இந்தியாவுக்கு குடைச்சல் தந்து வரும் சீக்கிய பிரிவினைவாதி தலைவரான குர்பத்வந்த் சிங் பன்னூனை அமெரிக்காவில் வைத்து கொல்ல திட்டமிடப்பட்டதாகவும் அந்த முயற்சியை அமெரிக்கா தடுத்து நிறுத்தியதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
சீக்கிய பிரிவினைவாதி கொலை சதி விவகாரம்:
டெல்லியில் பணிபுரியும் இந்திய அரசாங்கத்தின் அதிகாரி ஒருவர்தான் இந்த சதி திட்டத்தை தீட்டியதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டி வருகிறது. பயங்கரவாத செயல்களுக்காக இந்தியாவால் தேடப்பட்டு வருபவர் பன்னூன். அமெரிக்கா, கனடா என இரண்டு நாடுகளிலும் குடியுரிமை வைத்திருக்கிறார்.
பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் கீழ், சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் கீழ், இந்திய உள்துறை அமைச்சகத்தால் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த விவகாரத்தில் ரஷியா பரபரப்பு தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
பன்னூன் கொலை சதி விவகாரத்தில் இந்திய அதிகாரிகள் ஈடுபட்டதற்கான ஆதாரத்தை அமெரிக்கா வெளியிடவில்லை என்றும் இந்திய நாட்டின் உள்விவகாரங்களிலும் நடந்து வரும் மக்களவை தேர்தலிலும் அமெரிக்கா தலையிடுவதாகவும் ரஷியா குற்றஞ்சாட்டியுள்ளது.
அமெரிக்கா மீது ரஷியா பரபரப்பு குற்றச்சாட்டு:
இதுகுறித்து ரஷிய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் மரியா ஜகரோவா பேசுகையில், "எங்களுக்கு கிடைத்த தகவல்களின்படி, பன்னூன் கொலைக்கான முயற்சியில் இந்தியர்கள் ஈடுபட்டதற்கான நம்பகமான ஆதாரங்களை அமெரிக்கா இன்னும் வழங்கவில்லை. ஆதாரம் இல்லாத நிலையில் இந்த விவகாரத்தில் ஊகங்களை ஏற்றுக்கொள்ள முடியாது" என்றார்.
அமெரிக்காவுக்கு இந்தியாவின் தேசிய மனநிலை மற்றும் வரலாறு பற்றிய புரிதல் இல்லை என்றும் இந்தியாவில் மத சுதந்திரம் பற்றி ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை தொடர்ந்து முன்வைத்து வருவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
இதுதொடர்பாக மேலும் விரிவாக பேசிய ரஷிய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர், "இந்தியாவுக்கு எதிராக உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டுகளை அமெரிக்கா தொடர்ந்து முன்வைத்து வருகிறது.
இந்தியா மட்டும் இன்றி பல்வேறு நாடுகளுக்கு எதிராகவும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருவதை பார்க்கிறோம். இந்திய தேசம் எப்படி வளர்ந்தது தேசமாக இந்தியாவை அவமதிப்பது, அதன் தேச மனநிலையை தவறாக புரிந்து கொண்டிருப்பதன் விளைவாகவே மத சுதந்திரம் மீறப்பட்டிருப்பதாக குற்றஞ்சாட்டுகிறது" என்றார்.
இந்தியாவில் நடக்கும் மக்களவை தேர்தலை சிக்கலாக்க அங்குள்ள உள்நாட்டு அரசியல் சூழலை குழப்ப இப்படி செய்வதாக அவர் கூறினார். "இந்தியாவின் உள்விவகாரங்களில் தலையிடுவதன் ஒரு பகுதியாக இப்படி செய்யப்படுகிறது. உள்நாட்டு, சர்வதேச விவகாரங்களில் அமெரிக்காவை விட அடக்குமுறை செய்த ஆட்சியை கற்பனை செய்வது கடினம்" என்றும் ரஷிய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் வைத்து பன்னூனை கொல்ல சதி திட்டம் தீட்டியதற்கும் ரா அதிகாரிக்கும் (இந்திய உளவுத்துறை) தொடர்பு இருப்பதாக தி வாஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டிருந்தது. இதை இந்தியா மறுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.