவர்கள் உடல் நலம் தேறி வருவது குறித்து மருத்துவர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். அவர் குணமடையும் அதே வேளையில் அவருடைய உற்சாகத்தை அப்படியே தக்கவைத்து கொண்டுள்ளார். உலகளாவிய நன்மைக்கான அவரது அர்ப்பணிப்பு, அவருடைய புத்தி கூர்மை மற்றும் அவரின் நகைச்சுவை உணர்வு அனைத்தும் அப்படியே சிறப்பாக உள்ளது. அவருடைய உடல்நலம் குறித்து விசாரிக்கும் லட்சக்கணக்கான மக்களுக்கு இது ஒரு நற்செய்தியாக இருக்கும் என நினைக்கிறேன்” என்றார்.
சத்குருவிற்கு சிறப்பான சிகிச்சை அளித்த டாக்டர் வினித் சூரி, டாக்டர் பிரணவ் குமார், டாக்டர் சுதீர் த்யாகி, டாக்டர் எஸ். சாட்டர்ஜீ மற்றும் அப்போலோ மருத்துவமனையின் ஒட்டு மொத்த குழுவிற்கும் ஈஷா அறக்கட்டளை சார்பாக நன்றி தெரிவிக்கப்பட்டது.
அதுமட்டுமின்றி, இந்த சவாலான சூழலில் உலகெங்கும் இருந்தும் சத்குருவிற்கு அன்பையும் ஆதரவையும் அளவற்ற வகையில் வெளிப்படுத்திய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் ஈஷா அறக்கட்டளை மிகுந்த நன்றியை தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளது.