Sabarimala Accident: தமிழ்நாட்டில் இருந்து சபரிமலை சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்து - 68 பக்தர்கள் கதி என்ன?
சபரிமலையில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பிய தமிழக பக்தர்கள் பயணித்த பேருந்து, நிலக்கல் அருகே கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது.
சபரிமலையில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பிய தமிழக பக்தர்கள் பயணித்த பேருந்து, நிலக்கல் அருகே கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது.
பேருந்து கவிழ்ந்து விபத்து:
சபரிமலைக்குச் சென்று திரும்பும் போது நிலக்கல் அருகே நண்பகல் நண்பகல் 1:15 மணியளவில் பேருந்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. தற்போது வெளியாகியுள்ள தகவல்களின்படி, 7 குழந்தைகள் உட்பட தமிழகத்தை சேர்ந்த 68 பேர் காயமடைந்துள்ளனர். சரியான நேரத்தில் அங்கு ஆம்புலன்ஸ் சேவை கிடைக்காததால், காயமடைந்தவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடியவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதனிடடையே காவல்துறை மற்றும் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து, காயமடைந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
தீவிர சிகிச்சை
தொடர்ந்து, காயங்களுடன் மீட்கப்பட்ட அனைவரும் கோட்டயம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிகிச்சை பெறுபவர்களில் ஒருவர் மட்டும் கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியானது. இதனிடையே, பேருந்து விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்க தேவையான ஏற்பாடுகளை செய்யுமாறு மாவட்ட மருத்துவ அதிகாரிக்கு கேரள சுகாதார அமைச்சர் வீனா ஜார்ஜ் உத்தரவிட்டார். இதனையடுத்து கொன்னி மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த மருத்துவகள் குழு பத்தனம்திட்டா மருத்துவமனைக்குச் வந்துள்ளது. தேவையான சிகிச்சைகளை வழங்க கோட்டயம் மருத்துவக் கல்லூரியும் தயார் நிலையில் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பங்கு ஆராட்டு திருவிழாவிற்காக அண்மையில் சபரிமலை ஐயப்பன் கோயில் நடை அண்மையில் திறக்கப்பட்டுள்ள நிலையில், மயிலாடுதுறை மாவட்டம் மாயவரத்தில் இருந்து பக்தர்கள் தனியார் வாகனத்தில் கோயிலுக்கு சென்றிருந்தனர். தரிசனம் முடித்து விட்டு வீடு திரும்பியபோது எதிர்பாராத விதமாக இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
பங்குனி உத்திரம்:
அண்மையில் கொடியேற்றத்துடன் தொடங்கிய பங்குனி உத்திர விழா, வரும் ஏப்ரல் 5ம் தேதி வரை நடைபெற உள்ளது. பங்குனி உத்தர திருவிழாவையொட்டி, தினசரி ஆலயத்தில் அதிகாலை 5 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரையிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது. இந்த பூஜைகளை நேரில் கண்டு ஐயப்பனை தரிசனம் செய்ய இணையதளம் மூலமாக பக்தர்கள் பதிவு செய்து கொள்ளலாம்.
இதனிடையே, ஆன்லைனில் முன்பதிவு செய்யாத பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கும் வகையில், நிலக்கல் மற்றும் பம்பையில் உடனடி முன்பதிவு செய்யும் வசதியும் செய்யப்பட்டுள்ளது என தேவசம்போர்டு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் https://sabarimalaonline.org/#/login எனும் இணையதள முகவரியில் தரிசனத்திற்கான முன்பதிவை மேற்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.