Sabarimala Temple: பக்தர்களே கவனிங்க! சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை...இன்று நடை திறப்பு!
Sabarimala Temple: மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று திறக்கப்படுகிறது.
Sabarimala Temple: மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று திறக்கப்படுகிறது. 41 நாட்கள் பூஜைகள் நடைபெற்று டிசம்பர் 27ஆம் தேதி ஐயப்பனுக்கு மண்டல பூஜை நடைபெறும்.
சபரிமலை கோயில்
கேரள மாநிலம் பத்தினம் திட்டாவில் அமைந்துள்ளது சபரிமலை. உலகப்புகழ்பெற்ற சபரிமலை கோயிலில் ஐயப்பனை தரிசனம் செய்ய ஆண்டுதோறும் கோடிக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம். கார்த்திகை மாதத்தில் மட்டும முதல் நாள் தொடங்கி மண்டல பூஜை காலம் வரை 41 நாட்கள் ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டிருக்கும். மார்கழி மாதத்திலும் தை மாதத்திலும் மகர விளக்கு பூஜைக்காக கோயில் நடை திறக்கப்பட்டிருக்கும். பங்குனி மாத ஆராட்டு விழாவும், சித்திரை மாத விஷூகனி காணும் விழாவும் கோயிலில் சிறப்பாக நடைபெறும்.
இப்படி சபரிமலை ஐயப்பன் கோயில் வழக்கமான கோயில்கள் போல் இல்லாமல் ஒவ்வொரு மாதமும் அந்தந்த பூஜைக்காக திறக்கப்படும். நடை திறக்கும் போது மட்டும் பக்தர்கள் முன்பதிவு செய்து சாமி தரிசனம் செய்வர். மகர ஜோதி, கார்த்திகை மாத பூஜை மற்றும் விஷு பண்டிகையின் போது திரளான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வார்கள்.
மண்டல பூஜை:
அந்த வகையில், இன்று (நவம்பர் 16 ஆம் தேதி) மண்டல பூஜைக்காக நடை திறக்கப்படுகிறது. மாலை 5 மணிக்கு சபரிமலை ஐயப்பன் கோயில் நடை பூஜைக்காக திறக்கப்படும். 17 ஆம் தேதி காலையில் இருந்து பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். 17 தேதி முதல் டிசம்பர் 27 ஆம் தேதி வரை அதாவது 41 நாட்கள் மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்டிருக்கும். 27 ஆம் தேதி மாலை நடை அடைக்கப்படும்.
மீண்டும் டிசம்பர் மாதம் 30 ஆம் தேதி மாலை மீண்டும் மகர விளக்கு பூஜைக்காக நடை திறக்கப்படும். டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி முதல் அடுத்த ஆண்டு ஜனவரி 15 ஆம் தேதி மகர விளக்கு பூஜைகள் நடைபெறும். அன்று மாலை 6.30 மணிக்கு மகர ஜோதி தரிசனம் செய்யப்படும். தொடர்ந்து ஜனவரி 19 ஆம் தேதி வரை பூஜைகள் நடைபெறும். ஜனவரி 20 ஆம் தேதி காலையில் பந்தளம் ராஜ குடும்ப பிரதிநிதி தரிசனத்திற்கு பின்னர் கோயில் நடை அடைக்கப்படும். அன்றுடன் நடப்பு ஆண்டு மண்டல மகரவிளக்கு சீசன் நிறைவுபெறும்.
முன்பதிவு அவசியம்:
ஐயப்பனை தரிசனம் செய்ய இணையதம் மூலமாக பக்தர்கள் முன்பதிவு செய்ய வேண்டும். பக்தர்கள் என்ற இணையதளம் மூலம் தரிசனத்திற்கான முன்பதிவை மேற்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, ஆன்லைனில் முன்பதிவு செய்யாத பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கும் வகையில், நிலக்கல் மற்றும் பம்பையில் உடனடி முன்பதிவு செய்யும் வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தேவசம்போர்டு தரப்பின் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பலத்த போலீஸ் பாதுகாப்பு:
மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் தங்கள் வாகனங்களை நிலக்கல்லில் நிறுத்த வேண்டும். இங்கிருந்து கேரள அரசு பேருந்தில் பம்பை வரை செல்ல வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மண்டல, மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. சன்னிதானம், பம்பை, நிலக்கல் ஆகிய பகுதிகளில் பாதுகாப்பு பணியில் சுமார் 7,500 போலீசார் பணியில் ஈடுபட்டுள்ளனர்.