"இது ரொம்ப சென்சிடிவான விஷயம்" சாதிவாரி கணக்கெடுப்பு விவகாரம்.. பேக் அடிக்கும் ஆர்எஸ்எஸ்?
பொதுநல திட்டங்களுக்காக சாதிவாரி கணக்கெடுப்பு பயனுள்ளதாக இருக்கும் ஆனால், தேர்தல் ஆதாயங்களுக்காக அதை பயன்படுத்தக் கூடாது என ஆர்.எஸ்.எஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.
சாதிவாரி கணக்கெடுப்பு விவகாரத்தை காங்கிரஸ் அங்கம் வகிக்கும் இந்தியா கூட்டணி முக்கிய பிரச்னையாக கையில் எடுத்துள்ளது. நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் கூட, இந்த பிரச்னைக்கு காங்கிரஸ் அதிக முக்கியத்துவம் அளித்திருந்தது.
அதில், கணிசமான இடங்களில் வென்றதற்கு சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து காங்கிரஸ் மேற்கொண்ட பிரச்சாரமே காரணம் என சொல்லப்படுகிறது. ஆட்சிக்கு வந்தால் தேசிய அளவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என காங்கிரஸ் வாக்குறுதி அளித்து வருகிறது.
இந்த நிலையில், சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து பாஜகவின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ் கருத்து தெரிவித்துள்ளது. பொதுநல திட்டங்களுக்காக சாதிவாரி கணக்கெடுப்பு பயனுள்ளதாக இருக்கும் ஆனால், தேர்தல் ஆதாயங்களுக்காக அதை பயன்படுத்தக் கூடாது என எச்சரித்துள்ளது.
கேரளம் மாநிலம் பாலக்காட்டில் நடந்த மூன்று நாள் மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைமை செய்தித் தொடர்பாளர் சுனில் அம்பேகர், "சாதிவாரி கணக்கெடுப்பு என்பது மிகவும் உணர்வுப்பூர்வமான பிரச்சினை.
அது நமது தேசிய ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டிற்கு முக்கியமானது. இது மிகவும் தீவிரமாக கவனமாக வேண்டும். சில சமயங்களில், அரசாங்கத்திற்கு தரவுகள் தேவைப்படுகின்றன. கடந்த காலங்களில் இதேபோன்ற [பயிற்சிகள்] மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ஆனால், [சாதிக் கணக்கெடுப்பு] சமூகங்கள் மற்றும் சாதிகளின் நலனைப் பற்றி பேசுவதாக மட்டுமே இருக்க வேண்டும். அதை அரசியல் கருவியாகவோ, தேர்தல் பிரச்சாரத்துக்காகவோ பயன்படுத்தக் கூடாது" என தெரிவித்துள்ளார்.
இதற்கு பதிலடி தந்துள்ள காங்கிரஸ், "சாதிவாரி கணக்கெடுப்பை ஆர்.எஸ்.எஸ் வெளிப்படையாக எதிர்த்துள்ளது. சாதிவாரி கணக்கெடுப்பு, சமுதாயத்திற்கு நல்லதல்ல என்று ஆர்.எஸ்.எஸ் சொல்கிறது.
பாஜகவும் ஆர்எஸ்எஸ்ஸும் சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்த விரும்பவில்லை என்பது இந்த கருத்திலிருந்து தெளிவாகிறது. தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு அவர்களின் உரிமைகளை வழங்க அவர்கள் விரும்பவில்லை" என தெரிவித்துள்ளது.
சாதிவாரிக் கணக்கெடுப்பு பற்றி சமீபத்தில் பேசியிருந்த ராகுல் காந்தி, "மிஸ் இந்தியாவாக வந்தோரின் பட்டியலை நான் பார்த்தேன். அதில், ஒரு தலித்தோ ஆதிவாசியோ (பழங்குடியினர்) அல்லது ஓபிசியோ (இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்) கூட இல்லை.
சிலர் கிரிக்கெட் பற்றியும் பாலிவுட் பற்றியும் பேசுகிறார்கள். ஆனால், செருப்பு தைக்கும் தொழிலாளியையோ, பிளம்பரையோ யாரும் காட்டுவதில்லை. ஊடகங்களில் முன்னணி தொகுப்பாளர்கள் கூட 90 சதவீத மக்கள் தொகையில் இருந்து வருவதில்லை. 90 சதவிகித மக்களின் பங்களிப்பு இல்லாமல் இந்தியா சிறப்பாகச் செயல்பட முடியாது" என்றார்.