சபரிமலை ஐயப்ப பக்தர்கள்: பாதுகாப்பு, வசதிகள் & கட்டுப்பாடுகள்! தேனி, இடுக்கி ஆட்சியர்கள் ஆலோசனை!
ஐயப்ப பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்வது குறித்து தேக்கடியில் தேனி, இடுக்கி மாவட்ட ஆட்சியர்கள் தலைமையிலான இரு மாநில அதிகாரிகள் ஆலோசனைக்கூட்டம் நடந்தது.
சபரிமலையில் மண்டல கால வழிபாடு தொடங்க உள்ள நிலையில், ஐயப்ப பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக பக்தர்கள் தாங்கள் வரும் வாகனங்களை அதீதமாக அலங்கரிக்கவோ, கூடுதல் விளக்குகளை பொருத்தவோ கூடாது என்று பத்தினம் திட்டா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆர்.ஆனந்த் தெரிவித்துள்ளார். சபரிமலை ஐயப்பன் கோயிலில் வரும் நவ.16-ம் தேதி மாலை நடை திறக்கப்பட்டு நவ.17-ம் தேதி முதல் மண்டல கால வழிபாடுகள் தொடங்க உள்ளன.
லட்சக்கணக்கான பக்தர்கள் வருவதால் இவர்களின் பாதுகாப்பு, தரிசனம் மற்றும் உரிய வசதிகளை செய்து தருவதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கான பல்வேறு விதிமுறைகளை திருவிதாங்கூர் தேவசம் போர்டு தெரிவித்துள்ளது. தரிசனத்துக்கு முன்பதிவு அவசியம். அதில் குறிப்பிட்ட நேரத்தை கட்டாயம் கடைபிடித்தே ஆக வேண்டும். அப்போதுதான் நெரிசல் தவிர்க்கப்படும்.
சபரிமலையில் மண்டல கால பூஜைக்காக பல்வேறு பகுதிகளிலிருந்து ஐயப்ப பக்தர்கள் அதிகமாக வருவர். இந்த நிலையில், அவர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்வது குறித்த ஆலோசனை கூட்டம் தேக்கடி பாம்பு குரூவ் கூட்ட அரங்கில் தேனி மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத் சிங், இடுக்கி மாவட்ட ஆட்சியர் தினேஷன் தலைமையில் நடந்தது.
ஐயப்ப பக்தர்களின் வாகனங்களை ஓட்டி வரும் ஓட்டுனர்கள் தொடர்ச்சியாக ஓட்டாமல் அவ்வப்போது ஓய்வெடுத்துச் செல்ல வேண்டும். தரிசனத்திற்கு செல்லும் பக்தர்கள் இணையதளம் மூலம் முன்பதிவு செய்து அனுமதி பெற்றிருக்க வேண்டும். மாநில எல்லையில் பசுமை சோதனைச் சாவடிகள் அமைத்து பக்தர்களுக்கு விழிப்புணர்வு வழங்குவதுடன் பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு செல்ல அனுமதிக்க கூடாது.
கூடலுார் அருகே குருவனத்துப் பாலம், இரைச்சல் பாலம் அருகே பக்தர்களை குளிக்க அனுமதிக்க கூடாது. அப்பகுதிகளில் நகராட்சி சார்பில் குடிநீர் வசதி, நடமாடும் கழிப்பறைகள் அமைக்க வேண்டும். ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் நிறுத்தப் பட வேண்டும். பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் ஒருங்கிணைந்து செயலாற்ற வேண்டும். வாடகை வாகனங்களில் கூடுதல் பக்தர்கள் பயணிக்கக் கூடாது. குமுளி பேருந்து நிலையத்தில் பேருந்துகள் வரும் நேர அட்டவணையை காட்சிப் படுத்த வேண்டும். பக்தர்களின் வாகனங்களில் வாகன எண் மறைக்கும் வகையில் பூமாலைகளை போடக்கூடாது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த ஆலோசனைக்கூட்டத்தில் இடுக்கி எஸ்.பி. சாபு மாத்யூ, கோட்டாட்சியர் அனுப் கார்க், உத்தமபாளையம் கூடுதல் எஸ்.பி. கலை கதிரவன், ஆர்.டி.ஓ., செய்யது முகமது, வட்டாரப் போக்குவரத்து அலுவலர் மாணிக்கம், டி.எஸ்.பி. வெங்கடேசன், கூடலுார் நகராட்சி கமிஷனர் முத்துலட்சுமி, உத்தமபாளையம் தாசில்தார் கண்ணன் மற்றும் கேரள தரப்பு அதிகாரிகள் உடன் இருந்தனர்.
ஆகவே விதிமுறை முறையாக பின்பற்ற வேண்டும். பக்தர்கள் அடுத்தடுத்து இந்த இடத்தை பயன்படுத்த உள்ளதால் ஒவ்வொரு பக்தரும் சுத்தம், சுகாதாரம் ஆகியவற்றை முறையாக கடைபிடிக்க வேண்டும். குறிப்பிட்ட நேரம் ஓய்வு எடுத்த பிறகே வாகனங்களை இயக்க வேண்டும். வாகனங்களின் பதிவு எண்ணை மறைத்து எந்தவித அலங்காரமோ, கூடுதல் முகப்பு விளக்குகளையோ பயன்படுத்தக் கூடாது என அறிவுருத்தப்பட்டுள்ளது.





















