Putin On Modi: இந்திய மக்களுக்காக வாழ்க்கையையே அர்ப்பணித்தவர் மோடி - புகழ்ந்து தள்ளிய புதின்
Putin On Modi: இந்தியா மற்றும் ரஷ்ய தலைவர்கள் இடையேயான உச்சி மாநாடு இன்று மாஸ்கோவில் நடைபெறுகிறது.
Putin On Modi: இந்திய மக்களுக்காக தனது வாழ்க்கையையே பிரதமர் மோடி அர்ப்பணித்துள்ளதாக, ரஷ்ய அதிபர் புத்ன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
மாஸ்கோவில் பிரதமர் மோடி:
ரஷ்யா மற்றும் இந்தியா இடையேயான உச்சி மாநாடு ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுவது வழக்கம். இந்த சந்திப்புகளின் போது இருநாட்டு உறவுகளை மேம்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்படும். அந்த வகையில் இன்று நடைபெறும் உச்சி மாநாட்டில் பங்கேற்க, இரண்டு நாள் பயணமாக பிரதமர் மோடி நேற்று ரஷ்ய தலைநகர் மாஸ்கோ சென்றடைந்தவார். அவருக்கு அரசு தரப்பில் விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
புதின் அளித்த விருந்து:
நோவோ-ஒகரேவோவில் உள்ள புதினின் அதிகாரபூர்வ இல்லத்திற்குச் சென்றார். அங்கு சிவப்பு கம்பள வரவேற்புடன் மோடிக்கு, ரஷ்ய அதிபர் சிறப்பு விருந்து அளித்தார். மேலும், தனது இல்லத்தையும் சுற்றி காட்டினார். இதுதொடர்பான வீடியோக்களும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.
#WATCH | Moscow: Prime Minister Narendra Modi meets Russian President Vladimir Putin at President's house. pic.twitter.com/Chj5WAIGa5
— ANI (@ANI) July 8, 2024
வாழ்க்கையை அர்ப்பணித்த மோடி - புதின்
இந்த சந்திப்பின்போது பேசிய புதின், “மீண்டும் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு நான் உங்களை வாழ்த்த விரும்புகிறேன். இது தற்செயல் நிகழ்வு அல்ல, பல ஆண்டுகளாக அரசாங்கத்தின் தலைவராக நீங்கள் பணியாற்றியதன் விளைவு. உங்கள் சொந்த யோசனைகள் உங்களிடம் உள்ளன. நீங்கள் மிகவும் ஆற்றல் மிக்க நபர், இந்தியா மற்றும் இந்திய மக்களின் நலன்களில் முடிவுகளை எவ்வாறு அடைவது என்பது உங்களுக்குத் தெரியும். இதன் விளைவாக இந்தியா பொருளாதார அளவின் அடிப்படையில், நம்பிக்கையுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. உங்கள் முழு வாழ்க்கையையும் உங்கள் நாட்டு மக்களுக்காக அர்ப்பணித்துள்ளீர்கள், குடிமக்கள் அதை அறிவார்கள்” என்று பாராட்டினார்.
நன்றி சொன்ன மோடி:
புதினின் வாழ்த்துகளுக்கு நன்றி தெரிவித்த பிரதமர் மோடி, "சீர்திருத்தங்களைக் கொண்டு வருவதே எனது கொள்கை. எனது நாட்டு மக்கள் எனது கொள்கைகளில் முத்திரை பதித்துள்ளனர். எனது மூன்றாவது பதவிக்காலத்தில் மேலும் மூன்று முறை கடினமாக உழைக்க நான் உறுதியாக உள்ளேன்" என்று கூறினார்.
நிகழ்ச்சி நிரல்:
பிரதமர் மோடியின் முதல் நாள் பயணம் முடிந்த நிலையில், இன்று பல்வேறு முக்கிய நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார். அதன்படி,
- காலை 09:00 – 09:45 மணியளவில் பிரதமர் மோடி, மாஸ்கோவில் உள்ள இந்திய சமூகத்தினரிடம் உரையாற்றுகிறார்
- 10:00 மணியளவில் ரஷ்யாவின் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில், கிரெம்ளினில் உள்ள கல்லறையில் மோடி அஞ்சலி செலுத்துகிறார்
- 11:00 மணியளவில் கண்காட்சி மையத்தில் உள்ள கண்காட்சி VDNH கண்காட்சி மையத்தை மோடி பார்வையிடுவார்
- பிற்பகல் மணியளவில் பிரதமர் மோடி, அதிபர் புதினுடன் விரிவான பேச்சுவார்த்தை நடத்துவார். அதில் இருநாடுகளின் ஒத்துழைப்பு, பாதுகாப்பு உறவுகள், பொருளாதார கூட்டாண்மை மற்றும் பரஸ்பர அக்கறை கொண்ட பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்னைகள் ஆகியவை இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- பிற்பகல் மணியளவில் இருநாட்டு தலைவர்களின் சந்திப்பை தொடர்ந்து, பிரதமர் மோடி ஒரு விளக்கக் கூட்டத்தில் பங்கேற்பார். அதில் இந்தியாவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான எதிர்கால ஒத்துழைப்புக்கான பாடத்திட்டத்தை பட்டியலிடுவதுடன் ரஷ்ய பயணத்தை பிரதமர் மோடி முடிக்கிறார்.
ரஷ்ய பயணமும், மோடியும்:
மூன்றாவது முறையாக பிரதமராக பொறுப்பேற்ற பிறகு, மோடி மேற்கொள்ளும் முதல் இருதரப்பு பயணம் இதுவாகும். பிப்ரவரி 2022 இல் மாஸ்கோ ஒரு ராணுவத் தாக்குதலைத் தொடங்கி அதன் அண்டை நாடான உக்ரைனை ஆக்கிரமித்ததிலிருந்து ரஷ்யாவிற்கு அவர் மேற்கொண்ட முதல் பயணம் இதுவாகும். முன்னதாக கடந்த 2019ம் ஆண்டு ரஷ்யாவின் தூர கிழக்கு நகரமான விளாடிவோஸ்டாக்கில் பொருளாதார மாநாட்டில் கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.