நுபுர் ஷர்மா மட்டுமல்ல; பாஜகவும்தான் காரணம்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு
நாட்டில் கிளம்பியுள்ள வெறுப்பு, கோப அலைகளுக்கு நூபுர் ஷர்மா என்ற ஒரு தனிநபர் மட்டுமல்ல தேசத்தை ஆளும் கட்சியும் காரணம் என்று வயநாடு எம்.பி. ராகுல்காந்தி கூறியுள்ளார்.
நாட்டில் கிளம்பியுள்ள வெறுப்பு, கோப அலைகளுக்கு நூபுர் ஷர்மா என்ற ஒரு தனிநபர் மட்டுமல்ல தேசத்தை ஆளும் கட்சியும் காரணம் என்று வயநாடு எம்.பி. ராகுல்காந்தி கூறியுள்ளார்.
முன்னதாக, நபிகள் நாயகம் குறித்த தனது வெறுப்புப் பேச்சு காரணமாக, அரபு நாடுகளின் கோபமும், இந்தியாவில் பல்வேறு இடங்களில் போராட்டங்களும் உருவாக காரணமாக இருந்த பாஜக தலைவர் நுபுர் ஷர்மா ஒட்டுமொத்த நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. மேலும், தற்போது இந்தியாவில் நிலவி வரும் பிரச்னைகளுக்கு நுபுர் ஷர்மாவே முழுப் பொறுப்பு ஏற்க வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் கேரள மாநிலம் வயநாடு சென்றுள்ள ராகுல் காந்தி, தன் தொகுதி மக்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது அவர், உச்ச நீதிமன்றம் நுபுர் ஷர்மாவையும் அவரது வழக்கறிஞரையும் கடிந்து கொண்டுள்ளது. ஆனால், நாட்டில் நிலவும் இந்த அசாதாரண சூழலுக்கு ஒரு தனி நபர் மட்டும் காரணமல்ல. ஆளுங்கட்சியும் காரணம். பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஆர்.எஸ்.எஸ்., பாரதிய ஜனதா கட்சி என அனைத்தும் சேர்ந்தே இதற்குக் காரணம். கோபமும், வெறுப்பும் மிகுந்த இந்தச் சூழலை எல்லோரும் சேர்ந்தே உருவாக்கியுள்ளனர். இந்தச் சூழல் தேசத்தின் நலனுக்கு எதிரானது, நமது மக்களுக்கு எதிரானது என்று ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
வெளுத்துவாங்கிய நீதிபதி:
முன்னதாக, உச்ச நீதிமன்ற நீதிபதி சூர்யா காந்த், `தொலைக்காட்சி விவாதத்தில் அவர் பேசியதைக் கண்டோம். இத்தனை அவதூறுகளைப் பேசிவிட்டு, பின்னர் தானும் வழக்கறிஞர் தான் என அவர் கூறியிருப்பது அவமானகரமானது. அவர் மொத்த நாட்டு மக்களிடமும் மன்னிப்பு கோர வேண்டும்’ எனக் கூறியுள்ளார். தன் மீது பதியப்பட்ட வழக்குகள் அனைத்தையும் டெல்லிக்கு மாற்றக் கோரி நுபுர் ஷர்மா தாக்கல் செய்திருந்த மனு மீது உச்ச நீதிமன்ற விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், நுபுர் ஷர்மாவுக்குக் கொலை மிரட்டல்கள் வருவதாகவும், அவர் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் அவரது வழக்கறிஞர் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
அப்போது உச்ச நீதிமன்ற நீதிபதி சூர்யா காந்த், `நுபுர் ஷர்மாவுக்கு அச்சுறுத்தல்கள் வருகின்றனவா அல்லது அவரே பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக மாறிவிட்டாரா? நாடு முழுவதும் மக்களின் உணர்வுகளை அவர் தூண்டியிருக்கும் விதம் காரணமாக, அவரே நாட்டில் தற்போது நடைபெற்று வரும் பிரச்னைகளுக்குப் பொறுப்பு’ எனக் கூறினார்.
உச்ச நீதிமன்றத்தின் கருத்தை சுட்டிக்காட்டியே ராகுல்காந்தி ஆளும் பாஜக மீது குற்றஞ்சாட்டியுள்ளார்.
வயநாடு தாக்குதலுக்கு கண்டனம்:
தொடர்ந்து பேசிய ராகுல்காந்தி, வயநாட்டில் தனது கட்சி அலுவலகத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சேதப்படுத்தியதற்கும் நன்றி தெரிவித்தார். எனது அலுவலகம் என்பது வயநாடு தொகுதி மக்களின் சொத்து. அதன் மீதான தாக்குதல் அவமானகரமானது. சிறுபிள்ளைத்தனமானது என்று கூறினார்.
ஜூன் 24 அன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (எஸ்எஃப்ஐ) மாணவர் பிரிவினர் பேரணியாகச் சென்று ராகுல்காந்தி அலுவலகத்தை தாக்கினர். வயநாட்டில் காடுகளைச் சுற்றிலும் பாதுகாப்பு மண்டலத்தை ஏற்படுத்து ராகுல்காந்தி தவறிவிட்டதாகக் கூறி அவர்கள் தாக்குதலில் ஈடுபட்டனர்.